ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடர்பான அட்டவணை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் 13 ஆவது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு போட்டிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்தும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM