“WTF is” பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார்.
அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,“ உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம்.
என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது” என்றார்.
ஷிவோன் ஜிலிஸ்
யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் – எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.
