ஆகஸ்ட் 6-ம் தேதி மூணாறு பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய  66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், சண்முகநாதனின் 22 வயது மகன் தினேஷ்குமார் உட்பட நான்கு பேரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

image

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட  நிலச்சரிவில் 70 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் மீட்புக் குழுவால் இதுவரை  66 பேரின்  சடலங்களை மட்டுமே  மீட்டெடுக்க முடிந்துள்ளது, பல நவீன உபகரணங்கள் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் நான்கு பேரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  

மூணாறு நிலச்சரிவில் பலியான தனது இளைய மகன் நிதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரால் இன்னும் தனது  மூத்த மகன் தினேஷ்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் தனது மகனின் உடலை மாலை வரை தேடுகிறார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இதுதான் அவரது அன்றாட வழக்கமாக உள்ளது.  “ஜனவரி 2021 வரை என் மகனைத் தேடுவேன். ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த 41 வது நாளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை நான் நடத்தவில்லை. என் மகனைக் கண்டுபிடிக்காமல் நான் எப்படி சடங்கை நடத்த முடியும்? அவரது உடலை மீட்காமல் என்னால் தூங்க முடியாது ” என்று சண்முகநாதன் கூறுகிறார்.

image

மராயூரில் உள்ள கேரள கிராம வங்கியில் காசாளராக இருக்கும் சண்முகநாதன், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் ஒரு மகள் உட்பட அவர்களது மூன்று குழந்தைகளுடன் மூணாறில் உள்ள எம்.ஜி காலனியில் வசித்து வருகிறார். அவரது மகன்களான தினேஷ்குமார் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பெட்டிமுடிக்கு சென்று சண்முகநாதனின் சகோதரர் அனந்தா சிவாமின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். இவர்கள் பெட்டிமுடியில் உள்ள பதுமூரி  தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வரி வீடுகளில் வசிப்பவர்கள்.  சண்முகநாதனின் மகன்கள் பெட்டிமுடிக்குச் செல்லும் போதெல்லாம், குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்து திரும்புவார்கள், ஆனால் இந்த முறை அவர்களால் திரும்ப முடியவில்லை.

தினேஷ்குமார் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கோட்டயம் மாவட்டத்தின் பாலாவில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவராக இருந்தவர் நிதிஷ்குமார். கடினமான தேடலுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7 அன்று, நிதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. “நிலச்சரிவில் மொத்தம் 22 குடும்ப உறுப்பினர்களை இழந்தேன். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை இன்னும் காணவில்லை. தினேஷ்குமார் தவிர கஸ்தூரி (26), பிரியதர்ஷினி (7) ஆகியோரின் சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்கிறார் சண்முகநாதன்.

தேவிகுளம் துணை கலெக்டர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் கூறுகையில் “ இறந்தவர்களின் உடலை தேடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து  முயற்சிகளையும் செய்து வருகிறது.  சண்முகநாதனின் வேண்டுகோளின்படி மாவட்ட நிர்வாகம்  பல்வேறு  உதவிகளை வழங்கி வருகிறது, ஆனால் எங்களால்  இதுவரை உடலை  மீட்டெடுக்க முடியவில்லை” என்று கூறினார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.