கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் உலா வந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சாலைகளில் செல்வோரை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இதில் இளைஞர்களே பெரும்பாலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இன்று அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மருந்து, காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் ஒருவருக்கு மேல் செல்வது, ஊர் சுற்றுவதற்காக வாகனங்களில் செல்வது என தேவையற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு கேள்விக்கு பதில் கேட்பது, தோப்புகரணம், சிரமமான உடற்பயிற்சி போன்ற தண்டனைகள் வழங்கி உறுதிமொழி எடுக்கச் செய்து திருப்பி அனுப்பினர்.
பலர் பல்வேறு காரணங்களை கூறி தண்டனையிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும் பெரும்பாலானோர் தண்டனை பெற்றே செல்வதைக் காண முடிந்தது. போலீசாரின் நூதன தண்டனையால் அழகியமண்டபம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் வெளியே சுற்ற செல்வோரின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு தோனி ஒரு லட்சம் மட்டுமே கொடுத்தாரா?: ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM