image

 

கந்தசஷ்டி கவசம் பிரச்சனையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது கைதுக்கு ஆதரவும், கருத்துரிமை ஒடுக்கப்படுவதாக எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், ’அதிமுக அரசு கொரோனா சர்ச்சைகளை திசைதிருப்பவே கைது செய்திருக்கிறது’ என்ற விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இதுகுறித்த, பல்வேறு கேள்விகளை அமைச்சர் ஜெயக்குமாரிடம் முவைத்து பேசினோம்…    

‘கறுப்பர்கூட்டம்’ யூடியூப் சேனலில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு கருத்துரிமை ஒடுக்கப்படுவதாக அதிமுக அரசின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?

இந்து மதம் என்றில்லை. எல்லா மதங்களுமே மதிக்கப்படவேண்டும். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அனைவரும் சகோதரர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம். மதத்தின் பெயரில் பிரிவினையையோ வன்முறையையோ ஏற்படுத்துவதை அனுமதிக்கவே முடியாது. புரட்சித் தலைவரும், அம்மாவும் எப்போதும் எல்லா மதங்களையும் மதிக்கவேண்டும் என்பதையே எங்களுக்கு போதித்துள்ளார்கள். அதனையே, பின்பற்றி யாருடைய மன உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது என்பதில் உறுதியை கடைபிடிக்கிறோம். குறிப்பிட்ட ஒரு மதத்தையோ கடவுளையோ இழிவுப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அமைதிக்கு யார் பங்கம் விளைவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எங்களின் கொள்கை. ஆனால், திமுக தொடர்ச்சியாக கடவுளை திட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் கட்சியாக உள்ளது. அவர்களின் பழைய வரலாறு அப்படி. ஏற்கனவே, மு.க ஸ்டாலின் இந்துக்களின் திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு இடத்தில் இந்து மதத்தை குறை சொல்வதும் மற்றொரு இடத்தில் இஸ்லாமியரை குறை சொல்வதும் கூடாது. திமுக தொடர்ச்சியாக குறிப்பிட்ட மத மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தி வருவதால்தான், நாங்கள் உண்மையை சொல்லவேண்டியிருக்கிறது. திமுகவின்  போக்கே ஆரம்ப காலத்திலிருந்து மதங்களையும் கடவுளையும் இழிவுப்படுத்துவதுதான்.

 

image

’தேர்தலுக்காக திமுக இந்து  ஆதரவாளர்போல் காட்டுகிறது’ என்று அமைச்சர்கள் கூறுகிறார்களே? ’தேர்தலுக்காக திமுகவின் மீது இத்தகைய பழியை சுமத்துகிறது’ என்பது அதிமுகவுக்கும் பொருந்துமல்லவா?

எங்களைப் பொறுத்தவரை யார்மீதும் பழியைப் போடவேண்டிய அவசியம் கிடையாது. திமுகவைப் பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக வன்முறைக் கட்சி. நாட்டு மக்களுக்கே தெரிந்த உண்மை இது. புரட்சித் தலைவரின் கொள்கைளும் லட்சியங்களும் அம்மாவின் சாதனைகளுமே எங்களுக்குப் பெரிய அங்கீகாரம். அதுவே, வரும் தேர்தலில்  வெற்றியைக் கொடுக்கும்.

கொரோனா பரவலை திசைதிருப்பத்தான் அதிமுக அரசும் கந்தசஷ்டி சர்ச்சையையும் கையில் எடுத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறதே?

அதற்கும் இதற்கும் முடிச்சுப்போடவேண்டாம். அதுவேறு; இதுவேறு. கொரோனாவைப் பொறுத்தவரை அரசு சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

உலகிலேயே கொரோனா அதிகம் பாதித்த நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழும்போது தமிழக அரசு ஏன் சமூக பரவலை ஒப்புக்கொள்ள மறுக்கிறது? ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளாரே?

தமிழகத்தில் எங்கு கொத்துக் கொத்தாக கேஸ் பதிவாகியுள்ளது? கொரோனாவின் சங்கிலித்தொடரை தொடர விடாமல் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில், சமூக பரவல் இருந்தால்தானே சொல்ல முடியும்? கேரளாவில் சமூக பரவல் இருக்கவேதான் அம்மாநில முதல்வர் கூறியிருக்கிறார்.  

image

 

தமிழகத்திலேயே உங்கள் தொகுதியான ராயபுரம் மட்டும் ஏன் அதிக கொரோனா எண்ணிக்கையை கொண்டுள்ளது?

ராயபுரத்தில் மக்கள் அதிக நெருக்கமாக வாழும் பகுதி. மிகவும் பழமையான பகுதியும்கூட. அதனால், ஆரம்பக்கட்டத்தில் அதிகரித்தது. ஆனால், இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். முன்பு 100 பாஸிட்டிவ் கேஸ்களுக்கு மேல் வந்தன. இப்போது ஐந்தாறுதான் வருகிறது. கொரோனா டெஸ்ட்டை முன்பைவிட அதிகப்படுத்தியுள்ளோம். ஒரே நாளில் 13,000 டெஸ்ட் செய்துள்ளோம். இதுவரை 10 லட்சம் பேருக்குமேல் டெஸ்ட் செய்து 70 ஆயிரம் பேருக்கு கன்பாஃர்ம் செய்துள்ளோம்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.