‘லேடி ஷேவாக்’ என இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவை கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பது வழக்கம். அதற்கு காரணம் ஸ்மிரிதி பேட்டோடு மைதானத்தில் இறங்கினாலே பந்தை பவுண்டரிகளுக்கு பறக்க விடுவது தான். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனரான அவருக்கு இன்று பிறந்த நாள். 

image

24 வயதான அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் முழுவதும் கிரிக்கெட் வீரர்கள் தான். அப்பா ஸ்ரீனிவாஸ், அண்ணன் ஷ்ரவண் என இருவருமே மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்திற்காக கிரிக்கெட் விளையாடியவர்கள். அதை பார்த்து வளர்ந்த ஸ்மிரிதிக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்துள்ளது. கிரிக்கெட் பேட்டின் துணையோடு தான் அவர் நடக்கவே பழகினார்.  

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் நிறைய இருந்தாலும் ஸ்மிரிதி பயிற்சி எடுத்தது தெரு கிரிக்கெட்டில் தான். 

image

நாளடைவில் கைதேர்ந்த பேட்ஸ்வுமனாக ஸ்மிரிதி கிரிக்கெட்டில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். ஒன்பது வயதில் மஹாராஷ்ட்ரா அண்டர்-15 அணிக்காகவும், பதினோரு வயதில் அண்டர்-19 அணிக்காகவும் விளையாடினார். 

உள்ளூர் போட்டிகளிலும் கலக்கிய அவரது ஆட்டத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் பதினாறு வயதினில் (2013) இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கியது. இருந்தாலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றி அமைத்தது அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் தொடரில் அவர் ஆடிய ஒரு இன்னிங்ஸ் தான். அந்த தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிராவுக்காக 150 பந்துகளில் 224 ரன்களை ஸ்மிரிதி ஸ்கோர் செய்திருந்தார்.  

image

ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், இங்கிலாந்தின்  கிரிக்கெட் சூப்பர் லீக் என டி20 தொடர்களில் விளையாடிய அனுபவம் கைகொடுக்க சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிரடியாக விளையாட அவருக்கு பெரிதும் உதவியது. 

2016இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிரிதி அடித்த சதம் இந்திய அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. பின்னர் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தவர் 2017 மகளிர் உலக கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்தார். ஒன்பது போட்டிகள் விளையாடிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்கோர் செய்த சதம் இந்தியாவை இறுதி போட்டி வரை அந்த தொடரில் முன்னேற செய்தது. 

அதுவரை பூப்பாதையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த ஸ்மிரிதி சிங்கப்பாதையில் விளையாட தொடங்கினார். 2018இல் 12 ஒருநாள் போட்டிகளில் 669 ரன்கள். அந்த ஆண்டு ஐ.சி.சி ‘ரஷேல் ஹெயோஹே – பிளிண்ட்’ விருதை ஸ்மிரி திக்கு கொடுத்து கவுரவித்தது. 2019லும் ரன் வேட்டையை தொடர்ந்தார்.

இந்திய அணிக்காக ஒருநாள் அரங்கில் 51 போட்டிகளில் 2025 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43.08. நான்கு சதம், 17 அரைசதம் இதில் அடங்கும். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் பேட்ஸ்வுமன்களில் ஸ்மிரிதி நான்காவது இடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் ஸ்மிரிதியின் ஸ்ட்ரைக் ரேட் 117. டி20யில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் அவர் ரன்களை சேர்க்க தவறினாலும் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்வுமனாக அடுத்தடுத்த நாட்களில் பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டின் சிங்கபெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.