தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சுமத்திவிட்டு, அ.தி.மு.க-வை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நபர் ஆணையத்தை அமர்த்திய பிறகு மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டார். அப்படி, செப்டம்பர் 27, 2017-ல் ஆறுமுகசாமி ஆணையம் உருவாக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன.

ஆறுமுகசாமி

இதுவரை எட்டுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில், 154 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த 54 மருத்துவர்கள், ஐந்து எய்ம்ஸ் மருத்துவர்கள், தமிழக அரசின் 12 மருத்துவர்கள், 22 மருத்துவப் பணியாளர்களை விசாரித்து அவர்களது பதில்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் போக, 59 வேறு சில சாட்சிகளும் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வெடி கொளுத்திப் போட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

Also Read: தஞ்சாவூர்: பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கு… சசிகலா அண்ணனுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன?

ஆணையத்தின் விசாரணை, தங்களை டார்கெட் செய்வதாகக் கூறி விசாரணைக்கு தடை கோரியது அப்போலோ மருத்துவமனை தரப்பு. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து 21 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்குழு மூலம் விசாரணை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. அந்தக் கோரிக்கையை ஏப்ரல் 4, 2019-ல் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தவுடன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அப்போலோ தரப்பு. இந்த மேல்முறையீட்டில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து ஏப்ரல் 26, 2019-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த விசாரணையும் நடத்தாமல் ஆறுமுகசாமி ஆணையம் கிடப்பில் இருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை

செப்டம்பர் 24-ம் தேதி நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சஞ்சீவ் கன்னா அமர்வில் அப்போலோவின் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஆறுமுகசாமி ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 4.26 லட்ச ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால், கடந்த ஒன்றரை வருடமாக ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் விரயமாகிறது. தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்த அப்போலோ மருத்துவமனை, ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளிவரும் சமயத்தில் விசாரணையை தாமதப்படுத்தும் யுக்தியைக் கையாள ஆரம்பித்துவிட்டது. ஆகவே, மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் விரயமாவதைக் கருத்தில்கொண்டு, விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளிக்கும்படி அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: அப்போலோ வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை விலக்கக் கோரி ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசும் அதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. `ஒன்றரை வருடத்துக்குப் பிறகு, திடீரென இந்த விவகாரத்தை வேகப்படுத்தியிருப்பதன் மர்மம் என்ன?’ என அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தோம். “எல்லாம் சசிகலா பயம்தான்’’ என்றபடி பேச ஆரம்பித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

“ஜனவரி 27, 2020-ம் தேதியுடன் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை முடிவடைகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட பத்து கோடி ரூபாய் அபராதத்தையும் செலுத்துவதற்கு அவர் தரப்பில் தயாராகிவிட்டனர். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தால், தேர்தல் நேரத்தில் கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் கண்டிப்பாக சலசலப்பு ஏற்படும். கட்சியை அவர் கைப்பற்றிக் கொள்வாரா, மாட்டாரா என்பதே பேசுபொருளாக இருக்கும். இதை உடைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையத்தைக் கையிலெடுக்க முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி.

Also Read: கருணாநிதி பாணி அரசியலை கையிலெடுக்கும் எடப்பாடி?

ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்புக்கு எதிராக ஒரே ஒரு பாயின்ட் கிடைத்துவிட்டால் போதும்… அதைவைத்தே, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாதான் காரணம் எனப் பரப்பிவிடுவது, இந்த பிரசாரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தடையாணை பெற்று வருவதற்குள் முடிந்தவரை அவர் பெயரை டேமேஜ் செய்துவிடுவதுதான் எடப்பாடியின் திட்டம். இதற்குத் தடையாக இருக்கும் அப்போலோவின் தடையாணையை உடைப்பதற்கு உண்டான வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை” என்றனர்.

சசிகலா

அ.தி.மு.க-வின் முதுகெலும்பே பெண்கள் வாக்குகள்தான். அந்தப் பெண் வாக்காளர்களிடம் சசிகலாவுக்கு அனுதாபம் ஏற்படக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.