அரபிக் கடலில் உருவான இந்தப் புயல் வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தின் ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் குஜராத்தின் தெற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மும்பையில் மட்டும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நிசார்கா புயல்

Also Read: `129 ஆண்டுகளுக்குப் பிறகு…’ – மகாராஷ்டிராவில் கரையைக் கடக்கிறது நிசார்கா புயல் #NisargaCyclone

மும்பையை அடுத்த அலிபாக் பகுதியில் மதியம் 12.30 மணியளவில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் மதியம் 2.30 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ என்ற அளவில் இருந்ததாகக் கூறப்பட்டது. மும்பையில் கடுமையான பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் மும்பை தப்பியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மின்கம்பங்கள் சிலவும் புயலால் பாதிக்கப்பட்டன.

மும்பையில் மதியம் முதலே கடும் காற்றுடன் மழைப்பொழிவு இருந்தது. சில பகுதிகளில் வீடுகளின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்துவிழுந்தன. ராய்காட் மாவட்டத்தின் உமாட் கிராமத்தில் புயலின்போது வீடு திரும்பிய ஒருவர் மின்கம்பம் விழுந்ததில் உயிரிழந்தார். அதேபோல், புனே மாவட்டத்தில் புயல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் பகுதியில் கரையைக் கடந்த நிசார்கா புயல், வடகிழக்காக நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாசிக், துலே, நந்தர்பார் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிசார்கா புயல்

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாஹிப் த்ரோட், புயலால் மும்பைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைந்திருக்கிறது. ஆனால், அடுத்த சில மணிநேரங்கள் மிகவும் முக்கியமானவை என்று தெரிவித்தார். மேலும், புனே, நாசிக் மற்றும் அஹமத் நகர் ஆகிய மாவட்ட நிர்வாகங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏறக்குறைய 129 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை நோக்கி வந்த ஜூன் மாத வெப்பமண்டலப் புயல் பாதிப்பில் இருந்து மும்பை குறைந்த அளவு சேதங்களுடன் தப்பியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.