உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டுத் தொழில் ஐநூறு அறநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பரட்டையன் ஆசாரி என்பவரால் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரிடம் வேலைபார்த்த வேலையாட்களும் பூட்டு தொழிலை தொடர்ந்து செய்து வந்தனர்.
imageimage 
திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நாகல்நகர் நல்லாம்பட்டி வேடப்பட்டி போன்ற பகுதிகளில் இன்றளவும் பூட்டுத் தொழிலை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இப்போதைய கொரோனா காலத்தில் பூட்டுத் தொழில் எப்படி இருக்கிறது என்று திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க செயலர் (பொறுப்பு) கவிதாவிடம் கேட்டோம்.
 
அதற்கு அவர் “திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திண்டுக்கல் பூட்டுகள் இரும்பு மற்றும் பித்தளையை பயன்படுத்தி இயந்திரங்களின் துணையின்றி கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது” என்கிறார்.
imageimage
மேலும் ” மிகவும் நுட்பமாக செய்யப்படும் திண்டுக்கல் பூட்டுக்கு உலக அளவில் மவுசு அதிகம். அதனால் திண்டுக்கல் பூட்டுத் தொழிலை மேம்படுத்துவதற்காக 1958 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 105 பேர் உறுப்பினர்களாக இருந்த இந்த சங்கத்தில் இப்போது வெறும் ஐந்து பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தமாக ஆர்டர் வரும்போது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வேலையை பிரித்து கொடுப்போம். அவ்வாறு நாங்கள் கொடுக்கும் வேலையை வீட்டில் இருந்தபடியே செய்து கொடுக்கிறார்கள்” என்றார்

தொடர்ந்து பேசிய கவிதா ” நாங்கள் செய்யும் மாங்கா பூட்டு பாரம்பரியமானது. இதை மட்டுமே நாங்கள் தொடர்ந்து செய்து வந்தோம். அதன்பிறகு கால மாற்றத்திற்கு ஏற்ப புதிதாக சதுர வடிவிலான பூட்டை செய்து வருகிறோம். அதன்பிறகு அனைத்து வகையான பெட்டி பூட்டுகளை எல்லா அளவுகளிலும் செய்கிறோம். கோவில் உண்டியல் மற்றும் கேஸ் பாக்ஸ் செய்கிறோம். பெரிய குடோன் மற்றும் வங்கிகளுக்குத் தேவையான விலையுயர்ந்த லண்டன் லாக் செய்கிறோம். அதில் முக்கியமாக ரயில்வே லாக் செய்கிறோம். இந்தப் பூட்டு இரண்டு சாவி போட்டு இரண்டு பக்கமாக திறக்கக் கூடியது” என கூறினார்.
imageimage
அவர் ”  லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டுக்கு பூட்டு வாங்கும் போது பூட்டு அழகாக இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்களே தவிர பூட்டு தரமாக இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அலிகார் பூட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் மிகவும் ஆபத்தானது. மெஷின் மூலமாக தயாரிக்கப்படும் அலிகார் பூட்டுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த பூட்டுக்கும் எந்தச் சாவியை போட்டாலும் திறந்துவிடும். ஆனால் திண்டுக்கல் பூட்டுக்கு அப்படி கிடையாது” என்றார்.

இறுதியாக ” அழிந்து வரும் நிலையில் இருந்த இந்த பூட்டு தொழிலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு கொடுத்தபிறகு தொழில் சற்று வளர்ச்சி அடைந்து மொத்த விற்பனையும் சில்லரை விற்பனையும் அதிகரித்திருக்கிறது. அதேபோல ஆர்டர்களும் அதிகஅளவில் இருக்கிறது. ஆனால் வேலையாட்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் ஐ.டி.ஐயில் படித்த மாணவர்களுக்கு பூட்டு செய்யும் தொழிலை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்” என முடித்தார் கவிதா

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.