19 செப்டம்பர், 2007 – டர்பன், தென்னாப்பிரிக்கா : டி20 கிரிக்கெட்டின் முதல் உலகக் கோப்பை தொடருக்கான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தது எல்லோருக்கும் நினைவு இருக்கும். ஆனால் அந்த ஆறு பந்துகளையும் எதிர்முனையில் நின்று வீசி சொல்ல மாளாத சோதனைகளுக்கு ஆளான பவுலர் தான் ஸ்டூவர்ட் பிராட். 

image

அப்போதே அவரது கிரிக்கெட் கெரியர் முடிந்தது என விமர்சகர்கள் கணிக்க அதை தவிடுபொடியாக்கி பல சாதனைகளை படைத்தார் பிராட். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் ஒருவராக இன்று அவர் இணைந்துள்ளார். 

1986-இல் குறைமாத குழந்தையாக இந்த உலகத்திற்கு வேக வேகமாக வந்து லேண்டானவர் பிராட். அவரது முழு பெயர் ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிராட். இதில் ஜான் அவரை காப்பாற்றிய மருத்துவரின் பெயர். பிராடின் அப்பா கிறிஸ் பிராட் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அப்பாவை போலவே மகன் ஸ்டூவர்ட் பிராடுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம். பதினேழு வயது வரை மைதானத்தில் பேட்டும் கையுமாக ஒரு ரவுண்டு வந்த அவரை வேகப்பந்து வீச்சாளராக மாற்றி அமைத்தது அவரது உயரம். ‘உன்னோட ஆறடி உசரத்துக்கு நீ பாஸ்ட் பவுலிங் பண்ணா நல்லா இருக்கும்’ என பிராட் கிரிக்கெட் விளையாடி வந்த கிளப் அணியின் பயிற்சியாளர்கள் சொல்லியுள்ளனர். அதன்படியே தன்னை ஒரு வேகப்பந்து வீச்சாளனாக தகவமைத்துக் கொண்டுள்ளார். அதற்கு முன்னர் வரை கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடி வந்தார் அவர்.

image

கிளப் கிரிக்கெட்டில் இளம் வேகப்பந்து வீச்சாளராக அசத்திய பிராடுக்கு இங்கிலாந்தின் அண்டர் 19 அணியில் இடம் கிடைத்துள்ளது. அதில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் இங்கிலாந்து ‘ஏ’ அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006இல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த சுமார் 25 இளம் வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சி கொடுத்தது. அதில் ஒருவராக பிராட் இணைந்து திறனை மேம்படுத்திக் கொண்டார். 

image

அதன் மூலமாக 2006இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் களம் கண்டார். அதே தொடரில் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். அந்த சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியிருந்தன. அதே நேரத்தில் பிராடும் ஒரு மாற்று வீரராக தான் அப்போதைய இங்கிலாந்து அணியில் பார்க்கப்பட்டார். அப்படியிருந்தவரின் ஆட்டத்தை மாற்றியமைத்தது 2008இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் தான். அதில் இங்கிலாந்து அணியின் லீடிங் விக்கெட் டேக்கராக உருவெடுத்தார். அதோடு பேட்டிங்கிலும் அவரது  ஆட்டம் டெய்ல் எண்டில் கைகொடுத்ததால் அணியில் இருந்து தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். அதன் பிறகு பிராடின் கிரிக்கெட் கிராப் ஏறுமுகம் தான். ஒரு சில ஆட்டங்களில் பார்மை இழந்தாலும் அதை அடுத்த சில போட்டிகளிலேயே மீட்டெடுத்து வரும் அசாத்திய திறன் படைத்தவர். 

image

பிராட் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர். இதனை அவரது பந்தை எதிர்கொண்டு தனது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரே அண்மையில் தெரிவித்திருந்தார். 

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராடும், ஆண்டர்சனும் பவுலிங் பார்ட்னர்ஷிப் போட்டு விக்கெட் வேட்டை வீழ்த்துபவர்களில் கெட்டிக்காரர்கள். அதற்கு ஆஷஸ் உட்பட பல போட்டிகளை உதாரணமாக சொல்லலாம். இதுவரை இங்கிலாந்துக்காக 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராட் 501 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். 

image

இங்கிலாந்து தேர்வு வாரியம் பிராடை தற்போது டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக மட்டுமே பார்த்து வருகிறது. ஜுனியர்களின் வருகை அணிக்குள் இடம் பிடிக்க பிராடுக்கு சிக்கலையும் கொடுத்து வருகிறது. அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவரை இங்கிலாந்து தேர்வு வாரியம் ஆடும் லெவன் அணிக்குள் சேர்க்காமல் பெஞ்சில் உட்கார வைத்தது. இருந்தாலும் அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்ல காரணமாக அமைந்ததோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார். இரண்டு போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் இணைந்தார். 

CONGRATS BROAD…

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.