டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட்டு, விளையாட்டு நகரை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்படவிருக்கின்றன.
அனைத்து விளையாட்டுகளுக்கான அரங்கங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வீரர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் இந்த விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் திட்டம் முன்மொழியப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் இன்னும் திட்டமிடல் நிலையில்தான் இருக்கிறது. அரசு உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு நகரங்களை ஆராய்ந்து சரியான அம்சங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இதுவரை காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
இப்போதே இந்த திட்டம் எதிர்ப்புகளைப் பெறத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், `இது இந்தியாவின் வரலாற்றில் இருந்து ஜவஹர்லால் நேருவின் பெயர், மரபு மற்றும் பங்களிப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் திட்டம்’ என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தால் 15-ம் நூற்றாண்டு லோடி கால கல்லறை ஒன்றும் அபாயத்தில் உள்ளதாக கூறியிருக்கும் அவர், இங்கிருந்து 100 கி.மீ தொலைவில் ஹரியானா மாநிலம் 100 ஏக்கர் பரப்பளவில் ‘மிஷன் ஒலிம்பிக் 2036’-ன் கீழ் சர்வதேச விளையாட்டு நகரம் மற்றும் ஐந்து சிறப்பு மையங்களைக் கட்டி வருவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் இது வளர்ச்சி அல்ல என்றும்“விளையாட்டு நகரங்களை எங்கும் கட்டலாம். ஆனால் ஒரு நாட்டின் ஆன்மாவும் வரலாறும் அழிக்கப்பட்டுவிட்டால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.” எனக் மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின்போது ரூ.961 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது, சமீபத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ரூ.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது.
பாரா தடகள போட்டிகளுக்காக வீல் சேர் மற்றும் லிஃப்ட் மூலமாக கழிவறை மற்றும் மைதானத்தின் பிற இடங்களை அணுகும் வகையில் புதுப்பிக்கப்பட்டது.
2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2017 U17 FIFA உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன.

புதிய திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர். பிரதான மைதானம் இடிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தெரிவிக்கிறது.
102 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதான வளாகத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அதைப் பயன்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சகம் விரும்புகிறது.
கத்தாரில் உள்ள தோஹா விளையாட்டு நகரம் போன்ற ஒன்றை உருவாக்க அமைச்சகம் முனைப்புக் காட்டுகிறது. அது 618 ஏக்கர் பரப்பளவில் 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டுமானமாகும். 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
