பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வீட்டில் யாரும் திருமணத்துக்குப் போவதில்லை என முடிவு செய்திருந்தார்கள். ஆனாலும், மனம் பொறுக்காமல் வீட்டுக்குத் தெரியாமல் தேவாலயத்துக்குள் நுழைந்தான் சக்தி என்ற சக்திவேலன்!

ஆராதனைகள் தொடங்கி நடைபெற்று வந்தன…

சக்தியின் மனம் மட்டும் இருப்புக்கொள்ளவில்லை. தன் அப்பா மீது இனம் புரியாத கோபம் வந்தது. உலகத்தில நடக்காததா நடந்துடுச்சு? 25 வருஷதந்துக்கு முன் நடந்த விஷயத்தை இன்னுமா மனசுக்குள்ள வைச்சுட்டு இருக்கணும்? நினைக்க நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது…

அதற்குள்ளாக ஜெபம் ஆரம்பித்தது…

அனைவரும் கண்களை மூடி ஜெபிப்போமாக…

Representational Image

எனத் தொடங்கிய பிரார்த்தனையில் இலகுவாகக் கண்களை மூடி ஜெபத்தில் மூழ்க முயன்றான். இதற்கு முன்கூட தியான மண்டபத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த நினைவு! இப்போது போலவே அப்போதும் பொறுமையிழந்து அடிக்கடி கண்களைத் திறந்து யாரெல்லாம் கண்களைத் திறக்கிறார்கள் என நோட்டமிட்டு இருக்கிறான்.

`க்கூம்… யார்தான் நடுவில கண்ண திறக்காம இருக்காங்க?” எனக் கேட்டுத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.

இந்த மணமக்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக…

என ராகத்தோடு ஜெபம் முடிய மெல்ல மெல்ல கண்களைத் திறந்தபோது, போதுமானதாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் அமர்ந்த மணமக்களின் முகத்தில் திருமணக் களைகட்டிய வெட்கம் குவியலாகி இருந்தது.

பாதிரியார் சொல்லச் சொல்ல மணமகன் உறுதி மொழியைத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்.

என் அன்பின் அடையாளமாக, நான் உன்னை மணந்து கொள்கிறேன். ராபர்ட் ஆகிய நான், என் உண்மையான மற்றும் சட்டபூர்வமான மனைவியாக ஜான்சியாகிய உன்னை ஏற்றுக்கொண்டு, இந்த அன்பு எப்போதும் மாறாமல், உண்மையாகவே வைத்திருக்க நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.

எனச் சொல்லி முடித்து திருமணப் பந்தம் உறுதிப்படுத்த மணமகன் தங்க மோதிரத்தை மணமகளுக்கு அணிவித்தார். மோதிரத்தை மோதிர விரலில்தான் அணிய வேண்டுமா? அருகில் இருக்கும் பெரியவரிடம் மெதுவாகக் கேட்டான்.

தம்பி, ஆள்காட்டி விரல் கூடப் பிறந்தவர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டுவிரல் பிள்ளைகளையும், பெருவிரல் பெற்றொரையும் குறிக்குது. இப்ப நடுவிரலை மடுச்சு ஒட்ட வைச்சுட்டு மத்த விரல்களை நிமித்தி ஒட்டவை! இப்ப எல்லா விரல்களையும் பிரிச்சுப்பாரு…

சக்தி அவர் சொன்னது போலச் செய்து பார்த்தான். மோதிர விரலைத் தவிர மற்ற விரல்களைப் பிரிக்க முடிந்தது.

Representational Image

ஐயா, மோதிர விரலைப் பிரிக்க முடியலைங்க…

அதுதான்! மத்தவங்க எல்லாம் பிரிஞ்சுடுவாங்க! ஆனா கடைசிவரை கூட இருக்கிறது நம்ம துணைதான். மோதிர விரல்தான் துணையைக் குறிக்குது. பிரிக்க முடியாது!

அந்த லாஜிக் நல்லாத்தான் இருந்தது. ஆனால், மோதிர விரல் நரம்புக்கும் இதயத்துக்கும் தொடர்புள்ளது எனவும் இதை VENA AMORIS என இலத்தீனில் குறிப்பிடுவதாக அறிவியல் சொல்கிறதே!

பண்டைய ரோமனியர்கள் காலத்தில இரும்பில்தான் மோதிரம் போடுவார்களாம். தங்கம் எல்லாம் இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் போல அன்றைக்கு இருந்த பெரிய தலைகளுக்கு மட்டும்தான். பின்னர்தான் இது விரிவாக்கமாகியிருக்கிறது.

இதற்கு முன் கலந்துகொண்ட நண்பனின் திருமணத்தில் கணையாழி எடுத்தல் என்ற சடங்கில் நீர் நிரம்பிய பானைக்குள் மோதிரத்தைப் போட்டு மணமக்களை ஒரு சேர கைவிட்டுத் தேடச் சொன்னார்கள். குடத்துக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை, மணமகள் வெற்றிகரமாக மோதிரத்தை எடுத்து தம்ஸ் அப் காட்டினாள்.

அந்த தம்ஸ் அப்தான் லைக் சிம்பல்! அதுதான் சிம்பிள் லைப்!

அடுத்து கேக் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. ரோமபுரி காலத்தில் கேக்கை மணமகள் வெட்ட வேண்டும், அப்போது அவளின் கைமீது மணமகன் கை வைத்து கேக் வெட்ட உதவி செய்ய வேண்டும். இது ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கப்போவதை உறுதி செய்யும் என்பதான நம்பிக்கை! கேக் கலர் வெள்ளையாக இருப்பதுகூட இரு வீட்டாரின் செல்வச் செழிப்பைக் காட்டத்தான்!

அந்தக்காலத்தில் அனைவருக்கும் கேக் வழங்குவார்களாம். திருமணமாகாத பெண்கள் கேக் துண்டை இரவில் தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் திருமண செய்யப்போகும் ஆண்மகன் கனவில் வருவான் என்ற நம்பிக்கையெல்லாம் இருந்திருக்கின்றன. இது உண்மையானால் ’கேக் தலையணை’ என அமேசானும் பிளிப்கார்ட்டும் போட்டிப்போட்டு ஆன்லைன் விற்பனையில் கல்லா கட்டியிருப்பர். சும்மாவா Coconut Shell Cup எனச் சும்மா கிடக்கும் கொட்டாங்குச்சியையே சலுகை விலையில் ரூ. 1,330-க்கு விற்பவர்களாயிற்றே!

ஒரு பக்கம் கேக் ஊட்டிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் எவ்வளவு மொய் வைப்பது என்ற விவாதம் கணவன் மனைவிடையே ஆக்ரோஷமாகப் போய்க்கொண்டிருந்தது.

Representational Image

இதைத்தான் மணவாழ்க்கை என்பது இரும்புக்கோட்டை மாதிரி, வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள் என அரேபியர் சொல்லியிருப்பார்கள் போல!

பின்னர் மணமக்களை வாழ்த்திப் பேச ஆரம்பித்தார்கள். இது புதுமையாக இருந்தது.

மணமகனின் பாஸ் இஸ்மாயில் மணமக்களை வாழ்த்திப் பேசுவார் என எங்கேயோ அறிவிப்பதுபோல பசி மயக்கத்தில் கேட்டது. திருமணமானால் ஆணின் பாகுபலி மனநிலை எப்படியெல்லாம் பாகு நிலைக்கு மாறும் என்பதை ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி கலகலப்பாக்கினார்.

மணமகள் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் ஆண்டாள் வாழ்த்த ஆரம்பிக்கும்போதே எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற கணத்தில் சற்றே கண்களில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ஜான்சிக்குத் திருமணமாக பூஜையெல்லாம்கூடச் செய்தோம் என உணர்ச்சித் தளும்ப உதிர்த்த வார்த்தைகளை என்ன சொல்ல? ஒன்றிப்போன மணமகளின் தோழிகளின் கண்களில் அழுகை. நெகிழ்ச்சியான தருணம்.

ஆடல், பாடல் மற்றும் பொழுது போக்குகளில் மட்டுமல்ல பணிபுரியும் இடத்திலும் கெமிஸ்டரி ஒர்க்கவுட்டானால் மட்டுமே இவ்வாறான பாராட்டுகளுக்கு உரித்தாக முடியும். மணமக்கள் இருவருமே தங்களை நம்பியவர்களுக்கு நம்பிக்கைக்குரியர்வர்களாக வியாபித்து இருந்திருக்கிறார்கள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

இந்தச் சடங்குகள் எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அப்போது எழும் சச்சரவுகளால் சக்திக்கு வெறுப்பு வரும். இங்கு இவையெல்லாம் சடங்குகளா, சம்பிரதாயங்களா? எனத் தெரியவில்லை. எதுவானாலும் சரி, ”குருட்டு மத நம்பிக்கைகளையும் நீதிக்கோட்பாடுகளையும் கடந்த நிலைக்கு வழிகாட்டத்தான் எல்லா மதங்களும் ஏற்பட்டிருக்கின்றன!” என்று ரமண மகரிஷி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

Representational Image

மீண்டும் ஜெபம்…

இன்னுமாக ராபர்ட் ஜான்சி இருவருக்குள்ளாக…

கர்த்தர் ஆசிர்வதிப்பாராக…

சக்திக்கு தனியாக ஜெபம் செய்து பழக்கமில்லைதான், ஆனாலும் தொடர்ந்தான்.

மேலும்…

ஆண்டவரே…

என் தந்தையின் தங்கை மகள் ஜான்சியையும் அவர் கணவர் ராபர்ட்டையும் ஆசீர்வதிப்பாயாக…

காதல் திருமணம் புரிந்து மதம் மாறிய தன் தங்கைமேல் கோபம் கொண்டு அவளின் மகள் ஜான்சியை என்னுடன் திருமணம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்ட என் தந்தை சிவராமனையும் ஆசீர்வதிப்பாயாக…

ஆமென்…

கண்களைத் திறந்து உள்ளங்கைகளைத் தேய்த்து பின் கரங்களை கூப்பி…

பெருவிரல்களை அழுத்தியபடி மற்ற விரல்களை விரித்துப் பிரித்துப் பார்த்தவாறு பசியோடு அவசர அவசரமாக வெளியேறினான் சக்தி.

சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.