பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ், சமீபத்தில் அதன் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்குப் பல முன்னணி அம்சங்களைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே,

Also Read: விலையில் ஐபோனை முந்தும் ஒன்ப்ளஸ்… 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions

அறிமுகத்துக்குப் பிறகு, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது இந்த ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. காரணம், அதிலிருக்கும் ஒரு கேமரா. `கலர் ஃபில்டர் கேமரா’ என்று ஒன்ப்ளஸ் குறிப்பிடும் இந்த கேமராதான் தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த கேமரா ஒரு குறிப்பிட்ட மோடில் ஒரு பொருளின் வெளிப்புறத்தைத் தாண்டி உள்ளே இருப்பதையும் ஊடுருவி படம்பிடிப்பதாக இந்த கேமராவைப் பயன்படுத்தியவர்கள் கூறியிருக்கின்றனர். `இது எக்ஸ்-ரே விஷன்போல இருக்கிறது’ எனப் பலரும் இதைச் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுவருகின்றனர்.

இந்தப் படங்களில் இந்த கேமரா பொருள்களின் உட்புறத்தையும் படம்பிடிப்பது தெளிவாகத் தெரியும்.

ஊடுருவி படம்பிடிக்கும் ஒன்ப்ளஸ் கேமரா
ஊடுருவி படம்பிடிக்கும் ஒன்ப்ளஸ் கேமரா
ஊடுருவி படம்பிடிக்கும் ஒன்ப்ளஸ் கேமரா
ஊடுருவி படம்பிடிக்கும் ஒன்ப்ளஸ் கேமரா

இது எப்படி சாத்தியம்… ஸ்மார்ட்போன்களில் இதுவரை பார்க்கப்படாத இது என்ன மாதிரியான கேமரா, இது எப்படி வேலை செய்கிறது… இந்தக் கேள்விகளுக்கும் `இது ஆடைகளையும் ஊடுருவி படம் எடுக்குமா?’ என்ற தனியுரிமை சார்ந்து பலரும் முன்வைக்கும் முக்கிய கேள்விக்கும் இந்தக் கட்டுரையில் விடைகள் காணுவோம்!

முதலில் பலரும் குறிப்பிடுவதுபோல இது எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தவில்லை. இது ஒரு இன்ஃப்ராரெட் (Infrared) கேமரா. இன்ஃப்ராரெட், நம் கண்ணுக்குத் தெரியும் ஒளியைவிட அதிக அலைநீளம் (wavelength) கொண்ட ஒளிக்கதிர்கள். இவற்றை நம் கண்களால் பார்க்கமுடியாது. பெரும்பாலான வெப்ப வெளியீடுகள் இன்ஃப்ராரெட் கதிராகத்தான் வெளிப்படும். உதாரணத்துக்கு, சூரியனில் இருந்து வரும் பூமிக்கு வரும் ஆற்றலில் பாதி இன்ஃப்ராரெட் கதிர்களாகத்தான் இங்கு வந்தடைகின்றன.

முன்பு சொன்னதுபோல அதிக அலைநீளம் இருப்பதால், இவை நமது `Visible Spectrum’-ல் இருக்காது, இவற்றை நம் கண்களால் பார்க்கமுடியாது. எனினும், சில சென்ஸார்களால் இவற்றைப் படம்பிடிக்கமுடியும். உலகமெங்கும் பல விதங்களில் இப்படியான இன்ஃப்ராரெட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எனில், நமது வீட்டில் பயன்படுத்தப்படும் ரிமோட்களைச் சொல்லலாம். நமது டிவி, ஏசி ரிமோட்கள் பெரும்பாலும் இன்ஃப்ராரெட் அலைகள் வழிதான் தகவல் அனுப்புகின்றன.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கலர் ஃபில்டர் கேமரா

ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில் இருப்பது இப்படியான இன்ஃப்ராரெட் கேமரா சென்ஸார்தான். இந்த கேமரா சாதாரண ஒளி மட்டுமல்லாமல் இன்ஃப்ராரெட் ஒளியையும் பதிவு செய்யவல்லது. இதனால், இன்ஃப்ராரெட் ஒளி எந்தப் பொருள்களுக்குள் எல்லாம் புக முடியுமோ, அதையெல்லாம் இந்த கேமராவைக் கொண்டு படம்பிடிக்கமுடியும். அதனால்தான் பொருள்களின் உட்புறத்தையெல்லாம் இதனால் படம்பிடிக்க முடிகிறது.

ஒன்ப்ளஸ் கேமரா ஆப்பில் இருக்கும் கலர் ஃபில்டர் மோடில் ‘Photochrom’ ஃபில்டரைத் தேர்வுசெய்யும்போது, இதை உங்களால் பார்க்கமுடியும். போனின் உட்புறம், ரிமோட்டின் உட்புறம் என மெலிதான கறுப்பு பிளாஸ்டிக் வெளிப்புறம் கொண்ட பொருள்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை இதைக் கொண்டு தெளிவாகப் பார்க்க முடிவதாகச் சமூக வலைதளங்களில் பல பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அப்படியான சில பதிவுகளைக் கீழே காணலாம்.

என்னதான் இன்ஃப்ராரெட்டுக்கு சாதாரண ஒளியை விட ஊடுருவும் சக்தி அதிகம் என்றாலும் அது மிகவும் அதிகம் கிடையாது. மேலே குறிப்பிட்ட பொருள்களெல்லாம் ஏற்கெனவே ஓரளவு ஒளிபுகக் கூடிய பொருள்கள்தான். ஆனால், நம் கண்களுக்கு அவை தெளிவாகத் தெரிந்திருக்காது. அதனால் இவற்றில் இன்ஃப்ராரெட் கதிர்கள் எளிதாகப் புகுந்துவிடுகின்றன. அவற்றை இந்த கேமரா படம்பிடித்துவிடுகிறது.

சரி, இந்த கேமரா ஆடைகளுக்குள் ஊடுருவி படம் எடுக்குமா?

பெரும்பாலான நேரங்களில் எடுக்காதுதான். ஆனால், மிகவும் மெல்லிய கறுப்பு நிற ஆடைகளுக்குள் இன்ஃப்ராரெட் கதிர்களால் ஊடுருவ முடியும். இதைப் பிரபல கேட்ஜெட் யூடியூப் பக்கமான ‘Unbox therapy’ அதன் வீடியோ ஒன்றில் எடுத்துக்காட்டியிருக்கிறது.

கறுப்பு டீ-ஷர்ட்டிற்குள் இருக்கும் பெட்டியில் என்ன எழுதியிருக்கிறது என்பதைச் சாதாரண கேமராவில் படம்பிடித்தால் எதுவுமே தெரியவில்லை. ஆனால், இந்த இன்ஃப்ராரெட் கேமராவில் அது பதிவாகிறது.

இதே மாதிரியான சர்ச்சை எழுவது இது முதல்முறையும் அல்ல. ஏற்கெனவே 1994-வில் வெளிவந்த சோனி வீடியோ கேமரா ஒன்றிலும் இதுபோன்ற குழப்பம் ஒன்று எழுந்தது. இரவு நேரங்களில் படம்பிடிப்பதற்காக ‘Infrared Nightscope’ வசதியுடன் வெளிவந்தது இது. இதில் உடைகளை ஊடுருவி பார்க்கக்கூடிய ஒரு பிரச்னை இருக்கிறது என்பதையே சோனி உணரவில்லை. இரவு நேரங்களில் விலங்குகளையும், பறவைகளையும் படம்பிடிக்கவே அந்த வசதி அந்த கேமராவில் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மிகவும் மலிவான இன்னொரு ஃபில்டரை மட்டும் இணைத்தால் சில ஆடைகளை ஊடுருவி அதனால் படம்பிடிக்க முடிந்தது. ஜப்பானின் பிரபல ஆண்கள் பத்திரிகையான ‘Takarajima’ இதை பெண் மாடல்கள் கொண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டது. அதன்பின் இது பெரிய சர்ச்சையாக, அடுத்தடுத்த மாடல்களில் இந்த வசதியில் சில மாற்றங்கள் செய்து வெளியிடத்தொடங்கியது சோனி.

இந்த சோனி கேமராக்கள் என்னதான் உயர்ரக மாடல்களாக இருந்தாலுமே வெகுசில மெல்லிய உடைகளை மட்டுமே அதனால் ஊடுருவிப் படம்பிடிக்க முடிந்தது. அதற்கும் சரியான லைட்டிங் அமைய வேண்டும். இதனால் இதை வைத்து ஒருவரது அந்தரங்கத்தைப் பதிவுசெய்வது என்பதற்கான சாத்தியக்கூறு ஏறத்தாழ இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

ஆடைகளை ஊடுருவி பார்க்கும் ஒன்ப்ளஸ் கேமரா

உயர்ரக கேமராவுக்கே இந்த நிலை என்றால் ஒன்ப்ளஸில் இருப்பதோ வெறும் 5MP சிறிய கேமரா சென்சார். இதில் சாதாரணமாகவே புகைப்படத் தரம் என்பது குறைவாகத்தான் இருக்கும். அதில் இந்த ‘Photochrom’ பில்டரில் புகைப்படத் தெளிவு என்பதும் இன்னும் குறையவே செய்கிறது. இதனால் பயப்படும் அளவுக்கு ஆபத்துகள் எதுவும் இல்லை என்றே இதை ஆராய்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் இந்தச் சர்ச்சையின் காரணமாக இந்த வசதி நீக்கப்படலாம் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் ஒன்ப்ளஸ் போன்று பெரிய நிறுவனங்களாக உருவெடுக்கவேண்டும் என கனவு காணும் நிறுவனங்கள் இதுபோன்ற விஷயங்களில் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. இப்படியான ஒரு விஷயத்தை இந்த கேமராக்களால் செய்யமுடியும் என்று அறிந்தே வைத்தார்களா இல்லை தெரியாமல்தான் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்குத் தெளிவான விடைகள் ஒன்ப்ளஸ் தரப்பிலிருந்து தரப்படவில்லை. மென்பொருள் உதவியில்லாமல் நேரடியாகவே நிறங்கள் மாற்றப்பட்ட புகைப்படங்கள் எடுக்கவே இந்த கேமரா கொடுக்கப்பட்டதாக ஒன்ப்ளஸ் தெரிவித்திருந்தது.

ஒன்ப்ளஸ்

ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சியின் வேகத்தை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. கடும் போட்டி இருப்பதால் `என்ன புதிதாகக் கொடுக்கமுடியும்?’ என்ற முனைப்பில் ஒவ்வொரு நாளும் கூடுதல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். அதனால் இது போன்ற சிறிய விஷயங்களைக் கவனிக்காமல் விட்டுவிடுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் 50x ஜூம் கேமராக்கள் ஸ்மார்ட்போன்களில் கொடுக்க ஆரம்பித்தன நிறுவனங்கள். அதில் இருக்கும் தனியுரிமை சார்ந்த சிக்கல்கள் குறித்து நிறுவனங்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

இந்த விஷயத்தில் ஏற்கெனவே சந்தையில் நிலையாகக் காலூன்றி தனக்கென ஒரு மதிப்பைச் சந்தித்திருக்கும் ஆப்பிள் போன்ற நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.

ஆப்பிள் ஐபோன் X மாடலிலிருந்து அதன் போன்களில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக்கிற்குப் பதிலாக ஃபேஸ் அன்லாக் வசதியை கொடுக்க ஆரம்பித்தது. ஆப்பிளின் இந்த ஃபேசியல் ரெகக்னிஷன் முறை மற்ற நிறுவனங்கள் போன்று மென்பொருளை மட்டும் நம்பியது அல்ல. அதன் TrueDepth கேமரா கிட்டத்தட்ட உங்கள் முகத்தை 3D-யில் ஸ்கேன் செய்யும். இதனால்தான் ஆப்பிளின் ஃபேஸ் அன்லாக் மிகவும் நம்பகத்தன்மையுடையதாக இருக்கிறது. அதை ஏமாற்றுவது கடினம்.

சரி இதை எதற்குச் சொல்கிறேன் என்கிறீர்களா?… இதற்கு ஆப்பிள் பயன்படுத்துவதும் இன்ஃப்ராரெட் சென்ஸார்களைத்தான். அதுவும் இதுபோன்று பொருள்களை ஊடுருவி படம் எடுக்கவல்லது. இதை ட்விட்டரில் Guilherme Rambo என்ற ஆப் வடிவமைப்பாளர் சோதனை செய்து காட்டியிருந்தார். ஆனால், இது ஐபோனில் வெளிப்படையாக இருக்காது. இதற்கு நீங்கள் மொத்தமாக ஐபோனை ‘ஜெயில் பிரேக்’, அதாவது ரூட் செய்யவேண்டும். இப்படிச் செய்தால் ஆப்பிளின் வாரண்ட்டியை நீங்கள் இழப்பீர்கள்.

இப்படி ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் மிகவும் கவனத்துடனே பயன்படுத்துகிறது ஆப்பிள். இதுபோன்ற சிறிய விஷயங்கள்தான் ஆப்பிளை இன்றும் ‘ஆப்பிளாக’ வைத்திருக்கிறது.

ஆப்பிளுடன் போட்டிப்போட நினைக்கும் நிறுவனங்களும் இதைச் செய்யத்தானே வேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.