தற்போது உலகம் முழுவதும் பல உயிர்களைக் காவு வாங்கி வரும் கொரானா வைரஸின் தோற்றம் பல்வேறு விதமாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு சாரார் அந்த வைரஸானது சீனாவின் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விபத்தின் மூலம் அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டது என்றும் அடிப்படை ஆதாரம் ஏதுமின்றிப் பேசி வருகின்றனர். இதுபோன்ற கான்ஸ்பிரசிகளைப் பேசிவரும் நபர்களை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. அறிவியல் பூர்வமாக இன்னும் அந்த வைரஸ் இங்கிருந்துதான் தோன்றியது என்று கண்டுபிடிக்கும் வரை இதுபோன்ற புரளிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், முதன்மைக்கட்ட ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கொரானா வைரஸானது கண்டிப்பாகச் சீனாவில் இருக்கும் மார்க்கெட்டுகளில் இருந்துதான் தோன்றியிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக வௌவால்கள் மூலம்தான் இந்த வைரஸ் மனிதனுக்குப் பரவியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

காடுகள்

சீனாவில் அதுவும் குறிப்பாக வுகான் மாகாணத்தில் பல்வேறு விலங்கு சந்தைகள் இருக்கின்றன. அவற்றை முறையாக அரசு நிறுவனங்கள் கண்காணிப்பதில்லை. இங்கே தொடர்ந்து விலங்குகளை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதால், இது போன்ற விலங்குச் சந்தைகளுக்குச் சீனாவில் ஏக கிராக்கி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஒரு பக்கம் இத்தனை மக்கள் விரும்பி உண்ணும் உணவை எப்படிக் குற்றம்சாட்டுவது என்ற கேள்வியும் நம்முள்ளே எழுகிறது. ஆனால், கடந்த காலத்தை நோக்குகையில் வைரஸ்கள் பல இதுபோன்ற வௌவால்களின் மூலம் பரவியது என்பது உண்மை. கேரளாவில் அச்சத்தை ஏற்படுத்திய நிபா வைரஸ் இதுபோன்று வௌவால்களின் மூலம்தான் பரவியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்பு பறவைக்காய்ச்சல் வந்தபோது கொத்துக் கொத்தாகத் தாங்கள் வளர்த்த கோழிகளையே மக்கள் கொன்றது போலவே, இப்போது வௌவால்கள்தானே இந்த வைரஸ் பரவக் காரணமாக இருக்கிறது, அப்படியானால் எல்லா வௌவால்களையும் அழித்துவிட்டால் என்ன என்றுகூடத் தோன்றலாம். ஆனால், அப்படி நீங்கள் நினைப்பீர்களானால் அது மிகப்பெரும் தவறு!

ஏனெனில், இவ்வுலகில் ஓர் உயிரினம் அழிந்தால் அதைச் சார்ந்துள்ள மற்ற உயிரினங்களும் அழிந்துபோகும். அதுதான் இயற்கை நமக்கு வழங்கும் பாடம். அதேபோல முதற்கட்ட ஆய்வுகள் குறிப்பிடும் இன்னொரு விஷயம் என்னவெனில் இந்தக் கொரோனா வைரஸானது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல!

1980-களிலிருந்து தற்போது வரை இது போன்ற திடீர் நோய்கள் தாக்குவது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைச் சில ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற திடீர் நோய்கள் 70 சதவிகிதத்துக்கும் மேல் விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்துதான் வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவலும் இங்கே குறிப்பிடத்தக்கது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பெரும் நோய்களான ஹெச்ஐவி, பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், எபோலா வைரஸ் போன்ற நோய்களைக் குறிப்பிடலாம்.

கொரோனாவின் தாக்கம் இவ்வளவு வேகமாகவும் மோசமாகவும் இருக்குமென எந்த விஞ்ஞானியும் எதிர்பார்க்கவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. ஏனெனில், மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழித்து வருவதன் விளைவுதான் இந்தத் திடீர் தாக்குதலுக்குக் காரணம்! மனிதர்கள் இயற்கையை அழித்து விடுவதால் வைரஸானது எளிதில் பரவும் வகையில் இந்தச் சுற்றுச்சூழல் மாறிப்போய்விட்டது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

Sustainable Europe Research Institute-யின் தலைவர் ஸ்பேகன்பர்க் இந்த விஷயம் பற்றிக் குறிப்பிடும்போது, “மனிதன் சுற்றுச்சூழலை அழித்து வருவதால் ஏற்பட்ட தாக்கம்தான் இந்தக் கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்துக்கு முழுப்பொறுப்பும் மனிதர்கள்தான் ஏற்க வேண்டும், விலங்குகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வைராலஜி பிரிவில் பணிபுரிந்துவரும் ஆராய்ச்சியாளர் யான் சியாங் இதுகுறித்து கூறுகையில், “மனிதர்களான நாம் காடுகளை அழித்துக்கொண்டே போகிறோம். இதன் விளைவாகக் காடுகளிலிருந்து தொலைவாக இருந்த நாம், காடுகளுக்கு மிக அருகிலும் விலங்குகளுடன் கிட்டத்தட்ட நேரடித் தொடர்பிலும் இறந்துபோன விலங்குகளுக்கு மிக அருகிலும் நாம் புழங்கி வருகிறோம். இவற்றையும் முக்கியக் காரணங்களாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பன்றிக்குட்டிகள்

நியூசிலாந்தில் இருக்கும் மேசே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் ஹேமேன் இதுகுறித்துக் கூறுகையில், வனங்களை அழித்து மனிதர்கள் தமது இருப்பிடங்களை வனங்களுக்கு அருகில் கொண்டு செல்வதோடு அல்லாமல் மனிதன் வளர்க்கும் விலங்குகளை வனங்களுடன் உறவாட விடுகிறான். இதன் வாயிலாக நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் நமக்கு இதுபோன்ற தொற்றுக்கிருமிகள் தாக்குதல் இனி வருங்காலங்களில் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஆலிஸ் லேட்டின் என்ற ஆராய்ச்சியாளர் மேற்குறிப்பிட்ட கருத்தியலுக்கு ஆதாரம் சேர்க்கும் வண்ணம் நிபா வைரஸைக் கொண்டு எளிமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

“1990-களில் மலேசியாவில் நடந்த காடழிப்பினால் வௌவால்கள் காடுகளில் இருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தன. அவை பொதுவாகத் தொற்றுக்கிருமிகளைத் தனது உடம்பில் வைத்திருக்கக் கூடியவை, மனிதர்கள் வசிக்கும் பன்றிப் பண்ணைகளில் அருகில் உள்ள மரங்களில் தங்கியுள்ளன. காலப்போக்கில் பன்றிகள் மேய்ச்சலுக்கு அந்த மரங்களுக்கு அடியில் செல்லும்போது வௌவால்களின் எச்சங்கள் பன்றிகளின் உடலின் மேல்பட்டுத் தொற்றுக்கிருமிகள் பன்றிகளுக்கும் பரவியுள்ளன. ஏனெனில், இவை வௌவால்கள் மற்றும் பன்றிகள் இரண்டுமே குட்டிபோட்டு பால் ஊட்டும் விலங்கினத்தைச் சார்ந்தவை இதனால் தொற்றுக் கிருமிகள் பரவுவது மிகவும் எளிதாகியது” என ஆலிஸ் குறிப்பிடுகிறார்.

நிபா, பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ்கள் வௌவால்களிலிருந்து பன்றிக்கும் பன்றியிலிருந்து மனிதனுக்கும் பரவி இருக்கக்கூடும் என்றால் அங்கே நிச்சயமாக ஒரு மரபணு சார்ந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மரபணு மாற்றத்தைத்தான் Zoonotic Spillover என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.

வனங்களின் சூழலியல் சமநிலை குலைக்கப்படுவதையும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடலாம். கடந்த நூற்றாண்டில் மட்டும் மூன்று பங்காக இருந்த வனங்களின் உயிரினங்கள் இரண்டு பங்காகக் குறைந்துள்ளன. இதன் காரணமாக உணவுச் சங்கிலியில் உயர்ந்த இடத்தில் இருக்கும் உயிரினங்கள் அருகி வரும் பட்சத்தில் அதன் கீழே இருக்கும் சின்னச் சின்ன உயிரினங்களான எலி போன்றவை அதைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற அபாயகரமான தொற்றுக்கிருமிகளைச் சுமக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மரபணு மாறிய வைரஸ் மனிதர்களுக்குப் பரவியபின் வௌவால்களைக் கொல்வதால் எதையும் நிச்சயம் மாற்ற முடியாது. தவிர, வௌவால்களைக் கொல்வது மிகப்பெரும் சூழல் சீர்குலைவுக்கு வழிவகுக்கும். உலகளவில் மிக முக்கியமான தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கையை (Pollination) நம்பியே இருக்கிறது. தேனீக்கள், பூச்சிகள், வௌவால்கள்தான் இவ்வகைத் தாவரங்கள் பல்கிபெருகக் காரணம். ஆகையால், வௌவால்கள் அழிந்தால் அந்தத் தாவர இனங்களும் அழியும்.

ஏற்கெனவே காலநிலை மாற்றம், காடழிப்பு போன்ற காரணங்களால்தான் மலேசியாவில் பழந்திண்ணி வௌவால்கள் இடம்பெயர்ந்தன. அவற்றைக் கொன்று அதன் வாழ்வை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதால், நம் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகிவிடும். மொத்தத்தில் வௌவால்களை அழிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். வௌவால்களிடமிருந்தும் தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆகியவை மட்டுமே எதிர்வரும் காலங்களில் நோயிலிருந்து தப்பிக்கும் வழி!

விலங்குச் சந்தை

ஏனெனில், ஒவ்வோர் உயிரினமும் ஒவ்வொரு வகை உயிரினங்களை இரையாக உட்கொள்ளும். ஒரே உயிரினம் பல்வேறு வகையான உயிரினங்களை உண்ணும், சில உயிரினங்கள் ஒரே ஓர் இனத்தைச் சார்ந்தே இருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் மனிதனின் காடழிப்பால் ஏற்படும் உயிரினங்களின் அழிப்பில் ஏதேனும் ஒரு முக்கியமான மற்ற உயிரினங்களுக்குத் தேவைப்படுகின்ற ஏதோவோர் உயிரினம் அருகிவிடும் பட்சத்தில் அதைச் சார்ந்திருக்கக்கூடிய மற்ற உயிரினங்கள் இது போன்ற கிருமிகளைச் சுமக்க நேரிடும். இது எவ்வாறெனில் வழக்கமாகச் சாப்பிடப்படும் ஓர் உயிரினம் அழியும் பட்சத்தில் சில உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று உண்ண ஆரம்பிக்கும். இதன் காரணமாகப் புதிதாகச் சாப்பிடப்படும் உயிரினத்திலிருந்து ஏதேனும் கிருமிகள், சாப்பிடுகின்ற உயிரினத்திற்கும் வரலாம்.

ஐக்கிய நாடுகளின் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எலிசபெத் மருமா, “உலகம் முழுவதும் இயங்கி வரும் இது போன்ற வன விலங்குகளை விற்கும் சந்தைகளைத் தடை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது போன்ற விலங்குச் சந்தைகளின் பின்னால்தான் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் சார்ந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

சட்டவிரோதமாக விற்கப்படும் வனவிலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் ஒரு கறுப்புச் சந்தை உண்டு. இதை Illegal Wildlife Trade (IWT) என்பார்கள். இதைக் கண்காணிக்க அதுவும் குறிப்பாக அருகிவரும் உயிரினங்களுக்காக CITES (Convention on Illegal Trade in Endangered Species) என்ற அமைப்பும் உள்ளது.

வௌவால்கள்

இதுபோன்ற விலங்குச் சந்தைகளிலிருந்து வைரஸ் பரவலாம் என்பதால், வனவிலங்குகளை வளர்க்கவும் விற்பனை செய்யவும் சீனாவில் கொரானாவுக்குப் பின் தற்காலிகமாக விலங்குச் சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நிரந்தரமாக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

உலகமே லாக்டெளனில் இருக்கும்போது பசியாலும் வறுமையாலும் மக்கள் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடத் தொடங்குவார்கள், இதைத் எப்படித் தடுப்பது? ஒன்று வைரஸால் சாவார்கள் அல்லது பசியால் சாவார்கள். அடித்தட்டு மக்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?

ஆகவே, இத்தகைய சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களைக் பார்க்கும்போது விலங்குகளைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தேவையான இதர மாற்று வழிகளைக் காண்பதும் அவர்களை அந்தப் பாதையில் திருப்பி விடுவதும் மிக அவசியமான ஒன்று.

– ஜீ.கே.தினேஷ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.