கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் கல்வி நிறுவனங்கள், கோவில்களை திறப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதே. அரசியல் பார்வை தவிர்த்து,மனிதநேயப் பார்வையே முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளார்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று (கோவிட் 19) நாளுக்கு நாள் அதிர்ச்சி அடையத் தக்க வகையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது! பாதிக்கப்பட்டவர்கள் தொகை 11 லட்சத்தைக் கடந்துள்ளது; பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரம் ஆகும். நேற்று (20.7.2020) ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என்ற செய்தியும், அதேபோல, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஒன்றே முக்கால் லட்சத்தை எட்டியுள்ளது; உயிரிழப்பு 2,551 ஆக உயர்ந்துள்ளது என்பது மிகவும் வேதனையானது.

image

இதில் ஒரே ஒரு ஆறுதல் செய்தி – நம்பிக்கை ஊட்டக்கூடிய செய்தி – கரோனா தொற்றைத் தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் ரஷ்யாவிலும், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டிலும் முதல் கட்ட வெற்றியைத் தந்துள்ளது என்பதும், அதுபோலவே அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இம்முயற்சிகள் அதிவேகமாக நடைபெற்று விரைவில் வெற்றி கிட்டக் கூடும் என்று தெரிகிறது.

நம் நாட்டிலும் இதற்கான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை நோக்கி பல பல்கலைக் கழகங்கள் – மருத்துவ ஆய்வகங்கள் வெற்றிகரமான வகையில் பலன் அளிக்க, விரைந்து செயல்பட்டு வருகின்றன.

உலகில் மனித அறிவின் ஆற்றல் பலமுறை வெளிப்பட்டு, நோய்களை வீழ்த்தியுள்ள வரலாற்றில், கரோனா தடுப்பு ஒழிப்பு – ஒரு மாபெரும் சவாலாக மருத்துவ ஆய்வாளர்களுக்கு இருப்பினும், அவர்கள் வெற்றி பெறுவது உறுதி. காலத்தைத்தான் அறுதியிட்டுக் கூற முடியாது – ஏனெனில் மூன்று கட்ட பரிசோதனைகளைத் தாண்ட வேண்டியுள்ளது அல்லவா?

மருத்துவ வல்லுநர்கள் முதல் பல்துறை அறிஞர்கள் கூறியதை புறந்தள்ளக் கூடாது!

இந்நிலையில், நமது மத்திய – மாநில ஆட்சியாளர்கள் உலக நாடுகளில் பாதித்த நாடுகளின் பாதிப்பு – நம் நாட்டின் உயிர்ப் பலியோடு ஒப்பிடுகையில், நம்முடைய நாட்டில் குறைவானதுதான் என்று விகிதாச்சார கணக்கைக் காட்டி, தாம் மேற்கொண்ட பல முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குவது ஏனோ?

ஒவ்வொரு உயிரும் முக்கியம் – இழப்புகளை எளிதில் ஏற்பது இயலாத ஒன்று என்ற நிலையில், தன்முனைப்புக்கு இடந்தராது, பல நல்ல ஆய்வுகளை – பல மருத்துவ வல்லுநர்கள் முதல் பல்துறை அறிஞர்கள் கூறியதை புறந்தள்ளாது அனைத்துத் தரப்பினரது கருத்துகளையும் – அதை அரசுகளுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கருதாது; கவலையுற்றவர்களின் ஆர்வம் மிக்க கருத்துகள் என்றே சிந்தித்து உத்திகளை – தேவைப்படும்பொழுது மாற்றிக் கொள்ளவும் தயங்கக்கூடாது!

ஏழை, எளிய, நடுத்தர, விவசாய கிராம மக்கள் நோயினால் சாவதைவிட, பசி, பட்டினியால், வறுமையால் மாண்டுவிடுவோமோ என்று அஞ்சக்கூடிய நிலை அகற்றப்படவேண்டும். இதற்கிடையில் சமூகப் பரவல்களாக இவை ஆகக்கூடாது என்று ஒருபுறத்தில் அரசுகள் கூறிக் கொண்டே தவறான சில நிலைப்பாடுகளை எடுப்பது, மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தராத நிலைக்குத் தள்ளிவிடும்.

அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

எடுத்துக்காட்டாக,

1. மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதோ அல்லது நிலைமை சீராகும்முன் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் திறப்பதோ உயிருடன் விளையாடும் மிகப்பெரிய விபரீத விளையாட்டு ஆகும்!

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்‘ என்ற பழமொழிக்கொப்ப, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உயிர் இருந்தால்தான் படிப்பையே தொடர வாய்ப்பு ஏற்படும். இளம்பிள்ளைகளையும் அத்தொற்று பாதித்துள்ள செய்திகள் வரும் நிலையில், இப்படி மாணவர்களை அலைக்கழிப்பது தேவையா? யாருக்குக் கல்வி – அவர்களுக்குத்தானே – அவர்கள் உடல்நலத்திற்குத்தானே முன்னுரிமை – இந்நிலையில் அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

2. அதுபோல, கோவில்கள் திறப்பதை – மக்கள் கூடும் திருவிழாக்கள் நடத்துவதை முன்பு தடை செய்தது சரியானது. (இதில் ஆத்திகம் – நாத்திகம் இல்லை; மனிதநேயத்தோடு நாம் எழுதுகிறோம்) அதை விலக்குவது தவறான முடிவு என்பதற்கு திருப்பதி கோவில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், அர்ச்சகர்கள் பலர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (அர்ச்சகர் ஒருவர் மாண்டார் என்பதெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் பழைய நிலை (Status Quo) இருந்திருந்தால்).

கொஞ்ச காலத்திற்கு – நிலைமை கட்டுக்குள் முழுமையாக வரும் வரையில் எந்த இடத்திலும் மக்கள் பெருங்கூட்டமாகக் கூட அனுமதிக்கவே கூடாது!

திருமண விழாக்களில் கட்டுப்பாடு, சவ அடக்கம் நிகழ்வுகளில் கட்டுப்பாடு என்று வரும்போது, இப்போது பக்தி என்ற பெயரால், மத விழாக்களுக்கு கட்டுப்பாடற்று கூடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது தேவையா?

சரத்பவாரின் கேள்விக்கு என்ன பதில்?

அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல்பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அவர்கள், ‘‘இந்த கரோனா காலத்தில் இதுதான் முக்கிய பணியா?’’ என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன பதில்?

நம்மைப் போன்றவர்கள் கேட்டிருந்தால், உடனே அதற்கு வேறு வியாக்கியானங்கள் சொல்லியிருப்பார்கள்.
எப்பகுதி – வடநாடு – தென்னாடு ஆனாலும் மக்களின் உயிர் – மனித உயிர்களின் மதிப்பு முக்கியம்தானே!

இந்நேரத்தில் அரசியல் பார்வை தவிர்க்கப்பட்டு, மனிதநேயமே முன்னுரிமையும், முதலிடமும் பெறவேண்டியது அவசர அவசியம்!
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை – இழப்பீடுகளால் நிரப்ப முடியாத முக்கியமானவையாகும் என்பது நினைவிருக்கட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.