(கோப்பு புகைப்படம்)

கொரோனா தடுப்புப் பணிகளில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல்துறையிலும் பலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இச்சூழலில் கொரோனா கால பணி அனுபவம் குறித்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு ஒன்று ‘வைரலாகி’ வருகிறது.

அப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘’சில நாட்களுக்கு முன்பு ஒரு இளம் வழக்கறிஞர் தம்பி காவல் நிலையம் வந்தார். பார்க்கும்போதே அவர் காய்ச்சலில் இருந்தது தென்பட்டது. அவரிடம் கொரோனா தாக்கத்தின் சூழலை எடுத்து சொன்னோம், ஏற்றுக்கொண்டார்.

ஆனால் இன்னும் சிலர் தங்களது அதிகாரத்தை காட்டிட முனைகிற இடமாக காவல் நிலையத்தை கருதுகின்றனர். சரியாக மூன்று தினம் கழிந்து அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அனைவரும் டெஸ்ட் எடுத்தோம்.

மக்களின் குறைகளை இத்தருணத்திலும் ரிஸ்க் எடுத்தே விசாரித்து தீர்த்து வைக்கின்றோம். ஆனாலும் அரசின் உத்தரவினை பின்பற்றாமல் இருக்கின்றனர் சிலர். காவல் நிலையம் முன்பாக ஷாமியானா போடப்பட்டு பாதுகாப்புடன் தான் விசாரிக்கப்படுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு பக்கத்து லிமிட்டில் ஒரு மரணம். பிரேதத்தை வாங்காமல் சாலை மறியல் போராட்டம்; சமூக இடைவெளி, மாஸ்க் இதெல்லாம் அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் தொற்றினை பரிசளித்து சென்றனர்? எத்தனை பேர் தொற்றினைப் பெற்றனர் என்று தெரியவில்லை,

அக்காவல் நிலைய எஸ்.ஐ.யும் சென்று பேசி சமாதானப்படுத்தினார். அவ்வளவு கவனத்துடன் இருந்தும் அவருக்கும் இரு தினங்களுக்கு முன்பு பாஸிட்டிவ். இன்று வரை அப்பகுதியில் இரவு பகல் என்று சுமார் நூறு காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும் அதில் எந்த அளவிற்கு நம்பகமான பாதுகாப்பாக இருக்கும் என தெரியவில்லை.

சம்பந்தப்பட்ட ஊர்காரர்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலும் சிறைச்சாலைகளிலும் நிம்மதியாக இருக்கின்றனர். பாவம் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் தெருக்களில் இரவு பகல் மழை பனி என அனைத்தையும் தாங்கிக்கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்து சுருக்குமடி வலை பிரச்சனையில் இருதரப்பு மீனவர்கள் போராட்டம். வாழ்க்கை போராட்டமா? உயிர் போராட்டமா? எனில் உயிர் போராட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் போராடியதன் விளைவு அக்காவல் நிலையத்தில் சில காவலர்களுக்கு பாஸிட்டிவ். மீனவர்கள் சிலருக்கும் பாஸிட்டிவ்.

சில அற்ப வழக்குகள், சிவில் பிரச்சனைகள் இதெல்லாம் இப்போதைய சூழலில் விசாரிப்பது உகந்தது அல்லதான். ஆனால் சில சூழல்களில் அதுவே பெரிய பிரச்சனை ஆக வாய்ப்புள்ளது என்பதால் மறுக்க முடிவதில்லை. ஆனால் அதையே காரணம் காட்டி சிலரின் தூண்டுதலில் பிரச்சனைகள் உருவாகுகின்ற சூழலை ஏற்பட வைக்கின்றனர். அனைவருக்கும் பணமே இப்போது பிரதானமாக இருக்கிறது.

கிழக்கு, மேற்கு என எங்களது இரண்டு பக்கமும் உள்ள எல்லைக் காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில்,
கோழி அடை காப்பது போல எனது காவலர்களை கடந்த மூன்று மாதங்களாக பாதுகாத்து வருகிறேன். அந்த சிரமங்களை ஒரே ஒருத்தரின் அத்துமீறல் அல்லது கவனக்குறைவால் வீணடிக்க விரும்பவில்லை. அதனால் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

நாமும் வாரம் ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவோம் என்று நினைத்தால், ஒவ்வொரு முறையும், அலுவல் ரீதியாக நம்முடைய தொடர்பு வட்டத்தில், இருந்த ஒருவருக்கு பாஸிட்டிவ் என தகவல் வருவதால் வீட்டினருக்கு தொற்றினை கொண்டு சேர்த்திட வேண்டாம் என எண்ணி வீட்டிற்கு செல்வதே கேள்வி குறியான சூழலில் பணி செய்கிறோம்.

அவ்வப்போது எடுக்கின்ற டெஸ்ட்டில் நெகட்டிவ் வந்தாலும் அடுத்த ஒரிரு தினங்களில், இங்கு பணி தொடர்பு வட்டத்தில் இருக்கின்ற மற்ற சிலருக்கு இத்தொற்று வந்து எனது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

பணிச்சுமையை காட்டிலும் மனச்சுமையில் பணிபுரிவது மிகப்பெரிய ஆபத்து. புரியாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உயர் இடத்தில் இருப்பவர்களும் சூழலைப் புரிந்து கொண்டு சில நடைமுறைகளை தவிர்த்தால் அனைவரும் நலம்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.