இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் TOEFL மற்றும் GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் என எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS) அமைப்பு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகளும் நுழைவுத்தேர்வுகளும் காலவரம்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு TOEFL மற்றும் GRE சர்வதேசத் தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இதுதொடர்பாகப் பேசிய டோஃபல் தேர்வின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால், “உலகம் முழுவதும் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த டோஃபல் மற்றும் ஜிஆர்இ தேர்வுகளை இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மாணவர்கள் உயர்ந்த தரம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் வீட்டிலிருந்தே தேர்வுகளை எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வகுப்பறைகளை மனிதர்கள் கண்காணிப்பது மாதிரியே செயற்கை நுண்ணறிவு வசதியைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் தேர்வுகள் நடத்தப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டோஃபல் தேர்வு மூலம் மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சு, எழுத்து, வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் போன்றவை சோதிக்கப்படுகின்றன. அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெறும் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற முடியும். ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்குப் பிடித்த தேர்வு நேரங்களைத் தேர்ந்தெடுத்து, வீட்டில் இருந்தே தேர்வை எழுதலாம். தேர்வு எழுதும் தேதிகளுக்கான பதிவுகள் ஜூன் மாதம் முதல் தொடங்குகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? எண்ணிக்கை விவரங்கள்!!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM