ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் எண்ணைக்காரன் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம். சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலையின்றி தவித்து வந்துள்ளனர்.

image

போதிய வருமானம் இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கணவன் மனைவி இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாசம் மனைவி சரஸ்வதியை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

image

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்த தம்பதியினருக்கு பரந்தாமன், திருமலை, ராமகிருஷ்ணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். பெற்றோர் இறந்ததால் அவர்களது மூன்று பிள்ளைகளும் தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 90 வயது தாத்தாதான் (சரஸ்வதியின் அப்பா) தற்போது பிள்ளைகளை பராமரித்து வருகிறார். வயதான தாத்தா தன் பேரப்பிள்ளைகளின் கல்விச்செலவு உள்பட அனைத்து பராமரிப்பு செலவுகளையும் எப்படி கவனிப்பது என தெரியாமல் சோகத்தில் நிற்கிறார்.

image

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் சாதாரண கூலி தொழிலாளி. ஒரு வேளை கஞ்சிக்கு மிகவும் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் என்னால் பிள்ளைகளின் எதிர்கால செலவுகளை செய்வது மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும் தற்போது தங்கள் வசிக்கும் பகுதிகள் கூடிய மக்கள் வழங்கிய அரிசி பருப்புகளை வைத்து உணவு அருந்தி வருகிறோம். எனவே நல்ல உள்ளம் கொண்டோர் பொருளுதவி செய்தால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மூன்று பிள்ளைகளையும் மேல்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.