புதுச்சேரியில் `நம்மில் ஒரு தலைவன்’ என்ற அறக்கட்டளை தொடக்க விழா காமராஜர் வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை பங்கேற்று தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விவசாயம், மாணவர்களை மையமாக வைத்து நல்ல தலைவர்களை உருவாக்கி அதன் மூலம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். புதிது புதிதாக இளைஞர்கள் சமூகத்தில் வந்து தன்னார்வலர்களாக சுயநலமின்றி சில பணிகளை செய்யும்போதுதான் சமூதாயம் முன்னோக்கி செல்லும்.

பா.ஜ.க அண்ணாமலை

அனைத்து இடங்களிலும் மாற்றம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்பதை மேம்போக்காக சொல்லிவிட்டு போய்விடுகிறோம். ஆனால், அதனை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்கும்போது மாற்றங்கள் நிரந்தரமாக இருக்கும். விவசாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், விவசாயத்தை ஊக்குவித்து, அதனை உண்மையாகவே லாபகரமான தொழிலாக மாற்றுவதுதான் நல்ல மாற்றமாக இருக்கும். கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அடிப்படையில் இருந்து மாற்றங்களை ஆரம்பிக்கும்போது மாணவர்கள் தலைவர்களாக மாறுகின்றனர். அந்த தலைவர்கள் சமுதாயத்தினுள் வரும்போது சுயநலமில்லாமல் சேவையாற்றுவார்கள். அரசியல் என்பது மாற்றத்தில் ஒரு பங்குதான். ஆனால் அது மட்டுமே நம்முடைய வாழ்வை தீர்மானிப்பது இல்லை.

அதனை தவிர்த்து நம்முடைய வாழ்விலும் அத்தியாவசியமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெற வேண்டும். சுயநலமில்லாத தலைவர்கள் உருவாக வேண்டும். தொலைநோக்கு சிந்தனையோடு நாட்டின் முன்னேற்ற பாதைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். புதுச்சேரியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. புதுச்சேரி மத்திய அரசை நம்பிதான் இருக்கிறது. மாநிலத்தின் வருவாய் குறைவாக இருக்கிறது. அதேசமயம் எல்லா நேரத்திலும் மத்திய அரசை நம்பியிருக்க முடியாது. அதற்காக ’நம்மில் ஒரு தலைவன்’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் `திங்க் புதுச்சேரி’ என்ற குறும்படத்தை தயாரித்து அனைத்துக் கட்சியினருக்கும் கொடுக்க வேண்டும்.

Also Read: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு பயனளிக்குமா?

எனக்கு சிந்தனை அடிப்படையில் பிடித்த கட்சி பா.ஜ.க. அதன் தலைவர்களை எனக்குப் பிடிக்கும். குடும்ப அரசியல் இல்லாமல், சுயமாக உழைத்து சமுதாயத்துக்கு மாற்றத்தை கொடுக்கும் கட்சியாக இருக்கிறது பா.ஜ.க. கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உண்மையாகவே தேவைப்படும் ஒன்று. அதற்காகத்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றமும் அதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆளுநர் அதற்கான அனுமதியை வழங்குவார். பா.ஜ.கவும் அதனை அனைத்து இடங்களிலும் தெளிவுப்படுத்தியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்துவது நடிகை குஷ்புவின் நோக்கம் கிடையாது. தவிர அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்துவிட்டார். அத்துடன் அந்த விஷயம் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.