பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

போக்குவரத்து சிக்னலில் நமது வாகன ஆவணங்களைச் சோதிக்க வேண்டி போலீஸார் நம்மைத் தடுத்து நிறுத்தும்போது, எப்போதோ டேங்க் கவரில் அல்லது டேஷ்போர்டில் வைத்த வாகனத்தின் ஆவணங்களை நாம் அவசரமாகத் தேடுவோம். அதற்குப் பதிலாக நமது அனைத்து விதமான ஒரிஜினல் ஆவணங்களும் நமது செல்போனிலேயே எப்போதும் இருந்து, அவற்றைப் போலீஸாரிடம் நாம் காட்ட முடிந்தால் எப்படி இருக்கும்!

ரயிலில் பயணிக்கும்போது நமது டிக்கெட்டை மட்டுமன்றி, நமது ஒரிஜினல் அடையாள ஆவணத்தையும் செல்போனிலேயே எப்போதும் வைத்திருந்து, அதை டி.டி.ஆரிடம் காட்ட முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

நாம் ஏதேனும் ஒரு வெளியூர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டி நமது அனைத்துவித ஒரிஜினல் சான்றிதழ்களின் டிஜிட்டல் லிங்குகளை நிறுவனத்துக்கு அனுப்பவும்,

அவற்றின் உண்மைத்தன்மையை உடனுக்குடன் அந்த நிறுவனம் சோதிக்கவும் முடிந்தால்

நன்றாக இருக்கும் தானே!

Representational Image

இவை அனைத்தும் நடக்கவே முடியாத செயல்கள் அல்ல. இவற்றை இன்று DigiLocker சாத்தியப்படுத்தியே இருக்கிறது!

காகிதமற்ற நிர்வாகத்தின் முன்மாதிரியாகவும், டிஜிட்டல் இந்தியா செயல்திட்டத்தின் அங்கமாகவும் DigiLocker செயல்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சேவை குடிமக்களின் பல்வேறு டிஜிட்டல் தேவைகளை மிகச் சுலபமாகப் பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது.

DigiLocker என்றால் என்ன:

நம்முடைய அனைத்து விதமான ஒரிஜினல் ஆவணங்களையும் நாம் நமது கைகளில் வைத்துக்கொண்டிருக்காமல், அவற்றை டிஜிட்டல் வடிவில் மொபைல் போனில்/கணினியில் வைத்துக்கொள்ள முடியும்.

இதற்கான தளமே DigiLocker ஆகும்.

வங்கி லாக்கரில் நமது பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பது போல DigiLocker இல் நமது அனைத்து வகை ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக வைக்கலாம்.

தேவைப்படும்போது அவற்றை உரியவர்களிடம் காட்டவும், நாம் விரும்பும் அமைப்புகளுடன் நமது விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

DigiLocker இல் நமக்கென கிளவுட் ஸ்டோரேஜ் அளிக்கப்படுகிறது. நமக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் வழங்கப்பட்ட ஆவணங்களையும் (Issued Documents) நாம் அப்லோட் செய்த நம்முடைய தனிப்பட்ட ஆவணங்களையும் (Uploaded Documents) டிஜிட்டல் வடிவில் DigiLocker இல் நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 9A பிரிவின்படி DigiLocker இல் வழங்கப்படும் அனைத்து வகை ஆவணங்களும் ஒரிஜினல் ஆவணங்களாக இந்தியாவின் அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் துறைகளால் ஏற்கப்படுகின்றன.

Representational Image

என்னென்ன ஆவணங்களை வைத்துக்கொள்ள முடியும்:

ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாகன ஆர்.சி, அனைத்து வகை இன்ஷூரன்ஸ்கள், நம்முடைய மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அமைப்புகளால் வழங்கப்படும் அனைத்து விதமான ஆவணங்களையும் நாம் DigiLocker இல் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை:

கணினியில் பயன்படுத்த DigiLocker வெப்சைட்டில் Sign-up செய்துகொள்ளலாம்.

போனில் பயன்படுத்த பிளே ஸ்டோரில் இருந்து Digilocker App யினை Download செய்து Install செய்ய வேண்டும். பின் Sign-up செய்து நமது ஆதார் எண்ணைப் பதிவு செய்து OTP பெற்றுக்கொள்ள முடியும்.

அடுத்ததாக பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் நமது கணக்கின் இதர விவரங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

அரசு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் வழங்கும் ஆவணங்களில் நமக்குத் தேவையானவற்றை நாம் டிஜிட்டல் வடிவில் பெற்று சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

இவை DigiLocker இன் Issued Documents என்ற பிரிவில் இருக்கும்.

நம்மிடம் உள்ள எந்த ஒரு தனிப்பட்ட ஆவணத்தையும் நாம் புகைப்படம் எடுத்து இதில் பதிவேற்றிக்கொள்ள முடியும். இவை Uploaded Documents என்ற பிரிவில் இருக்கும்.

Issued Documents அனைத்தும் அரசின் அனைத்துத் துறைகளாலும் Original ஆகக் கொள்ளப்படும்.

நாம் சுய பதிவேற்றிய ஆவணங்களை eSign வசதியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையொப்பமிடலாம். இது சுய சான்றளிப்பு செயல்முறைக்கு ஒத்ததாகும்.

Representational Image

DigiLocker இன் நன்மைகள்:

தனிநபர்களுக்கு:

*ஒரிஜினல் ஆவணங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு அலையும் தேவையின்றி, முக்கியமான ஆவணங்கள் எங்கும், எப்போதும் கிடைக்கும் வசதி.

*உண்மையான (Original) ஆவணங்கள், சட்டபூர்வமாக டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் வசதி.

*தனிநபரின் ஒப்புதலுடன் டிஜிட்டல் ஆவண பரிமாற்றம்.

*வேலைவாய்ப்பு, நிதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்துவித சேவைகளையும் விரைவாகப் பெறும் வசதி.

*கோரிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு மின் ஆவணத்துக்கான இணைப்பைப் பகிர்வதன் மூலம் தனிப்பட்ட ஆவணங்களைக் கோரிக்கையாளர்களுடன் தனிநபர்கள் பகிர்ந்து கொள்ளும் வசதி.

நிறுவனங்களுக்கு நன்மைகள்:

*Digilocker காகிதமற்ற ஆளுகை என்ற கருத்தை நோக்கமாகக் கொண்டது. இது காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், சரிபார்ப்பு செயல்முறைகளைக் குறைப்பதன் மூலமும் நிறுவனங்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கிறது.

*ஆவணங்கள் நிகழ்நேரத்தில் (Real Time) நேரடியாக வழங்கக்கூடிய நிறுவனத்திடமிருந்து பெறப்படுகின்றன. எனவே, ஆவணங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது.

*தனிநபரின் ஒப்புதலுடன் நம்பகமான வழங்குநருக்கும், நம்பகமான கோரிக்கையாளர் / சரிபார்ப்பாளருக்கும் இடையிலான கட்டண நுழைவாயில் போன்று பாதுகாப்பான ஆவண பரிமாற்ற தளமாக DigiLocker செயல்படுகிறது.

*பயனரின் சம்மதத்தைப் பெற்றபின், வழங்குநர்களிடமிருந்து தரவை நேரடியாக சரிபார்க்க அரசு நிறுவனங்களுக்கு தேவைப்படும் சரிபார்ப்பு அனுமதி வசதி கிடைக்கிறது.

“நிறுவனங்கள் உரிய முறையில் அனுமதி பெற்று வழங்குபவர் மற்றும் கோரிக்கையாளர் ஆகும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.”

Representational Image

DigiLocker செயல்படும் முறை:

DigiLocker மூன்றுவகை அமைப்பைக் கொண்டுள்ளது.

# வழங்குபவர்:

(Issuer)

ஒரு நிலையான வடிவத்தில் தனிநபர்களுக்கு மின் ஆவணங்களை வழங்குதல் மற்றும் அவற்றை மின்னணு முறையில் கிடைக்கச் செய்யக்கூடிய அமைப்பினை `வழங்குபவர்’ என்கிறோம்.

உதாரணம்: சி.பி,எஸ்.இ, பதிவாளர் அலுவலகம், வருமான வரித்துறை போன்றவை.

# கோரிக்கையாளர்:

(Requestor)

வழங்குபவரால் சேமிக்கப்பட்ட மின் ஆவணங்களில் ஒரு குறிப்பிட்ட வகை ஆவணத்துக்குப் பாதுகாப்பான அணுகலைக் கோரும் நிறுவனம்.

உதாரணம்: பல்கலைக்கழகம், பாஸ்போர்ட் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்றவை.

# பயனர்:

(Citizens)

ஆதார் எண்ணின் அடிப்படையில் டிஜிட்டல் லாக்கர் சேவையைப் பயன்படுத்தும் ஒரு தனிநபர்.

DigiLocker இன் பாதுகாப்பு அம்சங்கள்:

DigiLocker பயன்படுத்த பாதுகாப்பானது.

தரவுகள் பாதுகாக்கப்படுவதையும் சமரசம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் MeitY (The Ministry of Electronics and Information Technology) எடுத்து வருகிறது.

# பாதுகாப்பு நடைமுறைகள்:

நிலையான நடைமுறைகள்:

(Standard Practices)

சீரான குறியீட்டு தரநிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மதிப்புரைகளின் அடிப்படையில் நிலையான மென்பொருள் மேம்பாட்டு நடைமுறைகளை DigiLocker பின்பற்றுகிறது. ஒவ்வொரு வெளியீடும், சேவையும் சர்வரில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் பாதிப்புகளுக்காக தொடர் மதிப்பாய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகிறன.

256 பிட் எஸ் எஸ் எல் குறியாக்கம்:

(256 Bit SSL Encryption)

எந்த ஒரு செயல்பாட்டின் போதும் DigiLocker மூலம் அனுப்பப்படும் தகவல்கள் 256 பிட் SSL(secure socket layer) என்கிரிப்சனைப் பயன்படுத்துகின்றன.

Representational Image

மொபைல் அங்கீகார அடிப்படையிலான பதிவுபெறுதல்:

(Mobile Authentication Based Sign Up)

பயனர்களை அங்கீகரிப்பதற்கும், DigiLocker Flatform இல் அணுகலை அனுமதிப்பதற்கும் தொடர் OTP பதிவுபெறல் கட்டாயமாகிறது.

ஆதார் அங்கீகார அடிப்படையிலான வழங்கப்பட்ட ஆவண அணுகல்:

(Aadhaar Authentication Based Issued Document Access)

பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்களிடமிருந்து வழங்கப்பட்ட ஆவணங்களைப் பெற, தனிநபர்கள் ஆதார் பயோமெட்ரிக் அல்லது மொபைல் ஓடிபி அங்கீகார சேவையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை நிரூபித்துக்கொள்ள வேண்டும்.

ஐஎஸ்ஓ 27001 சான்றளிக்கப்பட்ட தரவு மையம்:

(ISO 27001 Certified Data Centre)

Digilocker தரவுகள் ஐஎஸ்ஓ 27001 பாதுகாப்பு சான்றளிக்கப்பட்ட தரவு மையத்தால் வழங்கப்படுகின்றன.

Data backup:

முறையான பாதுகாப்புச் சூழலில் தரவுகள் காப்புப் பிரதி எடுக்கப்படுகின்றன.

Timed Log Out:

அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து தனிநபரின் கணக்கைப் பாதுகாக்க Automatic Timed Out வசதி உள்ளது.

DigiLocker இல் பாதுகாப்பு தணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. தனிநபரின் முழு ஒப்புதலுடனும் மட்டுமே தகவல்கள் பகிரப்படுகின்றன.

URI (Uniform Resource Identifier) DigiLocker அமைப்பில் ஒவ்வொரு மின் ஆவணத்துக்கும் கட்டாயம் என்பதால் தரவுகளின் பாதுகாப்பு மேம்படுகிறது.

Representational Image

மேற்கண்ட DigiLocker இன் பாதுகாப்பு வசதிகள் நமது ஆவணங்களின் டிஜிட்டல் அணுகலை மிக மிகப் பாதுகாப்பாகவே வைத்திருக்கும். இதையும் தாண்டி தனிமனிதர்களும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை நமது மனதிருப்திக்காகச் செய்துகொள்ள முடியும்.

* நமக்கு OTP வர ஒன்றும், DigiLocker பயன்படுத்த ஒன்றும் என இரு போன்களை உபயோகிக்கலாம்.

*DigiLocker க்கு பொருத்தமான App lock ஐ உபயோகிக்கலாம்.

*OTP ஐ யாரிடமும் பகிராமல் இருக்கலாம்.

*MPIN வசதியைப் பயன்படுத்துவதும், MPIN ஐ அடிக்கடி மாற்றிக்கொள்வதும் பாதுகாப்பை பலப்படுத்த உதவும்.

நமது தேவைகளுக்காக உருவாக்கப்படும் நம்முடைய எந்தவொரு ஆவணமும் டிஜிட்டல் வடிவில் இணையத்தில் எங்கேனும் அவசியம் இருக்கும்.

DigiLocker இல் அவற்றை நாம் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். அவ்வளவே!

எனவே, பாதுகாப்பு குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மேலும் DigiLocker இல் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் அதிகம் உள்ளன. எனவே DigiLocker ஐ நாம் தயக்கமின்றி தாராளமாகப் பயன்படுத்த துவங்குவோம்! டிஜிட்டல் சிட்டிசனாக மாறுவோம்!

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.