RSS: “நம்மால் குரு தட்சணை வாங்க முடியுமா?” – கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பிரியங்க் கார்கே

ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு ஒவ்வொரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தரங்கக் கூட்டம் நடத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அப்போது, கர்நாடக காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான பிரியங்க் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“ஆர்.எஸ்.எஸ் உண்மையிலேயே தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்தால், வெளிப்படைத்தன்மையுடனும் சட்டப்பூர்வமாகவும் செயல்படும் லட்சக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களைப் போல ஏன் பதிவு செய்யக்கூடாது?

பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவர் ஏன் மேம்பட்ட பாதுகாப்பை பெறுகிறார்? அவரை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இணையாக வைப்பது ஏன்? ஆர்.எஸ்.எஸ்-க்கு யார் நிதியளிக்கிறார்கள்?

RSS 100: மோகன் பகவத்
RSS 100: மோகன் பகவத்

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் ஆர்.எஸ்.எஸ்-னை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பெங்களூரில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கருத்தரங்கக் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:
“ஆர்.எஸ்.எஸ் 1925-ல் தொடங்கியது. நாங்கள் பிரிட்டிஷ் அரசில் பதிவு செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?”

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. சட்டம், பதிவு செய்யப்படாத தனிநபர்களின் அமைப்புகளையும் அங்கீகரிக்கிறது. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம்.

மூன்று முறை தடை செய்யப்பட்டோம்; ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் எங்கள் அமைப்பின் தடையை நீக்கியுள்ளன. எனவே, நாங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை.

அமைப்பு பெறும் நன்கொடைகள் அனைத்தும் குரு தட்சிணா (ஆசிரியரின் கௌரவ ஊதியம்). இது வருமான வரி எல்லைக்குள் வராது. பல விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை; இந்து தர்மமும் கூட பதிவு செய்யப்படவில்லை,” எனக் குறிப்பிட்டார்.

பிரியங்க் கார்கே
பிரியங்க் கார்கே

இதற்கு பதிலளித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
“ஆர்.எஸ்.எஸ் வரி வரம்பிற்குள் வரக்கூடும் என்று அஞ்சுவதால், ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்ய மறுத்துவிட்டது. நான் அல்லது நீங்கள் தனிநபர்களின் குழுவையோ அல்லது மக்கள் சங்கத்தையோ தொடங்கி குரு தட்சிணாவாக நன்கொடைகள் கோர முடியுமா?

வருமான வரித் துறை மற்றும் ED அதை அனுமதிப்பதா? அரசு அதை அனுமதிப்பதா? பெறப்படும் தொகை வரி வரம்பிற்குள் வரும் என்பதால் அவர்கள் பதிவு செய்யவில்லை.

இந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களை பதிவு செய்யவில்லை. மேலும் அவர்கள் சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மேலே இருக்க விரும்புகிறார்கள்,” எனக் குறிப்பிட்டார்.