உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் குப்திலின் அற்புதமான த்ரோவால் நூலிழையில் ரன் அவுட் ஆனார் தோனி. அதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்திய அணியின் ஒரே நம்பிக்கையும் நூலிழை ரன் அவுட்டில் தகர்ந்துபோனது. கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ரன் அவுட்டாக அது அமைந்தது. இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு சில நொடிகளில் கலைந்துபோனது. அப்போது மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு திரும்பிய தோனி இதுவரை கிரிக்கெட் போட்டிக்காக மீண்டும் மைதானத்திற்குள் நுழையவே இல்லை.

image

38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். தோனியின் ரசிகர்களுக்கு ஆறுதலாக வந்தது ஐபிஎல். பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனி தன் பலத்தை நிரூபிப்பார். அதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார் என ரசிகர்கள் நம்பினார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் விமர்சகர்களும் அதையே கூறினார்கள். இதற்கிடையே தோனியின் ஓய்வு குறித்து பலரும் கருத்துகளை கூறினார்கள். சிலர் தோனி ஓய்வு அறிவித்திருக்க வேண்டுமென கூறினார்கள். சிலர் தோனி ஓய்வு அறிவித்தால் அது இந்தியாவிற்கு பேரிழப்பு என கூறினார்கள்.

image

பலரும் பலதரப்பட்ட கருத்துகளை கூறிவந்தாலும் வழக்கம்போல் அமைதிகாத்தார் தோனி. பிட்னஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்திய தோனி ஐபிஎல் நெருங்கிய நேரம் சென்னைக்கு வந்து தீவிர பயிற்சியைத் தொடங்கினார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் ஐபிஎல்லை வைத்துதான் இருக்கிறது என ரசிகர்கள் முதல் கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்கள் வரை கூறிவந்த நிலையில் தோனியும் தன்னுடைய முழுக் கவனத்தையும் ஐபிஎல் பக்கம் திருப்பியதாகவே தெரிந்தது. தீவிர உடற்பயிற்சி, கிரிக்கெட் பயிற்சி என சரியாக சென்றுகொண்டிருந்த நேரம் குறுக்கே வந்தது கொரோனா. தற்போது ஐபிஎல் நடக்குமா என்றே தெரியவில்லை.

image

இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளைத் தெரிவித்தனர்.

image

தோனிக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து வாசிம் ஜாஃபர், சர்வேதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற பிராட் ஹாக் மற்றும் நாசர் ஹூசைன் ஆகியோர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அண்மையில் பேசிய நாசர் ஹூசைன் “தோனி இப்போது சென்றுவிட்டால் மீண்டும் கிடைக்கமாட்டார்” என தெரிவித்திருந்தார். கடைசியாக தோனியோடு சேர்ந்து வலைப்பயிற்சி செய்த ரெய்னா சமீபத்தில் ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் பேசிய போது, தோனியின் உடல் வயதான அறிகுறிகளைக் காட்டவில்லை. அவர் வித்தியாசமாகத் தெரிகிறார். வேறு ஏதோ புதிதாகச் செய்ய முயற்சிக்கிறார், வித்தியாசமான ஒன்று, புதியது. எனவே அவர் ஆட்டத்தை பார்க்கும் போது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

image

ஐபிஎல்லை வைத்து தோனியை கணிப்பது இருக்கட்டும், இந்திய அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பர் இப்போது இருக்கிறாரா என கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். வெளிநாட்டு தொடர்கள் போல உலகக் கோப்பையில் தினம் ஒரு கீப்பரை வைத்தெல்லாம் விளையாட முடியுமா என்பது ரசிகர்களின் கவலையாக உள்ளது.

பலரும் பல கருத்துகளை கூறிவந்தாலும் வழக்கம் போல் அமைதியாகவே இருக்கிறார் தோனி. தோனியின் விவகாரத்தில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதும், தன் மீதான கருத்துகள், விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் தோனி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

“எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர்” – ஹர்பஜன் சிங் புகழாரம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.