வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அமெரிக்க தகவல் வெளியிட்டு வரும் நிலையில், அதில் உண்மையில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதற்கு பின்னர் அவர் உடல்நிலை மோசமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கடந்த 2 ஆண்டுகளாக இவர் தலைமையில் நடைபெற்று வரும் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளே அச்சத்தில் உறைந்து கிடக்கின்றன. உலகமே கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு நடுங்கும் வேலையில் தங்கள் நாட்டில் யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகவில்லை என ஆணித்தரமாக கூறியவர் கிம்.
வடகொரியாவில் எந்தவொரு பொதுநிகழ்ச்சியும் ஆட்சியாளரான கிம்மின் தலைமையிலேயே நடைபெறும். ஆனால் கடந்த 15ஆம் தேதி வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படுபவரும், கிம் ஜான் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழா கிம் பங்கேற்காமல் நடைபெற்றன. 2011 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றத்தில் இருந்து கிம் இந்த ஆண்டுதான் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலால் கிம் பொதுநிகழ்வை தவிர்த்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் அதனால்தான் அவர் விழாவுக்கு வர இயலவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் கிம் கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடந்த 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன்பின் அவர் கிழக்கு கடற்கரை நகரான ஹியாங்சன் மாகாணத்தில் உள்ள கும்காங் ரிசார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் புகைப்பிடித்தல், உடல்பருமன், அதிக வேலைப்பளு காரணமாக கிம் இதய நோயால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வடகொரிய ஊடகங்களில் எந்தவித செய்தியும் வெளியாகவில்லை என என்.கே நியூஸ் எனப்படும் வடகொரிய செய்திகள் வெளியீடு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளது என வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைத்து வதந்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் தலைநகரமான பியாங்காங் நகரம் இயல்பு நிலையில் தான் உள்ளது என்றும், அதிபர் உடல்நிலை மோசமாக இருந்தால் அங்கும் நிலைமை மோசமடைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வசிக்கும் மக்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில், தென்கொரிய தலைநகரமான சியோலில் பிரசுரிக்கப்படும் டெய்லி என்.கே என்ற ஊடகம் பல தகவல்களை வெளியிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலில் கொரோனா ஊரடங்குகிற்கு பின்னர் பள்ளிகள் வழக்கம்போல தொடங்கயிருப்பதாக மக்கள் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் எப்போது இருக்கும் இயல்பு நிலையில் தான் நகரம் இருப்பதாக மக்கள் கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை செய்தி நிறுவனம் ஒன்று தான் செய்தியை பரப்பியுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு தென் கொரிய செய்தி நிறுவனம் ஒன்று ஆதரவு தெரிவித்து, பின்னர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்க செய்தி நிறுவனமும், கிம் ஜாங் உன்னிற்கு எந்த உடல் பிரச்னையும் இல்லையென்றால், அவர் விரைவில் மீண்டு வருவார், அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்போம் என அமெரிக்க உளவுத்துறை செய்தி நிறுவனம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு பெருந்தலைவலியாக இருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் கிம் ஜாங் உன். எனவே அவரது அனைத்து அசைவுகளையும் அமெரிக்கா நோட்டமிட்டு வருகிறது என்பது அரசியலை உற்று நோக்கும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், திடீரென கிம் ஜாங் உன் எங்கே சென்றார் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் அமெரிக்க குழப்பத்தில் இருப்பதாகவும், கொரோனாவால் அமெரிக்கா நிலைகுலைந்துள்ள நிலையில் கிம் ஜாங் உன் அமெரிக்காவிற்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து ஏதேனும் திட்டம் தீட்டுகிறாரோ என்ற குழப்பத்தில் அமெரிக்க இருப்பதாக உலக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் கிம் ஜாங் உன்னிற்கு உடல்நிலை மோசம் என்ற தகவலை பரப்பினால், தனக்கு ஒன்றும் இல்லை என அவர் வெளியே வருவார் என்பதால், அமெரிக்கா இத்தகைய தகவலை பரப்புவதாகவும் சில உலக வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவல்களை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவில் அதுபோன்ற எந்த சூழலும் தென்படவில்லை என்றும் தென்கொரியா விளக்கமளித்துள்ளது. அதேபோல், கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று சீனா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் வரை, கிம் ஜாங் உன் வெளியே தன்னுடைய முகத்தை காட்டும் வரை இந்த குழப்பம் தொடரும் என்றே தெரிகிறது.
‘ரேபிட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்’: ஐசிஎம்ஆர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM