கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்தன. வழக்கமான சடங்குகள் நடைபெற்றாலும், பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜூன் 8 முதல் வழிபாட்டுத்தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பது குறித்து அரசு அறிவிக்கவில்லை. எனவே கோயில்களைத் திறக்க வேண்டும் என இந்து அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அதே சமயம் கேரள மாநிலத்தில் இன்று முதல் கோயில்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பைப் போன்ற கேரளத்தின் இந்து ஐக்கிய வேதி அமைப்பு கோயில்களைத் திறக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாநில அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், இந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை வரும் 30-ம் தேதிவரை திறக்கமாட்டோம் எனவும் இந்து ஐக்கியவேதி அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் முரளிதரன்

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் நிர்வாகம், கோயிலைத் திறப்பதில்லை என முடிவு செய்துள்ளது. ஆற்றுகால் பகவதி கோயில் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு அனுமதிப்படி ஜூன் 9-ம் தேதி முதல் கோயிலைத் திறக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இப்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு கோயில் திறப்பதை மாற்றி வைத்துள்ளோம். மறு அறிவிப்பு வரும்வரை கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதுபோன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், பழவங்னாடி கணபதி கோயில் உள்ளிட்டவை இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களைத் திறப்பதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரளத்தைச் சேர்ந்த பா.ஜ.க மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில்,“கோயில்களை திறக்க வேண்டும் என்று பக்தர்களோ, கோயில் கமிட்டியினரோ கோரிக்கை வைக்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு பக்தர்களை ஏமாற்ற நினைக்கிறது” என்றார்.

வழிபாட்டுத்தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகே கோயில்கள் திறக்கப்படுகின்றன. அதிலும், கோயிலைத் திறக்க வேண்டும் என இந்து அமைப்புகள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தன. இப்போது மாற்றிக்கூறுவதாகவும் இடதுசாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுவருகிறது.

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதுகுறித்து கூறுகையில்,“கோயில்களைத் திறக்க வேண்டாம் என்ற இந்து ஐக்கிய வேதியின் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். அதேசமயம் இந்த விஷயத்தில் அவர்கள் திடீர் பல்டி அடிக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேவசம் போர்டுக்கு எதிரான இந்து ஐக்கியவேதியின் தீர்மானத்திற்குப் பின்னால் குறுகிய அரசியல் உள்ளது. திட்டமிட்டபடி கோயில்கள் திறக்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.