கும்பகோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தன்னுடைய குடும்பத்தில் நிலவும் பொருளாதார சிக்கலால் வீட்டின் மேற்கூரையைத் தார்பாய் கொண்டு மூடியுள்ள நிலையிலும் கிராம மக்களுக்கு இலவசமாக மாஸ்க் தயாரித்து கொடுத்து வருகிறார். இவரை பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே உள்ள ஒழுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருடைய மனைவி ஆனந்தாயி. மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரையும் கொரோனா விழிப்புணர்வு பணியில் அரசு ஈடுபடுத்தி வருகிறது.
ஆனந்தாயியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட வருவதுடன் அந்தப் பணி முடிந்த பிறகு, தன் வீட்டிலேயே அரசு பொங்கலுக்கு வழங்கிய இலவச வேட்டி, சேலைகளை கொண்டு மாஸ்க் தயாரித்து, அதனை இலவசமாக ஒழுகச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார். இவருடைய குடும்பத்தில் பொருளாதார சிக்கல் இருக்கிறது என்பதை அவர் வீடும் வீட்டின் மேற் கூரை தார்பாய் கொண்டு மூடப்பட்டிருப்பதுமே காட்டிவிடுகிறது. ஆனாலும் ஏழை மக்கள் மாஸ்க் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தினமும் மாஸ்க் தைத்து கிராம மக்களுக்கு கொடுத்து வரும் ஆனந்தாயியை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஆனந்தாயி கூறுகையில், “கொரோனா விழிப்புணர்வு பணிக்காகச் செல்லுவதற்காக மாஸ்க் வாங்க கடைக்குச் சென்றேன். அப்போதுதான் குறைந்த விலை கொண்ட மாஸ்க் அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. மேலும், நான் விழிப்புணர்வு பணிக்குச் செல்லும் இடத்தில் எல்லாம் பலர் மாஸ்க் அணியாமல் இருந்தனர். கிராமப்புறத்தில் பின் தங்கியவர்கள் மாஸ்க் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் அவர்கள் பொருளாதாரம் இருப்பதே இதற்குக் காரணம்.
ஒரு மாஸ்கை நம்மாலேயே வாங்க முடியவில்லையே? வேலையிழந்து தவிக்கும் விவசாயக் கூலிகள், தொழிலாளர்களின் குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்த்தேன். அத்துடன் அதிக விலைக்கு விற்கும் மாஸ்கை ஏழை மக்களால் வாங்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். மாஸ்க் அணியாமல் வெளியே சென்று வந்தால் பிரச்னை ஏற்படும் என்பதுடன் மாஸ்க் இல்லாததால் அவர்கள் ஒரே இடத்தில் முடங்கியிருப்பதையும் அறிந்துகொண்டேன். இதையடுத்து, உடனடியாக மாஸ்க் தைத்து கொடுக்கும் முயற்சியில் இறங்கினேன். எனக்கு தையல் தெரிந்திருந்தது பெரும் உதவியாக இருந்தது.

எனது வீட்டில் இருந்த அரசு கொடுத்த இலவச வேட்டி, சேலையில் முகக்கவசம் தைத்து எங்க பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன். அத்துடன் துாய்மைப் பணியாளர்கள், மாஸ்க் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் கொடுத்து வருகிறேன்.
இதைப் பார்த்த எங்கள் ஊர் பஞ்சாயத்துத் தலைவர், என்னை பாராட்டியதுடன் இன்னும் நிறைய வேட்டி சேலைகள் போன்ற துணிகளை வழங்கினார். அதனை கொண்டு தினமும் மாஸ்க் தைத்து கொடுத்து வருகிறேன். விழிப்புணர்வு பணிக்குச் சென்று விட்டு, வீட்டையும் கவனித்துக்கொண்டு தைக்கும் பணியில் ஈடுபடுவதால் ஒரு நாளைக்கு 50 மாஸ்க்தான் தைக்க முடிகிறது. மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியே செல்லக் கூடாது, மாஸ்க் கிடைக்காமல் யாரும் இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு என்னால் முடிந்த அளவு வேகமாகச் செயல்படுகிறேன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். எனவே, யாரையும் கொரோனா நோய் தாக்காமல் இருக்க வேண்டும். அவை பரவாமல் தடுக்க வேண்டும். இதுதான் என் ஆசை. அதனால் என்னுடைய கஷ்டத்தையும் வறுமையையும் கண்டு கொள்ளவில்லை. என்னுடைய இந்தச் செயலைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.