திண்டுக்கலில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

image

அப்போது, ‘திண்டுக்கல் அருகிலுள்ள பொன்னகரத்தில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருபவர் காளீஸ்வரன். இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு மதுபானக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி திண்டுக்கல் அருகே அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 14.08.19 அன்று இனோவா காரில் வந்த 6 பேர் தங்களை சிபிஐ அதிகாரி எனக்கூறி, காளீஸ்வரன் வீட்டுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

image
இதுத்தொடர்பாக காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாக புகார் அளித்தார். இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த காளீஸ்வரனின் உறவினர் கோபி, மற்றும் அவரது நண்பர்கள் மாலதி, வினோத், ஐயப்பராஜன், முத்துக்குமார், மற்றும் குகன் செட்டி ஆகிய 6பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. காளீஸ்வரன் வீட்டிலிருந்து கொள்ளையடித்த பணத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், உட்பட பல நகரங்களில் ரூ 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கி உள்ளனர்.

மேலும் இவர்களிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகள் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் காளீஸ்வரன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் 15 பவுன் நகை மற்றும் ரூ ஒரு லட்சம் பணம் கொள்ளை போனதாக மட்டுமே புகார் அளித்துள்ளார்.

ஆனால் கொள்ளையர்களிடமிருந்து ரூ 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவற்றிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் காளீஸ்வரனுக்கு கோடிக்கணக்கில் பணம் எப்படி வந்தது என காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்தார்.

பின்னர் இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப் படை பிரிவை சேர்ந்த ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா உடனிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.