ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கில் எஸ்,பி.சுபாஷ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் போலீஸார் நேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி சுபாஷ் என்பவருக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஊரடங்கு கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
(கோப்பு புகைப்படம்)
அதேபகுதியில் பணியிலிருந்த ஊர்காவல்படை பெண் காவலர்களிடம் சுபாஷ் ஆபாசமாக நடந்துகொண்டதாக திருபுவனை காவல்நிலைய போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து திருபுவனை போலீசார் சம்பந்தப்பட்ட பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.பி சுபாஷ் பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் திருபுவனை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், சுபாஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போலீஸ் தலைமையகம், புதுச்சேரி உள்துறைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்று, எஸ்பி சுபாஷை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM