கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலையில் இருந்து தள்ளி இருக்கின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இல்லை. பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மனிதர்கள் கூட்டம் நிரம்பி வழியும் பல இடங்களில் இன்று பறவைகள் மட்டுமே இருக்கின்றன.
பல இடங்களில் விலங்குகள் சாலைகளில் வலம் வருகின்றன. இப்படி கொரோனாவால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நேரத்தில் இயற்கை தன்னை மீட்டுக்கொண்டுள்ளது. வாகன புகை, தொழிற்சாலை புகை என காற்று மாசால் நிரம்பும் இந்தியா தற்போது தூய்மையான காற்றை வீசிக்கொண்டு இருக்கிறது. அதிக காற்று மாசுல்ல நகரங்கள் எனக் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று தரமான காற்றுள்ள நகரம் என்ற தரக்குறியீட்டை பெற்றிருக்கின்றன.
காற்றின் மாசு குறைந்துள்ள காரணத்தினால் பஞ்சாப் மாநில மக்களுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இமயமலையின் ஒரு பகுதியாக இருக்கும் தால் ஆதர் மலையை கண்டு ரசிக்கின்றனர். பல இளைஞர்கள் தற்போது தான் முதன்முதலாக தால் ஆதர் மலையை வீட்டிலிருந்து பார்ப்பதாக சொல்கின்றனர். கிட்டத்தட்ட ஜலந்தர் பகுதியில் இருந்து அந்த மலைத்தொடர் 200கிமீக்கு அப்பால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதி மக்களுக்கு தால் ஆதர் மலை காட்சி தருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டு வாசலில் நின்றுகொண்டே இமயமலையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நான் ஏன் சைவ உணவுக்கு மாறினேன் ? விராட் கோலி விளக்கம் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM