முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கி 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும், சில மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளரை இன்றே முடிவெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

image

மேலும் வழிகாட்டுக் குழு அமைப்பதற்குப் பதிலாக கட்சியை நிர்வகிக்கக் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. செயற்குழுக் கூட்டம் தொடங்கிய உடனே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதில் ஐந்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் முதல்வரை பாராட்டி இடம்பெற்றுள்ளன. இவை எதைக் காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ள பத்திரிகையாளர் துரைக் கர்ணா மற்றும் ஏ.என்.ஐ மணி ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

துரை கர்ணா கூறும்போது “ கடந்த 2017-ஆம் ஆண்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோரின் அணிகள் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் கட்சியை நிர்வகிப்பர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

image

கட்சியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து நடத்தி வரும் நிலையில், ஆட்சியும் இருவரும் இணைந்த நிர்வாகத்தின் கீழ் இடம்பெறும் என ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பு இல்லை. ஈபிஎஸ்ஸை பொருத்தவரை கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தன்னுடைய தகுதியையும், திறமையையும் அவர் நிரூபித்து விட்டார்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்த மேடையாக இருந்தாலும் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வலப்புறம் அமர்வார். ஆனால் அந்த அணுகு முறை கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லை. அதனால் ஈபிஎஸ்-ஸின் செல்வாக்கு அதிகரித்தது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் அவரிடம் பயிற்சி பெற்ற தலைவர்கள் பலர், எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர்.

image

ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனக்கான வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி பழனிசாமியே அடுத்ததாகவும் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதே அவர் ஆதரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் சில மாதங்களே முதல்வராக பதவி வகித்தார். அதனால் அவரது ஆதரவாளர்கள் அவர் முதல்வராக வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

இது தொடர்பான விவாதமே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இது தொடர்பான எந்த முடிவுகளும் தற்போதைக்கு எடுக்கப்படமாட்டாது. அடுத்து வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் இது தொடர்பான விவாதம் பொதுக் குழுவில் இடம் பெறலாம். இதையெல்லாம் தாண்டி ஜனவரி மாதத்திற்கு பிறகு கூட்டணி தொடர்பாகவும், கட்சிக்கு ஒற்றைத் தலைமையா அல்லது இரட்டைத் தலைமையா என்பது தொடர்பாகவும், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் நிர்வாகக் குழு, உயர்மட்டக் குழு, பொதுக்குழு முடிவு செய்யும்.

image

பத்திரிகையாளர் ஏ.என்.ஐ மணி கூறும் போது “ செயற்குழுக் கூட்டம் இவ்வளவு நேரம் நடைபெற்றது என்றால் விவாதம் காரசாரமாக நடந்திருக்கிறது என்று தான் அர்த்தம். முதல்வரை பாராட்டி 5-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது கட்சி ஒற்றைத்தலைமைக்கு கீழ் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் காலங்களில், முதல்வரை பாராட்டி ஐந்து தீர்மானங்கள் இடம்பெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பலமில்லாத முதல்வர் என நினைக்கக் கூடிய முதல்வர் எடப்பாடியை பாராட்டி ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, ஓபிஎஸ் பூஜ்ஜிய ஓபிஎஸ் ஆக மாறி இருக்கிறார் என்பதையும், கட்சி முழுமையாக எடப்பாடியார் தலைமையின் கீழ் வந்து விட்டது என்பதையும் காட்டுகிறது” என்றார். 

– கல்யாணி பாண்டியன் 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.