கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் மார்ச் 24-ம் தேதிவரை முதல் மே 17-ம் தேதிவரை ஊரடங்கு மற்றும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவுகள் அமலில் இருந்தாலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மருந்து, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில், “புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை எந்தவித அனுமதியும் பெறாமல் இன்று முதல் திறக்கலாம். இருசக்கர வாகனங்களில் இருவர் செல்லலாம். மே17-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில்தான் இருக்கும் என்பதால் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரக் கூடாது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று நேற்றிரவு முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

அதன்படி 40 நாள்களுக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. தேவைக்காக மட்டுமே வெளியில் வரவேண்டுமென்றும், அப்போதும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தபோதும் இன்று லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தேவைகளே இல்லாமல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகங்கள், மினி லாரிகள் உள்ளிட்டவை வீதிகளில் இறங்கியதால் வழக்கமான நாள்களைவிட நெரிசலில் திணறியது புதுச்சேரி நகரம்.

புதுச்சேரி

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்தபோதும் புதுச்சேரியில் அது கட்டுக்குள் இருப்பதற்குக் காரணம் அரசும் அதிகாரிகளும் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். மத்திய அரசு சுய ஊரடங்கை அறிவித்தபோது 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் முதல்வர் நாராயணசாமி. அதையடுத்து தமிழகம் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநில எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகுதான் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இப்படி அரசு எடுத்த தொலைநோக்கு முடிவின் அடிப்படையில்தான் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடலூரில் ஒரேநாளில் 107 பேருக்குக் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கை இப்படி தளர்த்தியிருப்பது மாநிலத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

புதுச்சேரியின் வீதிகளில் மக்கள் நெரிசல்

வணிகர் சங்கங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே முதல்வர் நாராயணசாமி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், மக்கள் நெரிசல் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்து அவரே அப்செட்டாகியிருக்கிறார். உடனே, `என்ன இப்படி ஆகிவிட்டது.. இப்போது என்ன செய்வது?’ என்று சக அமைச்சர்களிடம் வேதனை தெரிவித்திருக்கிறார்.

அப்போது, `வணிகர்களுக்காக மக்கள் உயிரை நாம் பணயம் வைக்கக் கூடாது. மாலை நடக்கும் பேரிடர் கூட்டத்துக்குப் பிறகு சோதனை முயற்சி என்று கூறிவிட்டு ஊரடங்கு தளர்வை திரும்பப் பெற்றுவிடலாம். அதுதான் சரியாக இருக்கும்” என்று ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

லாரி ஓட்டுநர்களுக்குப் பரிசோதனை

அதையடுத்து முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோவில், `புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசங்கள் அணியாமல், அரசின் உத்தரவுகளைக் கடைப்பிடிக்காமல் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவை மனத்தை உறுத்தச் செய்கிறது.

விதிகளைக் கடைப்பிடிக்காமல் அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு செயல்படும் கடைகளை மூட உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தால்தான் மக்கள் மதிப்பார்கள் என்றால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Also Read: `கடலூர், விழுப்புரம் மக்களுக்குத் தடை..!’ -ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய நாராயணசாமி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “ஊரடங்கு தளர்வா அல்லது ரத்தா என்று தெரியவில்லை. வணிகர்கள் கொடுத்த அழுத்தத்தினால் முதல்வர், தனது முடிவை மாற்றியிருக்கிறார். தமிழகப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களும் வியாபாரிகளும் புதுச்சேரிக்குள் வரக்கூடாது என்று முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால் விழுப்புரம், கடலூர், கோட்டக்குப்பம் என அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இன்று நகருக்குள் வந்துவிட்டார்கள். இவர்களை எப்படி அதிகாரிகள் அடையாளம் காண்பார்கள்? 40 நாள்களைக் கடந்துவிட்டபோது இன்னும் 10 நாள்களை இதே கட்டுப்பாட்டுடன் கடந்திருக்கலாம்” என்கின்றனர் குமுறலுடன்.

கொரோனா பாதிப்பில் புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாக நீடிக்குமா அல்லது சிவப்பு மண்டலமாக மாறுமா என்பதை ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகளே தீர்மானிக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.