சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தின் சர்ச்சைக்குக் காரணமானவர்கள் என இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட நான்குபேரை சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். காவலர் முத்துராஜ் மட்டும் தலைமறைவாக இருந்தார். 

காவலர் முத்துராஜ்

முத்துராஜை விளாத்திகுளம் அருகே போலீஸார் கைது செய்து, சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர். அவரிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்’ – கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்நிலையத்தின் உள்ளே நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து பெண் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ள போதிலும், ஆதாரங்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடக்கிறது.

பென்னிக்ஸ், ஜெயராஜ்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவற்றை மீண்டும் எடுக்க வாய்ப்பு இருக்கிறதா எனத் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்குமா என்கிற கோணத்தில் உள்ளூர் வியாபாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களிடம் பேசி வருகின்றனர்.

ஜெயராஜ் வேனில் ஏற்றிச் செல்லப்படும் காட்சி அருகில் உள்ள கடையின் சிசிடிவி-யில் பதிவு செய்யப்பட்டிருந்தது போல மேலும் சில பதிவுகளும் சிபிசிஐடி போலீஸ் வசம் கிடைத்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லும்போதும் நீதிபதியிடம் ஆஜர்படுத்திய இடத்திலும் சில முக்கியப் பதிவுகள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.  

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் அலுவலகம்

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறை நண்பர்கள் எனப்படும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாகக் காவல்துறை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த இருவர் பேசும் ஆடியோவும் வெளியானது. அவர்களிடமும் சிபிசிஐடி போலீஸை சேர்ந்த ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாத்தான்குளம் வழக்கு குறித்து பேசிய வழக்கறிஞர்கள், “இந்த வழக்கை இதே வேகத்தில் நடத்தி விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கமாக நடப்பது போன்று ஆரம்பத்தில் வேகத்தைக் காட்டிவிட்டு, மக்கள் மறந்ததும் கிடப்பில் போட்டுவிடக் கூடாது. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிபிசிஐடி அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுவிடக் கூடாது. நீதிமன்றம் தெரிவித்தது போல, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை மனதில் கொண்டு வேகமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே உயிரிழந்தவர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.