“பட்டாசு வாங்க இரண்டு பேர் கடைக்குப் போறாங்க. அங்கேயிருந்த பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி. விலை 176. `இது எப்படி வெடிக்கும்?’னு கேட்டாங்க. `இது கூட்டு ராக்கெட். இத இங்கே பத்த வெச்சா… ஜோடியா பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்!’ எனச் சொன்னார் கடைக்காரர். `வேணாம்ண்ணே…’ எனச் சொல்லிவிட்டு, அடுத்த வெடியைப் பார்க்கிறார்கள். அந்த வெடியின் பெயர் சிலோன் வெடி. `இந்த வெடி நிமிஷத்துக்கு நிமிஷம் கலர் மாறும். நொடிக்கு நொடி நிறம் மாறும். பத்திக்கிற மாதிரி இருக்கும். ஆனா, வெடிக்காது.

மீம்ஸ்

இன்னொரு கடை கோயம்பேடு பயர் ஒர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார். வெடியை வாங்கி பத்த வெச்சாலும் வெடி வெடிக்கலை. ஏன்னு கேட்டா வெடி எப்பவும் தண்ணிலேயே இருந்ததால முழுசா பத்தாமப் போச்சு. வியாபாரமும் படுத்துப் போச்சு. விற்காத சரக்கை எல்லாம் மொத்தமா எடுத்துக்கிட்டு அந்த ஓனர் ரெண்டு நாளைக்கு முன்னாடி டெல்லிக்குப் போய் கடை விரிக்கப் பார்க்கிறாரு…’’

– மக்கள் பிரச்னைகள் பேசப்படும் சட்டமன்றத்தில் 2013 அக்டோபர் 29-ம் தேதி இப்படித் திரி கொளுத்திப் போட்டார் விஜயபாஸ்கர். அப்போது ஜெயலலிதா அடக்க முடியாமல் `வெடி’ சத்தத்தோடு குலுங்கிச் குலுங்கி சிரித்தார். மறுநாள் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர்.

அன்றைக்கு ஜெயலலிதாவைக் குளிர்விக்க கதை மாலையைக் கட்டித் தொங்க விட்ட விஜயபாஸ்கர், இன்று தன்னைப் பற்றியே புகழாரக் கதைகளைப் பரப்பியதால் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். விஜயபாஸ்கருக்கு என்ன நடந்தது?

`வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இரவு 8 மணி ஆனதும் வெள்ளைச்சாமி பாட ஆரம்பித்துவிடுவார். அதுபோலத்தான் காலை 10 மணி ஆனதும் அமைச்சர் ஜெயக்குமார் தவறாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். கொரோனா தாக்கத்துக்குப் பிறகு, ஜெயக்குமார் இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆக்கிரமித்துக் கொண்டார். கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்திலும் விஜயபாஸ்கர்தான் முன்னிலை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிட விஜயபாஸ்கரின் பெயர்தான் மீடியாவில் அதிகம் அடிபட ஆரம்பித்தது.

பிரஸ் மீட்டில் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ்

இப்படி தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மருத்துவமனைகளுக்கு விசிட் அடித்துக்கொண்டிருந்த விஜயபாஸ்கர், இப்போது ஆக்டிவ் இல்லாமல் அடங்கியிருக்கிறார். அவரை முடக்கிப் போட்டதற்குப் பின்னால் இருப்பது அரசியல் என கிசுகிசுக்கிறார்கள் அவரது கட்சியினர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து, தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தார் விஜயபாஸ்கர். அப்போது சட்டசபை நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்று புள்ளிவிவரங்களோடு விளக்கம் எல்லாம் கொடுத்தார். அதன்பிறகு ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவமனைகளுக்கு விசிட் என பிஸியாக பணியாற்றி வந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விவரம் போன்றவற்றைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிந்து வந்தார். தினமும் தவறாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். கொரோனா தொடர்பான அப்டேட்கள் அனைத்தும் விஜயபாஸ்கர் மூலமே வெளிப்பட்டன. மற்ற அதிகாரிகள் யாரும் அதுபற்றி அதிகாரபூர்வமாகப் பேசவில்லை. விஜயபாஸ்கர் பிரஸ் மீட் நடத்தும்போது சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் அவருக்கு அருகில் இருப்பார். இப்போது இரண்டு நாள்களாக பீலா ராஜேஷ்தான் மீடியாவுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பீலா ராஜேஷ் பிரஸ் மீட்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பற்றிப் பேசினால் விஜயபாஸ்கர் பற்றியும் பேசாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு விஜயபாஸ்கரின் புகழ் பரவியது. கொரோனா மீம்ஸ்களுக்கு நிகராக விஜயபாஸ்கரைப் பற்றிய மீம்ஸ்கள் றெக்கை கட்டின. அத்தனை மீம்ஸ்களும் விஜயபாஸ்கரைப் பாராட்டும் மீம்ஸ்கள்தான்.

அப்படித்தான் `ஏழாம் அறிவு’ படத்தில் இருந்து ஒரு காட்சியை உருவி, மீம்ஸ் தயாரித்திருந்தார்கள். அந்தப் படத்தில் வரும் வில்லன் சீனாவில் இருக்கும் அவனது குருவிடம் பேசும் காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் வரும் டயலாக்கை மாற்றி அந்த வீடியோ மீம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் வரும் வசனம் இதுதான்.

ஏழாம் அறிவு படத்தில்

வில்லன்: “ஹலோ நான் கொரோனா பேசுறேன். ஒரு மாநிலத்துல தாக்க வந்தேன். என்னால முடியவில்லை. அது ஏன்னு எனக்கு தெரியணும். குருகிட்ட பேசணும்.”

குருவின் சிஷ்யர்: “கொரோனாவால ஒரு மாநிலத்தைத் தாக்க முடியலையாம்.”

குரு: “அதற்கு வாய்ப்பே இல்லை. கொரோனாவால எல்லா நாட்டையும் தாக்க முடியும். கொரோனா இப்ப எங்கே இருக்கு?”

ஏழாம் அறிவு படத்தில்

குருவின் சிஷ்யர்: “இந்தியாவில் இருக்கு. அங்கேதான் ஒரு மாநிலத்தைத் தாக்க முடியலையாம்.”

குரு: “வேகமா அங்கிருந்து கிளம்பிடச் சொல்லு.”

வில்லன்: “வர முடியாது. என்னால ஏன் தாக்க முடியல.”

குரு: “பாஸ்கர்… அது விஜயபாஸ்கரோட மாநிலம்.”

வில்லன்: “அவர் ஊரா… நான் உடனே கிளம்பிடுறேன்.”

மீம்ஸ்

`ஏழாம் அறிவு டாக்டர் விஜயபாஸ்கர் வெர்ஷன்’ என்ற தலைப்பில் வரும் அந்த வீடியோ தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அந்த வீடியோ முடியும்போது சூர்யா போர்வைக்குள் இருந்து குழந்தை ஒன்று வெளியே ஓடி வரும் காட்சி இடம்பெற்றிருக்கும். சூர்யாவுக்குப் பதில் விஜயபாஸ்கரின் முகத்தை அதில் பொருத்தியிருந்தார்கள். ஓடி வரும் குழந்தையின் மேல் `தமிழ்நாடு’ என எழுதப்பட்டிருக்கும்.

இந்த வீடியோ எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் கொதிக்க வைத்து விட்டதாம். அந்த வீடியோவில், எந்த இடத்திலும் எடப்பாடி பற்றியோ அ.தி.மு.க ஆட்சியைப் பற்றியோ சொல்லாமல் முழுக்க முழுக்க விஜயபாஸ்கரின் புகழ் மட்டுமே பாடப்படும் மீம்ஸாக தயாரிக்கப்பட்டதை ஆளும்கட்சி ரசிக்கவில்லை. குறிப்பாக, “அது விஜயபாஸ்கரோட மாநிலம்” என்கிற டயலாக், கடும் கோபத்தை எடப்பாடிக்கு ஏற்படுத்திவிட்டதாம். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்” எனச் சொல்லியிருந்தார். இப்படி எடப்பாடியை முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகள் நடந்து வரும் சூழலில், விஜயபாஸ்கரை திடீரென்று முன்னிறுத்துவது யார் என்கிற விசாரணையை உளவுத்துறையை முடிக்கிவிட்டபோது, அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவைக் கைகாட்டியிருக்கிறார்கள் சிலர்.

விஜயபாஸ்கர் ஆய்வு

“அ.தி.மு.க-வின் ஐ.டி விங்க்கைச் சேர்ந்த சிலர்தான் விஜயபாஸ்கருக்கான பிரமோஷன்களைச் செய்தது என முதல்வருக்கு ரிப்போர்ட் அளித்திருக்கிறது உளவுப் பிரிவு. அதன் பிறகுதான் விஜயபாஸ்கரின் குதிரை பாய்ச்சலுக்குக் கடிவாளம் போட்டார்கள். `முக்கியமான தருணங்களில் மட்டும் பங்கேற்றால் போதும். அடக்கி வாசிக்கவும்’ என விஜயபாஸ்கருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால்தான், இப்போது பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார். விஜயபாஸ்கர் பெரிதாகப் பங்கேற்கவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் போனபோது மட்டும் விஜயபாஸ்கரை அழைத்திருக்கிறார்கள். வீட்டிலேயே இருக்கும் விஜயபாஸ்கர் தன் இருப்பைக் காட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார். எத்தனை நாள் அவர் முடங்கி இருப்பார் எனத் தெரியவில்லை” என்றார்கள் சுகாதாரததுறை உயர் அதிகாரிகள் சிலர்.

விஜயபாஸ்கர் புகழ் பாடும் மீம்ஸ்கள் வரிசைகட்ட ஆரம்பித்ததுமே அதைத் தடுக்க பதிலடியாக மீம்ஸ்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படிதான் “கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இது பெரிய ஆபத்தில் முடியுமே” என மக்கள் பேசுவது போலவும் உடனே ஒருவர், “அதைவிடுங்க.. விஜயபாஸ்கர் அய்யா மட்டும் இல்லையென்றால்” எனக் கிண்டல் அடிப்பது போலவும் மீம்ஸ் ஒன்று வெளியானது.

விஜயபாஸ்கர்

Also Read: `இப்படியொரு தொற்றுநோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி #corona

இப்படியான நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனோ தொடர்பாக அளித்த பிரஸ் மீட்டில் “தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு. கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 3,018 வென்டிலேட்டர்கள் உள்ளன” எனப் பேட்டி அளித்திருக்கிறார்.

“இந்த வெடி நிமிஷத்துக்கு நிமிஷம் கலர் மாறும். நொடிக்கு நொடி நிறம் மாறும்” என விஜயபாஸ்கர் முன்பு பேசிய வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.