கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தொடர்பாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் எல்லோரும் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நோயை எதிர்த்துப் போராடும் பணியில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகிறனர்.

இந்நிலையில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வை எடுத்துப் பேசும் வகையில் சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவர்களின் அவலநிலை இந்த வீடியோ அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதால் பலரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் பெரும்பாலும் அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து விலக்கி இருக்க வேண்டியுள்ளது. அதைத்தான் இந்த வீடியோ வீரியமாகப் பேசுகின்றது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார். அதனைப் பார்த்த அவரது மகன் வாசல்வரை ஓடிவந்து அவரை அரவணைக்க முயல்கிறான். ஆனால் அவர் தன்னை தொடவிடாமல் தள்ளிப் போய் தலையைப் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்து கொள்கிறார். அவரது மகன் ஆர்வம் குறைந்து அப்படியே திகைத்துப் போய் நிற்கிறான். இந்தக் காட்சி பலவிதமான சோக செய்திகளைச் சொல்கிறது. பக்கம் பக்கமாக எழுத வேண்டிய விஷயங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஒருசில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ இன்றைய உலக நடைமுறையை முழுமையாகப் பேசும்படி உள்ளது.

இந்த வீடியோவில் உள்ள மருத்துவர் அவரது மருத்துவ உடையைக் கழற்றாமல் இருப்பதும், அவர் தன் மகனைத் தொடவிடாமல் தடுப்பதும் ஏன் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர் ஒரு கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர். ஆகவே அவர் தன் மகனுக்கும் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுகிறார். இந்த வீடியோவை வாஷிங்டனில் உள்ள மைக் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதுதான் இப்போது வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ரீ- ட்வீட்களையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கருத்திட்டும் வருகின்றனர். அதில் ஒருவர் “இதைப் பார்க்கவே இதயம் வலிக்கிறது. அந்த மருத்துவர் ஒரு ஹீரோ” என்று கூறியுள்ளார். மற்றொருவர் “கடவுள் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக” எனக் கூறியுள்ளார்.
A Saudi doctor returns home from the hospital, tells his son to keep his distance, then breaks down from the strain. pic.twitter.com/0ER9rYktdT
— Mike (@Doranimated) March 26, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM