பிரதமர் மோடி உரை!

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவிருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி

கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் இருக்கும் நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. பண்டிகைக் காலம் அல்லது கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி பேசலாம் என்று கூறப்பட்டது.

Also Read: `நாட்டு மக்களிடம் ஒரு தகவலுடன் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறேன்!’- பிரதமர் மோடி #NowAtVikatan

கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

ஊரடங்கு காலத்தில் ஏழாவது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “ஊரடங்கு காலம் முடிந்து வீட்டைவிட்டு வெளியே வரத் தொடங்கியிருக்கிறோம். பொருளாதாரம் படிப்படியாக பழையநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் முற்றிலுமாகப் போய்விடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். பண்டிகைக் காலத்தில் சந்தையில் புதிய தெளிவு பிறக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனா விவகாரத்தில் கடந்த 7-8 மாதங்களில் ஒவ்வோர் இந்தியனின் ஒருங்கிணைந்த முயற்சியால் நமது நிலை தற்போது மேம்பட்டிருக்கிறது. அதை நாம் கெடுத்துவிடக் கூடாது.

பிரதமர் மோடி

கொரோனா இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிக மிகக் குறைவு. கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் 2,000 பரிசோதனை மையங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைவதைக் கண்டு பலரும் முகக்கவசம் அணியாமல் அலட்சியாக இருப்பதைக் காண்கிறோம். கொரோனா தொற்று இனி இல்லை என அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது’’ என்றார்.

அலட்சியமாக இருக்கும் நேரம் இதுவல்ல..!

அவர் கூறுகையில், “அமெரிக்காவோ அல்லது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், திடீரென அந்த நாடுகளில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நமது பொறுப்புகளை நிறைவேற்ற நம்மில் பெரும்பாலானோர் வீடுகளைவிட்டு வெளியே வரத் தொடங்கியிருக்கிறோம். இந்தப் பண்டிகைக் காலத்தில் சந்தைகளும் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. தடுப்பூசி கிடைக்கும் வரையில் கொரோனாவுக்கு எதிரான போர் பலவீனமாகிவிடக் கூடாது.

கொரோனா

அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் உங்களை மட்டுமல்ல, மூத்தோர், குழந்தைகள் என உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளுகிறீர்கள். மனிதகுலத்தைக் காக்கும் இந்தப் போரின் செயல்பாடுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தெரியவரும். நமது விஞ்ஞானிகள், தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கின்றன.

Also Read: `தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறதா?!’ – உண்மை நிலவரம் என்ன?

நம் நாட்டில் 10 லட்சம் பேரில் 5,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரம், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25,000 என்ற அளவில் இருக்கிறது. அதேபோல், இறப்பு எண்ணிக்கை இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 83 பேர் என்ற அளவில் இருக்கையில், அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600 ஆக இருக்கிறது.

முகக்கவசம் எதுவுமின்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் மக்கள் இருப்பது போன்ற பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சமீபத்தில் நாம் பார்த்தோம். இது சரியல்ல. கடுமையான காலங்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். சிறு தவறும் நமது இயக்கத்தை நிறுத்திவிடும். நமது மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே நமது மகிழ்ச்சி நீடிக்கும். பண்டிகைக் காலங்களில் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பிரதமர் மோடி

இதுவரை 10 கோடிக்கும் மேல் பரிசோதனைகள் செய்திருக்கிறோம். 2,000 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. நாடு முழுவதும் 90 லட்சம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 12,000 தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்பட்டுவருகின்றன. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் சுயநலன்பாராமல் தொடர்ந்து உழைத்துவருகின்றனர். நாம் அலட்சியமாக இருக்கும் நேரம் இதுவல்ல. தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வந்தாலும், அது ஒவ்வோர் இந்தியனையும் சென்றடைவதை உறுதி செய்ய இந்த அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.