பாம்பே சினிமாவான பாலிவுட்டில் இதுவரை எழுப்பப்படாத கேள்விகளையும், பேசப்படாத விவாதங்களையும் துவக்கி வைத்திருக்கிறது சுஷாந்த் சிங் தற்கொலை.

வாரிசு நடிகர்களின் படங்கள், அவற்றின் விளம்பரங்கள், டிரெய்லர்கள் வரை அனைத்தையும் எதிர்க்கிறார்கள் ரசிகர்கள். ஒரு படத்திற்கான நியாயமான ரேட்டிங்காக இல்லாமல், கண்மூடித்தனமாக டிஸ்லைக்குகளும் குறைவான ரேட்டிங்குகளும் குவிகின்றன. ஆனால், இதை ஒரு படத்தின் மீதான விமர்சனப் பார்வையாக இல்லாமல் அரசியல் பார்வையாக, சமுதாயத்தின் எதிர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும்.

Sadak 2

அலியா பட், சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர் நடிப்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி ஓடிடி ரிலிஸாக வெளியாகியிருக்கிறது இந்திப் படமான ‘சடக் 2’. ஆம், ட்ரெய்லரில் டிஸ்லைக்குகளை அள்ளி, உலகிலேயே அதிகமான டிஸ்லைக்குகள் பெற்ற இரண்டாவது வீடியோ என்ற சாதனையைச் செய்த படம்தான். படத்தை இயக்கியிருப்பது அலியா பட்டின் அப்பாவும் பழம்பெரும் இயக்குநருமான மகேஷ் பட். தயாரித்திருப்பவர் மகேஷ் பட்டின் சகோதரரான முகேஷ் பட். இப்படியான கூட்டணிகள் பாலிவுட்டுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்போதைய காலகட்டத்தில் இதுவே பெரிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் ஒன்றாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி ஒரு படமாக ‘சடக் 2’ எப்படி?

இயக்குநர் மகேஷ் பட்டின் கிளாசிக்குகளில் ஒன்றான ‘சடக்’ படத்தின் இரண்டாம் பாகம் என்ற விளம்பரத்தாலும் முதல் பாகத்தின் ஹீரோவான சஞ்சய் தத்துடன் இதில் அலியா பட்டும் சேர்ந்துள்ளார் என்ற எதிர்பார்ப்பாலும் பட அறிவிப்பு வெளியானது முதலே கவனம் பெறத் தொடங்கியது ‘சடக் 2’.

இந்தப் பழைய ‘சடக்’ படத்தைத்தான் 2000-ம் ஆண்டு இயக்குநர் வசந்த், பிரசாந்த், தேவயானி மற்றும் பிரகாஷ்ராஜை வைத்து ‘அப்பு’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

Sadak 2

மனைவியை விபத்தில் பறிகொடுத்துவிட்ட டிராவல்ஸ் கம்பெனி முதலாளியான ரவி கிஷோர் (சஞ்சய் தத்), தற்கொலை செய்யும் எண்ணத்துடன் திரிகிறார். விதிவசமாக அவரின் கடைசி சவாரியாக வந்து சேர்கிறாள் ஆர்யா (அலியா பட்). பயணத்தில் ஆர்யாவின் காதலனான விஷாலும் (அதித்ய ராய் கபூர்) இணைய, போலி சாமியார், உறவுகளின் துரோகம், காதல், சென்டிமென்ட் எனப் பல திசைகளில் பயணிக்கிறது கதை. மரணத்தைத் துரத்தும் ரவி கிஷோர், அந்த மரணமே துரத்தும் ஆர்யாவைக் காக்கிறானா என்பதே ஒன்லைன்.

முதல் பாகத்தில் சஞ்சய் தத் ஏற்ற கதாபாத்திரத்தின் நீட்சியாகவே இந்தப் படத்தின் பாத்திரமும் தெரிந்தாலும், ஓவர் ஆக்ட்டிங்கும் செயற்கை அழுகையும் அப்பட்டமாகத் தெரிகின்றன. தளர்ந்த உடல்மொழி கைகொடுத்தாலும், சண்டைக் காட்சிகளில்கூட அப்படியே இருப்பது செயற்கைத்தனம். கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் கிளிசரினை சானிட்டைஸர்போல சஞ்சய் தத்துக்குக் கொடுத்துவிட்டார்கள் போல! படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கிறார். போதாக்குறைக்கு வில்லனை டெம்ப்ட் செய்கிறேன் என உடல் ஊனத்தைக் கேலி பேசும் வசனம் வேறு!

Sadak 2

அலியா பட்டுக்கு இது சவாலான பாத்திரம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. 21 வயது பெண்ணுக்குரிய கோபமும் ஏதாவது செய்யவேண்டுமெனத் தோன்றும் இயலாமையின் வெளிப்பாடும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கமான அந்தத் துடுக்குத்தன அலியா மிஸ்ஸிங். சீரியஸான ‘ஹைவே’ படத்தில்கூட அவரிடமிருந்து விலகாமலிருந்த அந்தக் குழந்தைத்தனம், இந்தப் படத்தில் காணாமல் போயிருக்கிறது.

Also Read: என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

எதிர்பார்த்த அந்த ஒரு ட்விஸ்ட் முடிந்த பிறகு, அதித்ய ராய் கபூரின் வேலையும் படத்தில் முடிந்துவிடுகிறது. பின்தொடரும் எல்லாக் காட்சிகளிலும் ஓர் ஓரத்தில் வருகிறார், அவ்வளவே! படத்தின் கதையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் ஒரு வரி வசனத்தைக்கூட அந்த முக்கியப் பாத்திரத்துக்குக் கொடுக்காமல் கடைசி ஒரு மணிநேரத்துக்குத் திரையில் சும்மா உலாவ விடுவதெல்லாம் என்ன லாஜிக்கோ! அதிலும், ‘ஆஷிக்கி 2’-வில் கவனம் ஈர்த்த அவரின் நடிப்பு இதில் ஏனோ செல்ஃப் எடுக்கவே சிரமப்படுகிறது. அலியாவின் அப்பாவாக வரும் ஜிஷு சென்குப்தாவும், போலிச் சாமியாராக வரும் மகரந்த் தேஷ்பாண்டேவும் ஓவர் ஆக்ட்டிங்கில் சஞ்சய் தத்தை ஓரங்கட்டுகிறார்கள். நல்ல கிராஃபில் எடுத்துச் சென்றிருக்க வேண்டிய அலியாவின் சித்தி கதாபாத்திரத்தையும் இறுதியில் ஹிஸ்டரிக்கலாகக் கத்தவிட்டு காலி செய்திருக்கிறார்கள்.

Sadak 2

அசாதாரணமான கதைக் களங்களையும் வித்தியாசமான கதை மாந்தர்களையும் உள்ளடக்கிய கிளாசிக் படங்களைக் கொடுத்த மகேஷ் பட், 1999-க்குப் பிறகு மீண்டும் சினிமா இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், டிவி ஷோக்கள் என லைம்லைட்டில் இருந்தாலும் இது சினிமா இயக்குநராக அவருக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் சற்றே எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு நல்ல திரைப்படத் தொடராகவும் ஃப்ரான்சைஸாகவும் மாறியிருக்கவேண்டிய படத்தை ஒட்டுமொத்தமாக இந்த இரண்டாம் பாகத்தில் காலி செய்திருக்கிறார். நீங்கள் சினிமா இயக்குவதை நிறுத்தி, 20 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டது சாப்… கொஞ்சம் அப்டேட் ஆயிருக்கலாமே! அரதப் பழைய டெம்ப்ளேட், லாஜிக் ஓட்டைகளுடன் திரைக்கதை என 80, 90-களின் மசாலா சினிமாக்களை பார்த்தது போன்றிருக்கிறது.

21 வயது இளம்பெண் ஒரு சாமியாரின் சாம்ராஜ்யத்துக்கே வில்லியாக இருக்கிறாள் என்பதைக்கூட சமூக ஊடகத்தில் அவள் நடத்தும் பிரசாரத்தாலும், பொதுவெளியில் களமாடும் அவள் டீமாலும் என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவளைத் தனிமையான ஓர் இடத்துக்கு வரவைத்து கதையை முடிக்க ‘காதலன்’ எனும் அசைன்மென்ட்டைக் கொடுத்து ஆளை அனுப்புவது எல்லாம் ‘ஹா ஹா’ ரியாக்ஷன் கேட்கும் தமாசுகள். வில்லனின் அடியாட்களிடம் துப்பாக்கியே இருந்தாலும் அடம்பிடித்து கத்தியை மட்டுமே உபயோகிப்பது, ஆந்தையைப் பறக்கவிட்டு அட்டாக் செய்வது, கேக்கில் மயக்க மருந்து கலப்பது என முழுக்க முழுக்க ஏதோ 20 வருடப் பழைய ஸ்க்ரிப்டைத் தூசி தட்டியதுபோலத்தான் தெரிகிறது. கிளைமாக்ஸில் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே போலீஸ் ஓடி வந்திருந்தால் அதையும் உறுதி செய்திருக்கலாம். ஜஸ்ட் மிஸ்!

Also Read: ஶ்ரீதேவி பொண்ணும் குன்ஜன் சக்ஸேனாவும் தடைகளைத்தாண்டி பறந்தார்களா… பறப்பார்களா?! #GunjanSaxena

அத்தனை இசையமைப்பாளர்கள் படத்திலிருந்தும், பாடல்கள் இப்படியான படத்துக்கு ஸ்பீட்பிரேக்கராக மட்டுமே தோன்றுவதால் ஈர்க்க மறுக்கிறது. ஊட்டி, மும்பை, மைசூர், உத்தரகாண்ட் எனப் பல இடங்களில் ஷுட் செய்திருந்தாலும் கேமரா சில இருள் படர்ந்த வீடுகள் மற்றும் ஆள் அரவமில்லாத சாலைகளை மட்டுமே மனத்தில் நிறுத்துகிறது.

ஏற்கனவே கல்ட் கிளாசிக்கான ஒரு கதாபாத்திரம், ஒரு நல்ல ரோடு மூவிக்கான ஒன்லைன் போன்றவை இருந்தும் சரியாகக் காய்களை நகர்த்தாத… எங்குமே கடிவாளம் போட்டுக்கொள்ளாத திரைக்கதை, இந்த ‘சடக் 2’ பயணத்தை அயர்ச்சி அடையச் செய்யும் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது. இதற்கு பிரசாந்த்தின் ‘அப்பு’வையோ, ‘சடக்’ முதல் பாகத்தையோ மீண்டும் பார்த்துவிடலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.