தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்து இறந்த சம்பவத்தில் வனத்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவரது மகள் வசந்தி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த 72 வயதான விவசாயி அணைக்கரை முத்து, கடந்த ஜூலை 22-ஆம் தேதி வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் உயிரிழந்தார். வனத்துறையினர் தாக்குதலில் அணைக்கரை முத்து உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்த உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி நேற்று அணைக்கரை முத்துவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அணைக்கரை முத்துவின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி கூறியபோது, ”தந்தையின் உடலில் 18 இடங்களில் காயங்கள் உள்ளது என்று நாங்கள் கூறுவது உண்மை. வனத்துறை அதிகாரி நெல்லை நாயகம் உள்ளிட்ட 5 பேரை சஸ்பெண்ட் செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறை மூலம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு ரூ.10 லட்சத்தை விட தந்தையின் உயிர் மேலானதாகும். வனத்துறையினர் அடித்ததில்தான் தந்தை இறந்துள்ளார்’’ என்று கூறினார்.    

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.