கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவிக்கொண்டே இருந்தாலும் டெக் நிறுவனங்கள் தொடர்ந்து அவற்றின் புதிய கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் ஷாவ்மி நிறுவனம், சமீபத்தில் அதன் ‘Mi Band 5’ சீனச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் ஹிட்டடித்திருக்கும் ஷாவ்மியின் ஃபிட்னஸ், பேண்ட்களின் அடுத்த என்ட்ரிதான் இது.

கடந்த வருடம் ஜூன் 11-ம் தேதி Mi Band 4 அறிமுகமானது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் 1 மில்லியன் ஸ்மார்ட் பேண்ட்கள் விற்றுத் தீர்ந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து, இன்று Mi Band 5 சீனாவில் அறிமுகமாகியுள்ளது. குறைந்த விலையில் அதிக வசதிகள் தருவதில் Mi தொடர்ந்து ஃபிட்னஸ் சந்தையில் நற்பெயரை எடுத்துவருகிறது. தொடர்ந்து, ஷாவ்மியைப் பார்த்து பல நிறுவனங்களும் இந்தச் சந்தையில் கால்தடம் பதித்துவருகின்றன. ஆனால், எதுவும் Mi பேண்ட்கள் அளவுக்கு மக்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வெற்றியை மீண்டும் மெய்ப்பிக்கும் வண்ணம் Mi Band 5-ல் வசதிகள் இருக்கின்றனவா, Mi Band 4-ல் இருக்கும் எவை எல்லாம் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன… விரிவாக அலசுவோம்.

Mi Band 5

Mi Band 4-ஐ விட 20% பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது Mi Band 5. Band 4 போல இதுவும் கலர் AMOLED டிஸ்ப்ளேதான்.

மேலும் மஞ்சள், சிவப்பு என மொத்தம் ஏழு நிற ஸ்ட்ராப்களில் கிடைக்கும் இந்த பேண்ட். அந்த ஸ்ட்ராப் நிறங்களுக்கேற்ப நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை மாற்றிக்கொள்ளலாம். இதை Mi Fit ஆப்பில் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

Mi Band 3 மற்றும் Mi Band 4-களில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள, அதை ஸ்ட்ராப்பில் இருந்து கழற்றி எடுத்து சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், இந்த Mi Band 5-ல் அந்தக் கவலை வேண்டாம். பேண்டின் பின்புறம் Magnetic Charger-ல் சட்டென ஒட்டிக்கொண்டு சார்ஜ் ஏறிவிடும். இதனால் சார்ஜ் ஏற்றுவது சுலபமாகவும், பிரச்னையற்றதாகவும் இருக்கும் என நம்பலாம்.

Mi Band 5

வீட்டில் கொரோனா காரணமாக முடக்கத்தில் இருப்பவர்கள், வீட்டிலேயே மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுக்கு இது உதவி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றது ஷாவ்மி தரப்பு.

Mi Band 4-ல் தூக்கத்தைக் கண்காணித்து, ஆய்வு செய்யும் அதே வசதி இதிலும் உள்ளது. ஆனால், மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், Mi Band 4 இரவு நேர தூக்கத்தை மட்டும் பார்வையிடும். மதியம் போடும் சின்ன தூக்கத்தை எல்லாம் கணக்கில் கொள்ளாது. ஆனால், Mi Band 5-ல் 24 மணிநேரமும் தூக்கத்தைக் கண்காணிக்கும் வசதி உள்ளது.

Band 5-ல் PPG இதயத் துடிப்பு சென்சார் உள்ளது. இது, மற்ற அனைத்து பேண்ட்களைவிடவும் 50 சதவிகிதம் துல்லியமாக இதயத் துடிப்பைக் காட்டுமாம். 24/7 இதயத் துடிப்பை கண்காணிக்கவல்லது இது.

Mi Band 5

இதில், முதன்முதலாக Personal Activity Index (PAI) என்ற ஒரு வசதியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த வசதி மூலம் வயது, பாலினம், இதயத்துடிப்பு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, நாம் என்ன உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும் என இந்த பேண்ட் பரிந்துரைக்கும். மேலும், மூச்சுப் பயிற்சிகள் பரிந்துரைப்பது மற்றும் மன அழுத்தம் இருக்கிறதா எனக் கண்காணிப்பது போன்ற வசதிகளும் இதில் உண்டு.

இந்த முறை, பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் விதமாக சிறப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாதவிடாய் சுழற்சியை நினைவூட்டும் வசதி போன்ற சில இதில் அடங்கும்.

Band 4-ல் 135 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை விட குறைவான திறன்கொண்ட 125 mAh பேட்டரிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், Band 4 போலவே 20 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் இந்த பேட்டரி எனத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி.

Band 4 போலவே 30 நிமிடங்கள் 50 மீட்டர் வரை வாட்டர் ரெஸிஸ்டன்ட் இந்த Mi band 5. NFC வசதியும் உள்ளது. ஆனால், NFC வசதியுள்ள Band 5; சாதாரண Band 5-ஐ விட சற்றே விலை அதிகம். சீனாவில் NFC வசதி மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால், ஷாவ்மியின் முந்தைய ட்ராக் ரெக்கார்ட் வைத்து இந்தியாவில் இந்த NFC எடிஷன் வெளிவராது என உறுதியாகச் சொல்லலாம்.

Mi Band 4 v Mi Band 5

விலையைப் பொறுத்த வரை 189 யுவானுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய்), NFC வசதி கொண்டுள்ள Band5, 229 யுவானுக்கும் ( இந்தியா மதிப்பில் 2500 ரூபாய்) சீனாவில் விற்பனையாகிறது Mi band 5. இந்தியவிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும்.

Also Read: 2,000 ரூபாய் பட்ஜெட்டில் முழுமையான ஃபிட் பேண்ட்… Mi Band 3 எப்படி? #VikatanGadgetReview

கிட்டத்தட்ட அதே விலையில் பல மேம்பட்ட வசதிகளை எடுத்துவருவதால், பட்ஜெட் சாதாரண பிராண்ட்கள் மட்டுமல்லாமல் விலையுயர்ந்த ஃபிட்பிட் போன்ற நிறுவனங்களின் ஃபிட்னஸ் பேண்ட்களுடனும் இந்த Mi Band 5 போட்டிபோடும்.

ஏற்கெனவே, ஃபிட்னஸ் பேண்ட் பயன்படுத்துபவரா நீங்கள்… எந்த பிராண்ட் ஃபிட்னஸ் பேண்ட்களுக்கு பெஸ்ட் என நினைக்கிறீர்கள், Mi band 5 வாங்கும் விருப்பம் இருக்கிறதா… கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.