இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக விலகல் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் டெல்லியில் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக 50 சதவிகித பொருள்களும் வழங்கப்படும். முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியை பொறுத்தவரையில் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் அங்கு தங்கி பணிபுரிகின்றனர். ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானதும் மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்படத் தயாராகினர். டெல்லி சாலைகளில் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து வசதியில்லாததால் கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கிவிட்டனர். டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து சிறப்பு பேருந்து மூலம் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பேசியுள்ள முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், “ நிறைய மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகின்றனர். அவர்களை நான் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவிக்கும்போதே நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்றார். இதுவே ஊரடங்கு உத்தரவுக்கான மந்திரமாக நான் பார்க்கிறேன். இதனை நீங்கள் பின்பற்றாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு வெற்றிப்பெறாது. 2 அல்லது 4 பேருக்கு கொரோனா இருந்தால் அது அப்படியே மற்றவர்களுக்கு பரவ ஆரம்பித்துவிடும். இதனால் நீங்களும் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் உங்கள் கிராமங்களுக்கு சென்றால் உங்களால் அங்கிருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த வைரஸானது நாடு முழுவதும் பரவி விட்டால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக காரியமாகும். வளர்ந்த நாடுகளான அமெரிக்காவிலும், இத்தாலியிலும் என்ன நிலைமை என நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நல்ல வேளையான இந்தியா அந்த நிலையில் இல்லை. ஆனால் கூட்டமாக சென்றால் நாமே ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதுபோல் ஆகும். டெல்லி அரசானது தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வாடகையை கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். யாருக்காவது வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த தொகையை அரசே செலுத்தும். இந்த ஊரடங்கில் மீதமுள்ள 18 நாள்களில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை படியுங்கள். குடும்ப வாழ்கையில் நாம் அதைத்தான் சந்திக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.