`ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை’ – என்ஐஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 அக்டோபர் 25 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி `கருக்கா’ வினோத் (42) காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கருக்கா வினோத்

இந்த வழக்கு விசாரணையை முடித்த என்ஐஏ, 680 பக்க குற்றப் பத்திரிகையை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடந்துவந்தது.

இதற்கிடையில், நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசிய சம்பவமும் பேசுபொருளானது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

‘கடந்த 2023-ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.