“மச்சி, உன் கம்பெனியில என்ன நிலைமை?”

“கைவசம் இருக்கிற புராஜெக்ட் வர்ற அக்டோபர்ல முடியப் போகுது. அதன் பிறகு நிலைமை என்னாகும்னு நினைச்சா கொஞ்சம் பீதியா இருக்கு.”

“க்ளையன்ட்ஸ் பலரும் ஃபண்டு இல்லைனு சொல்றாங்க. அதனால பெஞ்ச் பீரியட், ஆட்குறைப்பு பத்தியெல்லாம் எங்க ஆபீஸ்ல அடிக்கடி பேசிக்கிறாங்க.”

“ஆபீஸ் எவ்வளவோ பரவால்ல. வீட்டுல வெயில் புழுக்கம் தாங்க முடியல. இதுல இன்டர்நெட் வேற ரொம்பப் படுத்துதுடா…”

“போற போக்கப் பார்த்தா, இன்னும் பல மாசத்துக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’தான் போலயே..!”

ஐ.டி துறை

ஐ.டி ஊழியர்களுக்குள்ளான உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. கொரோனா லாக்டெளனால் பல துறையினர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறைக்கு மாறியிருக்கின்றனர். அதில் முன்னிலையில் இருப்பது ஐ.டி துறைதான். லேப்டாப், இன்டர்நெட் இருந்தால் போதும். இத்துறையின் ஊழியர் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும்கூட வேலை செய்ய முடியும். எனவே, லாக்டெளனால் தற்சமயம் அதிக பாதிப்பை சந்திக்காத முதல் துறையும் ஐ.டி-தான். ஆனால், கொரோனாவால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு ஐ.டி துறையையும் பாதிக்காமல் இல்லை. இதனால், வேலை என்னவோ நடந்துகொண்டிருந்தாலும் கைவசம் இருக்கும் பல புராஜெக்ட்டுகள் ரத்து செய்யப்படுவதும், புதிய புராஜெக்ட் தடையில்லாமல் கிடைக்குமா என்ற அச்சமும் இத்துறையில் அதிகம் எதிரொளிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் இத்துறையிலுள்ள பலரின் வேலைக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற பேச்சு ஐ.டி ஊழியர்களை அச்சப்பட வைத்துள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக ஐ.டி ஊழியர்கள் பலரும் புலம்புகின்றனர்.

சென்னையில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பல லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதில் சில சதவிகிதத்தினரின் வேலைக்கு ஆபத்து என்றாலும்கூட, அது மிகப்பெரிய பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். ஐ.டி துறையில் தற்போது என்னதான் நடக்கிறது… ஊழியர்களின் மனநிலை எப்படியிருக்கிறது, இத்துறையின் வருங்காலம் எப்படி இருக்கும்? இதுகுறித்து முழுமையாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

ஐ.டி துறை

சென்னையிலுள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அர்ச்சனா திலிப், இத்துறையில் எட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பிரசவ விடுப்பு முடிந்து கடந்த மாதம் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார். தற்போது புராஜெக்ட் இன்றி, தானே சுயமாக புராஜெக்ட் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்ன காரணம்?

“அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள்ல கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கு. எனவே, அந்த நாடுகளைச் சேர்ந்த சில க்ளையன்ட் நிறுவனங்கள் முந்தைய புராஜெக்ட்டுகள்ல பலவற்றையும் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் ரத்து செய்திருக்காங்க. எனவே, அந்த புராஜெக்ட்டுகளைச் செய்துகொண்டிருந்த எங்க நிறுவன ஊழியர்கள்ல பலரையும் சில புராஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ற பணிகள் நடக்குது. இதை ரேம்ப் டெளன்னு (ramp down) சொல்வாங்க. இதன் பிறகு அடுத்த புராஜெக்ட்ல சேரும்வரை இருக்கும் இடைப்பட்ட காலம்தான் பெஞ்ச் பீரியட்னு சொல்வோம்.

அர்ச்சனா திலிப்

பிரசவ கால விடுப்புல இருந்ததால கடந்த ஒன்பது மாசமா நான் எந்த புராஜெக்ட்லயும் வேலை செய்யலை. மறுபடியும் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்து, ஆல்ரெடி ரன் ஆகிட்டிருந்த புராஜெக்ட்ல ஒரு மாசம் வேலை செஞ்சேன். கம்பெனியைப் பொறுத்தவரை அந்த புராஜெக்ட்ல நான் புது ரிசோர்ஸ் மாதிரிதான். எனவே, என்னுடன் சேர்த்து மற்ற சில ஊழியர்களையும் நான் வேலை செய்த புராஜெக்ட் மற்றும் வேறு புராஜெக்ட்ல இருக்கிறவங்களையும் ரிலீஸ் பண்றதா சொல்லியிருக்காங்க. எனவே, எங்களை பெஞ்ச் பீரியடுக்கு மாத்தியிருக்காங்க. புராஜெக்ட் கைவசம் இருந்து, அதன் க்ளையன்ட் நிறுவனத்துக்கும் நிதிச்சுமை ஏற்படாமல் இருந்தால் அந்த ஊழியர்களுக்குப் பிரச்னையில்லை.

இப்படி பெஞ்ச் பீரியடுக்கு மாற்றப்படும் ஊழியர்களை கம்பெனியின் வேறு புராஜெக்ட்ல மாத்துவாங்க. புராஜெக்ட் ஒதுக்கும் டீமும் எங்களுக்கு புது புராஜெக்ட் தேடிட்டிருக்காங்க. நிறுவனத்துல தற்சமயம் வேறு புராஜெக்ட் இல்லாததால என்னையே புது புராஜெக்ட் தேடிக்கவும் சொல்லிட்டாங்க. அதுவரை என் நிறுவனமே எனக்கு சம்பளம் கொடுக்கும். அதன்படி நான் புது புராஜெக்ட் பிடிச்சுட்டா, அதுக்கான பயிற்சி எடுத்துக்கணும். பிறகு, தேவைப்பட்டால் அந்த புராஜெக்ட்ல என் நிறுவன ஊழியர்களையும் சேர்த்துக்கலாம். பிறகு, என் நிறுவன ஊழியராகவே அந்த புராஜெக்ட்ல வேலை செய்யலாம். அந்த புராஜெக்ட் முடிந்ததும், நிலைமை சரியாகிட்டா, என் நிறுவனம் கொடுக்கும் புராஜெக்ட்லயே வேலையைத் தொடரலாம். ஒருவேளை என்னால புராஜெக்ட் பிடிக்க முடியாத சூழல் வந்தால்? ஆட்கள் தேவைப்படுற எங்க நிறுவனத்தின் வேறு கிளையில் (பிராஞ்ச்) என்னை இடமாற்றம் செய்யவும் வாய்ப்பிருக்கு. அல்லது வேலையிலிருந்து நீக்கலாம். எது நடந்தாலும், ஏத்துக்க தயாராக இருக்கணும்.

சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனங்களின் டேட்டா தகவல்

என்னுடைய ரெஸ்யூம் (resume) அப்டேட் பண்ணி, புது புராஜெக்ட் தேடிட்டிருக்கேன். ஐ.டி துறையில் இது இயல்பான செயல்பாடுனாலும், உலகம் முழுக்க இந்தப் பிரச்னை ஏற்பட்டிருப்பதால்தான் கூடுதல் பதற்றம் ஏற்பட்டிருக்கு. இன்னும் சில மாதங்கள்ல ஐ.டி நிறுவனங்கள்ல ஆட்குறைப்பு பேச்சு அதிகம் எதிரொலிக்கலாம். அப்போ, பெஞ்ச்ல இருக்கிற ஊழியர்கள், திறமையை மேம்படுத்திக்காத ஊழியர்கள், ஒரே புராஜெக்ட்டில் நீண்ட காலம் இருந்து அனுபவம் குறைவாக இருக்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கு” என்கிற அர்ச்சனா, முதல் பிரசவம் முடிந்து மீண்டும் வேலைக்குச் சேர்ந்தபோதும் புராஜெக்ட் அமையாமல் ஒரு மாதம் பெஞ்ச் பீரியடில் இருந்த நிலையில், மீண்டும் இவருக்கு புராஜெக்ட் கிடைத்திருக்கிறது. திருமணமான பெண்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனாலயே ஐ.டி துறையிலுள்ள பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகிறார்களாம்.

“எங்க நிறுவனத்துல பெரும்பாலான ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன், அடிப்படை சம்பளத்துல (Basic Pay) சராசரியாக 25 சதவிகிதம் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. எனக்கும் போன மாசத்துக்கு கூடுதலான சம்பளம் கிடைச்சுது. உயர் பொறுப்பில் உள்ளவங்களுக்கு கொஞ்சம் சம்பளம் குறைச்சுக் கொடுத்திருக்கிறதா பேசிக்கிறாங்க. தற்போதைய மே மாதத்துக்கு என்ன நிலவரம்னு தெரியலை. ஆனாலும், இனி சிக்கனமா இருந்தால்தான் வருங்காலத்துல ஏற்படும் இடர்பாடுகளைச் சமாளிக்க முடியும். எனக்கு ரெண்டு குழந்தைகள். குடும்பம் பெரிசாகிடுச்சு. அதனால கணவருடன் நானும் வேலைக்குப் போனாதான் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க முடியும். அதனால சிரமப்பட்டாவது புது புராஜெக்ட் பிடிச்சாகணும். அதுக்குதான் தினமும் பல நிறுவனங்கள்கிட்ட பேசிட்டிருக்கேன்” என்றார் அர்ச்சனா தளர்வான குரலில்.

மனோஜ் அப்துல்லா

“இந்த இக்கட்டான சூழல்ல வேலையை தக்கவெச்சுக்கணும் என்பதுதான் பெரும்பாலான ஐ.டி ஊழியர்களின் எண்ணம். அதுக்காகப் பல வழிகளிலும் எங்களை மாத்திக்க ஆரம்பிச்சுட்டோம்” என்று கூறும் மனோஜ் அப்துல்லா, சென்னையில் மூவாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஐ.டி துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், இன்னும் விரிவாகப் பேசினார்.

“முன்பு புராஜெக்ட் இல்லாம ஓர் ஊழியர் பெஞ்ச் பீரியட்ல மாசக்கணக்கில் இருக்கலாம். அதன் பிறகும் புராஜெக்ட் கிடைக்கலைனா, சம்பளம் குறைப்பாங்க. ஆனா, இப்போ கிரேஸ் பீரியடுடன் சேர்த்து ரெண்டு மாதம்தான் பெஞ்ச் பீரியட்ல இருக்க முடியும். அதுவும் பாதி சம்பளத்துடன்! பிறகு, வேலையிலிருந்து நீக்கப்படலாம். இப்படி பெஞ்ச் பாலிசியில் மாற்றம் கொண்டுவந்திருக்காங்க. எங்க நிறுவனத்துல செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றம், ஒவ்வொரு கம்பெனிக்கும் மாறுபடலாம். இப்போதைக்கு கைவசம் இருக்கும் லண்டன் நிறுவன புராஜெக்ட்ல வேலை செய்றேன். அதனால சிக்கல் இல்லாட்டியும், இந்த புராஜெக்ட்ல செய்யவேண்டிய வேலையின் ஆர்டரையும் மாத்தியிருக்காங்க.

ஐ.டி துறை

க்ளையன்ட்ஸ் நிறுவனங்கள் ஃபண்டு இல்லைனு சொல்றது அதிகமாகிடுச்சு. இதனால, அனுபவம் குறைந்த ஊழியர்கள், புது ஊழியர்களைக் குறைச்சுக்க சொல்றாங்க. முடிந்தவரையில் மேனேஜர்களும் ஊழியர்களைக் காப்பாத்த பார்க்கறாங்க. ஒருவேளை ஆட்குறைப்பு நடந்தா, பலர் செய்யவேண்டிய வேலையை சிலர் செய்ய நேரிடும். எனவே, கூடுதல் பணிச்சுமை ஏற்படும். இதுதொடர்பான பேச்சுகள் தினமும் எங்களுக்குள் ஓடிட்டிருக்கு. வருங்காலம் எப்படி இருக்கும் என்பதுதான் கொஞ்சம் பயத்தை உண்டாக்குது. கொரோனாவின் தாக்கம் படிப்படியா ஐ.டி சூழலையே மாத்த வாய்ப்பிருக்கு. அதனால, வேலையைத் தக்கவெச்சுக்கிறது சவாலாக மாறலாம்” என்பவர், அன்றாட பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

“மேனேஜர் உட்பட உயர் பொறுப்பில் உள்ளவங்களுக்கு மட்டும் ஆபீஸ் லேப்டாப் கொடுப்பாங்க. முன்பெல்லாம், அவங்க மட்டும் தேவைப்பட்டா வீட்டில் இருந்தும் வேலை செய்வாங்க. இப்போ எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்றதால, ஆபீஸ் லேப்டாப் இல்லாதவங்களுக்கு ஆபீஸ்ல பயன்படுத்துற கணினியை (desktop) வீட்டில் வெச்சுப் பயன்படுத்த சொல்லிட்டாங்க. நானும் அப்படித்தான் வேலை செய்றேன். ஆபீஸ்ல வாரத்துக்கு 45 மணிநேரம் வேலை செய்யணும். தினமும் ஒன்பது மணிநேரம் வேலை செஞ்சா போதும். புராஜெக்ட் டெலிவரி சீக்கிரம் முடிக்க கூடுதல் நேரமும் விடுமுறை தினங்கள்லயும் வேலை செய்யலாம். அதற்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்.

ஐ.டி துறை

எங்க வேலைக்கு இன்டர்நெட் பயன்பாடு இருந்தே ஆகணும். வீட்டில் இன்டர்நெட் வேகம் ரொம்பவே குறைவா இருக்கு. அல்லது க்ளையன்ட்ஸ் இணையதளப் பயன்பாட்டில் சிக்கல் இருந்தாலும் நமக்கும் வேலையை முடிக்க நேரமெடுக்கும். பவர் கட் ஏற்பட்ட பிறகு வேலையைத் தொடர் நேரமாகுது. அதனால தினமும் கூடுதலா சில மணிநேரம் வேலை செய்ய வேண்டியதா இருக்கு. இதுக்கெல்லாம் கூடுதல் சம்பளம் தரமாட்டாங்க. இதனால டாங்கிள் பயன்படுத்துறதுக்கு விரைவில் அலவன்ஸ் கொடுப்பதாக ஆபீஸ்ல சொல்லியிருக்காங்க.

ஐ.டி துறை

தினமும் டிரஸ் அயர்ன் செய்ய அவசியம் இல்லை, அவ்வப்போது புது டிரஸ் எடுக்க வேண்டியதில்லை, டிராஃபிக் அலைச்சல் இல்லாதது, போக்குவரத்துச் செலவுகள் இல்லாதது, குடும்பத்துடன் கூடுதலா நேரம் செலவிடுவதுனு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையால் நிறைய பாசிட்டிவ் மாற்றங்களும் நடந்திருக்கு. ஆட்குறைப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்தாலே ஐ.டி ஊழியர்கள் நிம்மதியா வேலை செய்வாங்க” என்கிறார் மனோஜ் அப்துல்லா.

சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுடன் பல கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவர், தன் பெயரை குறிப்பிட விரும்பாமல், தங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசினார். “ஊழியர்களின் ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கைவசம் புராஜெக்ட் இருந்தாலும், புது புராஜெக்ட் வருவது குறைந்திருப்பது உண்மைதான். இதனால் வருங்காலம் சற்றே சிக்கலாக இருக்கக்கூடும். தவிர, வேலைப்பளு கூடியிருப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.

ஐ.டி துறை

Also Read: மீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க ஆனா..? – கொரோனா தாக்கத்தை விளக்கும் ஐ.டி ஊழியர் #MyVikatan

மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்கவும், உற்சாகப்படுத்தவும் ஊழியர்களுக்கு ஆன்லைன் வாயிலாக சில ஆக்டிவிட்டி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கொரோனா பாதிப்பு சரியான பிறகும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் கணிசமான ஊழியர்கள் வேலை செய்வார்கள். ஐ.டி துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. கொரோனாவின் பாதிப்பால் ஐ.டி துறையின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்துகொள்ள எதிர்காலத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், தற்சமயம்வரை ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தில்லை” என்றார்.

“2008-ம் ஆண்டில், அமெரிக்காவில் ஐ.டி துறை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தபோது, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொளித்தது. பிறகு, விரைவாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. பலமுறை வீழ்ச்சியைத் தாண்டி வளர்ந்த துறை இது. அதனால், அந்தச் சூழல் விரைவாகவே மாறியது. அதுபோலவே கொரோனா பாதிப்பும் ஒருசில ஆண்டுகளில் சரியாகலாம். அதற்குள் ஏற்படும் சில சேதாரங்களில், சிலரின் வேலை பறிபோகலாம். அந்தக் கும்பலில் நாம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தற்போதைய சூழலைப் பதற்றமின்றி எதிர்கொள்வது மற்றும் ஐ.டி துறையின் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசுகிறார், எழுத்தாளர் மற்றும் தனியார் ஐ.டி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஷான் கருப்பசாமி.

ஷான் கருப்பசாமி

மேலும், “கொரோனா தாக்கத்தால் மற்ற துறைகள் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால், அது ஐ.டி துறையிலும் எதிரொளிக்கிறது. இதனால் எதிர்பார்த்த லாபத்தில் குறிப்பிட்ட சதவிகித வளர்ச்சி குறையுமே தவிர, தொடர்ந்து வேலைகள் நடைபெறுவதால் பெரிதாக சரிவு ஏற்படாது. ஐ.டி நிறுவனங்கள் என்றால், பல்லாயிரம் ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் என்ற பிம்பம் பலருக்கும் இருக்கிறது. சில நூறு ஊழியர்கள் மற்றும் நூறு ஊழியர்களுக்கும் குறைவாக இயங்கும் ஐ.டி நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இவை மற்றும் பி.பி.ஓ நிறுவனங்களால் எல்லா ஊழியர்களுக்கும் லேப்டாப் வாங்கித்தர முடியாது. நிலைமை சரியான பிறகும்கூட இடவசதி குறைவாக இருக்கும் என்பதால், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை சமூக இடைவெளிவிட்டு உட்கார வைப்பது சவாலாக இருக்கும். இதுபோன்ற சிறு நிறுவனங்களுக்குத்தான் கொரோனாவால் பெரிய பாதிப்பு ஏற்படப்போகிறது.

புது புராஜெக்டுகளைப் பிடிப்பதுதான் வருங்காலத்தில் பெரிய சவாலாக அமையும். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆன் சைட் முறையில் சென்று புராஜெக்டுகளைப் பிடிப்பது சிரமம். அதனால், நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கக்கூடும். அதன் முதல்படியாக கணிசமான ஊழியர்களை பெஞ்ச் பீரியடில் மாற்றலாம். இதுகுறித்து பரவலாகப் பேச்சு இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்த பேச்சுகள் அதிகமாகும்போதுதான் இதன் வீரியம் முழுமையாகத் தெரியவரும். தவிர, எந்த நிறுவனத்திலும் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் மற்றும் ஹெச்.ஆர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.

ஐ.டி துறை

ஆட்டோமொபைல் உள்ளிட்ட மற்ற துறைகளில் ஒரே தொழில்நுட்பத்தை வைத்து பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், ஐ.டி துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும். அதற்கேற்ப இந்தத் துறையிலுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோர் உடனே தங்களின் திறனை வளர்த்துக்கொள்வார்கள். இதனால் புதுப்புது புராஜெக்ட்டுகளில் பணியாற்றி உயர்வு நிலைக்குச் செல்வோர் அதிகமுண்டு. கொரோனா பாதிப்பால் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு ஏற்பட்டால், மாற்றங்களுக்கு ஏற்ப நீண்டகாலமாகத் தங்களை உட்படுத்திக்கொள்ளாதவர்களின் வேலைதான் முதலில் பறிபோக வாய்ப்புள்ளது.

ஐ.டி துறை

நிறுவனத்திற்குப் பயன்தரக்கூடிய ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படப்போவதில்லை. உரிய திறமை இருந்தும் சில ஊழியர்களை பெஞ்ச் பீரியடுக்கு அனுப்புவது அல்லது பணியிலிருந்து நீக்கினால் நிறுவனத்தில் முறையிடலாம். ஒரு ஊழியரை பணியில் வைத்துக்கொள்வது, நீக்குவது நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. பல நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுக்கப்போவதில்லை என்ற பேச்சு இருக்கிறது. ஆனால், குறைவான சம்பளம் கொடுத்தால் போதும் என்பதால், புதிய ஊழியர்களை (fresher) வேலைக்கு எடுக்கவும் ஐ.டி நிறுவனங்கள் விரும்பலாம். அதுவும் வருங்காலங்களில் தெரியவரும்” என்பவர், கொரோனா பாதிப்பால் ஐ.டி துறையில் ஏற்படப்போகும் வளர்ச்சி குறித்து பேசினார்.

“லாக்டெளனுக்கு முன்பு வரை ரிமோட் கன்ட்ரோல் குறித்து யோசித்துப் பார்த்திடாத நிறுவனங்கள்கூட, தற்போது இந்த முறையில் இயங்கிவருகின்றன. அதிக சம்பளம், மதிப்புமிக்க வேலை என்றால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில்தான் சாத்தியம் என்ற பிம்பத்தை கொரோனா உடைத்திருக்கிறது. திறமை இருந்தால் போதும். குக்கிராமத்தில் இருந்தும் வேலை செய்யலாம் என்ற நிலை இனி அதிகரிக்கும். கொரோனா போன்ற இன்னொரு பேரிடரை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் தாங்குமா? சுற்றுச்சூழல், மக்கள் நெருக்கம் மற்றும் வாகனப் பயன்பாடு அதிகமாவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் கொரோனா முடிந்த பிறகும் பல ஐ.டி நிறுவனங்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை அதிகப்படுத்தலாம்.

Also Read: “வேலை நடக்கலை; ஆனாலும் சம்பளம் கொடுக்கிறோம்!” – கைகொடுக்கும் பெண் தொழில்முனைவோர்!

கொரோனாவால் மீட்டிங்கூட ஸூம் ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் தளத்திலேயே செய்துகொள்ள முடிகிறது. வருங்காலங்களில் இதுபோல புதிய ஆப்களின் மற்றும் தொழில்நுட்பங்களின் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கும். எனவே, அவற்றை உருவாக்குவது மற்றும் அவற்றின் தொழில்நுட்ப ரீதியான பணிகளில் ஐ.டி துறையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகக்கூடும். இதனால் புதிய நிறுவனங்கள்கூட உருவாகலாம். இனி வரக்கூடிய காலகட்டம் எப்படி இருந்தாலும், தகுதியான, திறமையான ஊழியர்களுக்கான வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

தற்போதைய சூழலில் வேலை பறிபோகுமோ என்று ஐ.டி துறையினர் உட்பட யாருமே அச்சப்படத்தேவையில்லை. வருங்கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களின் திறனை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் எதிர்காலமும் சிறப்பாகவே அமையும்.

ஐ.டி துறை

அமெரிக்காவின் நிதியாண்டு ஜனவரி – டிசம்பர். வரும் டிசம்பரில்தான் அங்குள்ள ஐ.டி நிறுவனங்களின் அடுத்த ஆண்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது தெரியவரும். அதுவரை சொல்வது எல்லாமே அனுமானமாக இருக்கும். ஐ.டி துறையில் வேலையிழப்பு குறித்த அச்சம் இருந்துகொண்டே இருப்பதையும் மறுக்க முடியாது. பிரபலமான துறை என்பதால், ஐ.டி துறையின் எதிர்காலம் குறித்த பேச்சு அதிகம் எழுகிறது. ஆனால், நம் நாட்டில் ஐ.டி துறையைவிட அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் துறைகள் அதிகம் இருக்கின்றன. அவை குறித்தும் இனி அதிகம் பேசப்படும்” என்று முடித்தார், ஷான் கருப்பசாமி.

கொரோனா பாதிப்பால் உங்கள் வேலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.