‘சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்களைக் காப்பாற்றுங்கள்!’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரமோடியையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனையும் டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் மருத்துவர் ஒருவர்.

அந்தப் பதில், ‘சென்னை மருத்துவக் கல்லூரியின் இதயவியல் சிகிச்சைத் துறையிலுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் பலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சரியான பராமரிப்பு இல்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி விடுதியில் தங்க வைத்திருக்கின்றனர். அங்கு சரியான உணவு வசதியும் இல்லை. அவர்களைத் தொடர்ந்து பணியாற்றவும் வற்புறுத்துகின்றனர்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Tweet

உலகிலேயே பழைமையான மருத்துவமனைகளில் ஒன்றாகவும் நாட்டிலேயே இரண்டாவது அரசு மருத்துவமனையாகவும் பல்வேறு சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக இருப்பது இந்தக் கல்லூரிதான்.

அத்தகைய பெருமைமிக்க மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையும் நடைபெற்று வருகிறது. அதைக் கையாளும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்குத்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்குள்ள சில முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் பேசினோம்:

“கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் இதயநோயாளியும்கூட. இந்நிலையில் அவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இதயவியல் துறைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. பணியிலிருந்து முதுநிலை மருத்துவ மாணவர் உடனடியாகக் கொரோனா வார்டுக்கு அனுப்பப்பட்டார். கவச ஆடையை அணிந்துதான் அவர் சென்றார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை மீட்பதற்கான முதலுதவிகளை அவரே செய்ய நேர்ந்தது. இருப்பினும் அந்த நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை.

Cardiac patient

இதையடுத்து சிகிச்சையளித்த மாணவருக்கு ஓரிரு தினங்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இருந்தாலும் தொடர்ந்து அவரை முதுநிலை மாணவர்களுக்கான விடுதியிலேயே க்வாரன்டீனில் இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். விடுதியில் உணவு சாப்பிடுவதற்கு அனைவரும் சாப்பிடும் மெஸ்ஸுக்குத்தான் செல்ல வேண்டும். அங்கும் சென்றிருக்கிறார் அந்த மாணவர். இந்நிலையில் அறிகுறிகள் தீவிரமாகி அவருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர் பிற மாணவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதால் பயத்தின் காரணமாக அனைத்து முதுநிலை மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் தங்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்வதற்கான வசதியோ, பரிசோதனை கிட்டோ இல்லை என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறது நிர்வாகம்.

மேலும் சென்னையைச் சேர்ந்த மாணவர்களை உடனடியாக வீட்டுக்குச் செல்லும்படியும் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக சில மாணவர்கள் வீடுகளுக்கும் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கும் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது.

இதயவியல் துறையைச் சார்ந்த 20 பேருக்குப் பரிசோதனை செய்ததில் இதுவரை 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதயவியல் துறை இரண்டு நாள்களாகச் செயல்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் போதிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பணியைப் புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் அது தொடர்பாகக் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Dr.Ramalingam

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் அ.இராமலிங்கத்திடம் பேசினோம்:

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணி நேரம் ஒதுக்க வேண்டும். கோவிட் வார்டு பணி முடிந்த பிறகு 14 நாள்கள் அவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் அவர்களுக்குத் தரமான உணவு, தங்குமிடம் அளிக்க வேண்டும்.‌ மருத்துவமனை வளாகத்தில் அல்லது மருத்துவமனை விடுதிகளில் தங்க வைப்பது சரியல்ல.

ஏனெனில் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கோ அல்லது மற்றவர்களிடமிருந்து இவர்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்கூட தங்க வைக்கலாம் என்றார்.

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

போதுமான பாதுகாப்பு வசதிகளை அளிக்காவிட்டால் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களுமே நோயைப் பரப்புபவர்களாக மாறிவிடுவார்கள். இதே நிலை நீடித்தால் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மூடும் நிலைகூட ஏற்படலாம் என்று சில மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தொடர்பான விளக்கத்தைப் பெற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயந்தியைத் தொடர்புகொண்டோம்.

“கொரோனா பணியிலிருந்த 5 முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களுக்கு மட்டுமே நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

MMC Dean Dr.Jayanthi

கொரோனா வார்டில் பணியை முடித்துவிட்டு க்வாரன்டீனுக்குச் செல்லும் முதுநிலை மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்காக எம்.எல்.ஏ விடுதியும், தாடண்டர் நகர்ப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான புதிதாகக் கட்டப்பட்ட மூன்று பெட்ரூம் வசதி கொண்ட 365 வீடுகள் கொண்ட அப்பார்ட்மென்ட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு ஸ்டார் ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணிகளையும் தடையின்றி செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Also Read: பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நபர்! – டெல்லி மருத்துவர்கள் சாதனை

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.