அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்ததாக ஹைதராபாத் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராதேஷ் என்ற இளைஞர் ஒருவர், கொரோனா தொற்றுக்குள்ளான தனது பெற்றோரை ஹைதராபாத்தின் சோமாஜிகுடாவில் உள்ள டெக்கான் மருத்துவமனையின் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளிடம் மெத்தனமாகவும், அக்கறையின்மையோடும் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் குறித்து ராதேஷ் ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை, டெக்கான் மருத்துவமனையில் விசாரணை நடத்தியது. அதில், கொரோனா சிகிச்சை பெறுபவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தது, உரிய ரசீது வழங்கப்படாதது, சேவை குறைபாடு இருப்பது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து டெக்கான் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை ரத்து செய்து பொது சுகாதார இயக்குனர் உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM