கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல நாடுகள் தங்கள் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றன.
உலக அளவில் தற்போது கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா தான். நிமிடத்திற்கு நிமிடம் அங்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. பொருளாதாரம் ஒருபுறம் மந்தநிலையை எட்டியிருப்பதால், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பலர், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது எனத் தயங்கி நிற்கின்றனர்.
இந்தச் சூழலில் அமெரிக்காவில் உள்ள குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் ரூபாயை வழங்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதில் குழந்தைகளுக்கு 38 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மைக்காகத் தொடரப்பட்ட காப்பீட்டை வலுப்படுத்த 191 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக ஸ்பெயினில், முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்குப் படிகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசிடம் இருந்து 80 சதவிகிதம் வரை ஊதியமாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில், மொத்த ஊதியதிலிருந்து 84 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறது. டென்மார்க்கில் மூன்று மாதங்களுக்கு 75% ஊதியம் வழங்க அரசு பரிந்துரைத்துள்ளது. எந்தவொரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் வருமானம் இழந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் அந்நாட்டு மதிப்பில் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையில் 60 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. வைரஸ் பரவிய சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தற்காலிக வாழ்வாதாரத்துக்கான படி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழந்தவர்களுக்கும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், செக் குடியரசு, போலாந்து, நெதர்லாந்து, செர்பியா ஆகிய நாடுகளும் ஊழியர்களுக்கான நிவாரணங்களை அறிவித்திருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM