ஹார்லி டேவிட்சன் என்பது வெறும் பைக் அல்ல… சிலருக்கு அது கனவு, சிலருக்கு அது ஒரு உணர்வு, சிலருக்கு அது காதல், சிலருக்கு கடவுள்!

ஹார்லி டேவிட்சன் கனவு கண்டு பல்ஸர்களில் செட்டில் ஆனவர்களாகத்தான் நம்மில் பலரும் இருப்போம். ஹார்லி டேவிட்சன் என்பது ரைடு எக்ஸ்பீரியன்ஸைத் தாண்டி, அது ஒரு கனவு பைக். அப்படிப்பட்ட ஹார்லி டேவிட்சன், ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளதாகச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. பைக் பிரியர்களுக்கு நிச்சயம் இது ஒரு சோகமான செய்திதான்.

அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன், 117 ஆண்டுகள் பழைமையானது. 1903-ம் ஆண்டு, வில்லியம் ஹார்லி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதே ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வைத்திருப்பது என்பது கெளரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. நம் நாட்டுக்கு 2009-ல்தான் டயர் பதித்தது ஹார்லி. இந்திய பைக்கர்கள் ஹார்லி மீது வைத்திருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, ஒரு முடிவெடுத்தது ஹார்லி டேவிட்சன். இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கி, இந்தியாவுக்கென்றே விலை குறைவான பைக்குகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதேசமயம் அமெரிக்காவில் இருந்து பைக்குகள் இறக்குமதி செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டன.

ஸ்ட்ரீட் பைக்குகளுக்கு இந்தியாவில் இருந்த மார்க்கெட்டைக் கணக்கில் கொண்டு, ஸ்ட்ரீட் 750 எனும் பைக்கை 6.25 லட்சம் என்ற ஆன் ரோடு விலையில் களமிறக்கியது. நினைத்தபடியே நல்ல வரவேற்பு. ஹார்லியின் விலை குறைந்த பைக் இதுதான். இதன்பிறகு பல விலை குறைவான (?!) மாடல்களைக் களமிறக்கியது.

Harley Davidson

காலில் இன்ஜின் சூடு படுவது, சர்வீஸ் நெட்வொர்க் பிரச்னைகள், காஸ்ட்லியான ஸ்பேர்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும், ஹார்லி இந்தியாவில் நன்றாகவே காலூன்றியது. ஆனால், இந்தியன் மோட்டார் சைக்கிள், யுஎம், ட்ரையம்ப், பெனெல்லி போன்ற நிறுவனங்களின் வரவால், ஹார்லி கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தது.

2019-ல் ஹார்லியின் விற்பனை கணிசமாகக் குறைந்து, வெறும் 2,676 பைக்குகள் மட்டுமே விற்பனையானது. இது 2018-ல் 3,413 பைக்குகளாக இருந்தது. குறைந்துகொண்டே போன விற்பனையில் இப்போது கொரோனாவும் சேர்ந்துகொள்ள ஹார்லியின் விற்பனை அதலபாதாளத்துக்குப் போய்விட்டது.

கடந்த ஏப்ரல், மே, ஜூன் என 3 மாதங்களிலும் சேர்த்து சுமார் 106 பைக்குகள் மட்டும்தான் விற்பனையாகி இருக்கின்றன. மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால்தான் இந்தியாவில் இருந்து வெளியேறுவது என்கிற திட்டத்தை ஹார்லி டேவிட்சன் முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இந்திய பைக் ரைடர்களுக்கு க்ரூஸர், டூரிங் பைக்குகளின் மீதான ஆர்வம் குறைந்ததும் ஹார்லி டேவிட்சன் விற்பனை கணிசமாகக் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம். ஸ்போர்ட்ஸ் செக்மென்ட்டிலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்றுதான் Bronx மற்றும் Pan America எனும் இரு புதிய ஸ்போர்ட்ஸ் கலந்த டூரிங் பைக்குகளை 2021-ல் களமிறக்கத் திட்டமிட்டிருந்தது ஹார்லி. ஆனால், ஏற்கெனவே விற்பனை நிலைமை அதலபாதாளத்தில் இருக்க, இந்த நேரத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை கொண்டு வருவது சரியான முடிவாக இருக்காது என உணர்ந்திருக்கிறது ஹார்லி டேவிட்சன்.

HarleyDavidson Cruiser Motorcycles

இந்தியாவை விட்டு வெளியேறப்போகும் முதல் படியை, `Rewire’ எனும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப் போகிறதாம் ஹார்லி. அதாவது, எங்கெங்கே ஹார்லிக்கு மார்க்கெட் இருக்கிறதோ, வளர்ச்சி விகிதம் இருக்கிறதோ அங்கே மட்டும் கவனம் செலுத்துவதுதான் அந்தத் திட்டம். இதன்படி ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவில் சுமார் 50 மார்க்கெட்டுகளை டிக் அடித்து வைத்திருக்கிறது ஹார்லி.

எல்லாம் ஓகே… ஹார்லி டேவிட்சன், இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டால், ஏற்கெனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஹார்லியின் உரிமையாளர்களின் நிலைமை? பயப்படவேண்டிய அவசியம் இல்லை. வழக்கம்போல ஆஃப்டர் – சேல்ஸ் சர்வீஸ் தொடரும் என்கிறார்கள்.

அப்ப நீ அமெரிக்காவுக்கேத் திரும்பப் போய்டுவியா ஹார்லி?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.