இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளது எனவே மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகனுக்குப் பால் இல்லாமல் தவித்த மும்பை பெண்ணின் வீடு தேடி சென்று உதவியுள்ளனர் ரயில்வே அதிகாரிகள்.

பால்

மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி என்ற தாய் பிரதமருக்கு அனுப்பிய ட்வீட் மூலம் இந்த உதவியைப் பெற்றுள்ளார். அந்த பெண் அனுப்பிய ட்விட்டர் பதிவில், “வணக்கம் சார், எனக்கு 3.5 வயதான ஆட்டிஸம் மற்றும் கடுமையான உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளது. ஒட்டகப் பால் மற்றும் குறைந்த அளவு பருப்பு வகைகளில் தான் அவன் உயிர்பிழைக்கிறான். நாடு முழுவதும் நீண்ட நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒட்டகப் பால் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. ஒட்டகப் பால் அல்லது ராஜஸ்தானில் கிடைக்கும் அதன் பால் பவுடராவது கிடைக்க எனக்கு உதவுங்கள்” என கடந்த 4-ம் தேதி பதிவிட்டுள்ளார்.

ரேணு குமாரியின் ட்வீட்டை பார்த்த புவனேஷ்வரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா, தன் பங்குக்கு அவரும் ட்விட்டர் மூலம் மக்களிடம் உதவி கேட்டுள்ளார். அதில் பலர் ராஜஸ்தானில் முன்னணி பால் நிறுவனமான அட்விக் ஃபுட்ஸை தொடர்புகொண்டு பால் பவுடர் பெறுமாறு போத்ராவுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி அதிகாரி போத்ராவும் அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். பின்னர் அவர்களும் குழந்தைக்கான பால் பவுடரை வழங்கியுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் இந்த பார்சலை கொண்டுவருவதில் சிக்கல் நீடித்துள்ளது.

ஒட்டகம்

பின்னர் ஐ.பி.எஸ் அதிகாரியின் ட்வீட்டை பார்த்த வட மேற்கு ரயில்வே அதிகாரிகள் தாமாக வந்து குழந்தைக்கு உதவி செய்துள்ளனர். மும்பை வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில் மூலம் 20 லிட்டர் பால் தயாரிக்கப் பயன்படும் பால் பவுடரை மும்பை கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இறுதியாக ஒட்டக பால் நேற்று முன் தினம் இரவு மும்பை கொண்டுவரப்பட்டு அது ரேணுவின் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

“20 லிட்டர் ஒட்டக பால் மும்பை வந்தடைந்தது. இந்த பாலை நகரத்தில் தேவைப்படும் மற்ற பிற குடும்பத்தினருக்கும் ரேணு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பால் கொடுப்பதற்காகச் சரக்கு ரயிலை நிறுத்தம் இல்லாத இடத்தில் நிறுத்தி உதவிய வடமேற்கு ரயில்வே அதிகாரி தருண் ஜெயினுக்கு நன்றி” என ஐ.பி.எஸ் அதிகாரி போத்ரா மீண்டும் தன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றிப் பேசியுள்ள ரயில்வே அதிகாரி தருண் ஜெயின், “ அதிகாரி போத்ராவின் ட்விட்டர் பதிவு மூலம்தான் இந்த விஷயத்தை நாங்கள் கவனித்தோம். இது பற்றி மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி பஞ்சாபின் லுதியானாவில் இருந்து ராஜஸ்தான் வழியாக மும்பையின் பாந்த்ரா வரும் ஒரு சரக்கு ரயிலில் பால் பவுடரை கொண்டுவர முடிவு செய்தோம். அதனால் நிறுத்தமே இல்லாத ராஜஸ்தானின் ஃபால்னாவில் ரயிலை நிறுத்தி பால் பவுடரை பெற்றுக்கொண்டு மும்பையில் அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயான எங்களைப் பொறுத்தவரை இது வணிக ரீதியிலான லாபங்களைப் பார்க்க வேண்டிய நேரமில்லை. நாங்கள் பயணிக்கும் பகுதியில் இருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.

சரக்கு ரயில்

எங்கள் வடமேற்கு ரயில்கள் நாட்டில் 18 மாவட்டங்களில் ஓடுகின்றன. தொடர்ந்து மக்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்” என அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புவனேஷ்வரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் வடமேற்கு ரயில்வே நிர்வாகத்தின் செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் ரயில்வேயின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.