தெலங்கானாவில் பாலம் உடைந்ததால் ஆற்றினை கடக்க கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கோதகுடம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள ஏரியில் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக குடும்பத்தினர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் நுனாத் மமதா. எட்டுமாத கரப்பிணியாக இருந்தார். அவரை குண்டல மண்டலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்றதால், அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லமுடியாமல் உறவினர்கள் தோளில் சுமந்து சென்றனர். தற்போது அந்தக் கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் நலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் சில நாட்களாக மழை பெய்துவருவதால், பல இடங்களில் ஏரிகள் நிரம்பிவழிகின்றன. மழைநீரால் சாலைகள் தடைப்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குண்டல மண்டலில் மல்லன்னா வாகு ஏரியில் கட்டப்பட்ட பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த சம்பவத்தைப் போன்று அப்பகுதி மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM