“ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?” – அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது.

ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இபிஎஸ், ஓபிஎஸ்

இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.

இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும்” என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன.

எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள்.