வாக்காளர் விவரங்கள் குறித்த பூர்த்திசெய்யப்பட்ட படிவங்கள், சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு அளித்தார்.
அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட் மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்றுவந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட் மூலமாக பெற்றால், முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, வீடு வீடாகச்சென்று வழங்கப்படும் வாக்காளர் விவரங்கள் குறித்த பூர்த்திசெய்யப்பட்ட படிவங்கள், சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும்” என மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவர் கூறியதாவது, “எஸ்.ஐ.ஆர் சீர்திருத்த பணி நடந்துட்டு இருக்கு. இதில் தேர்தல் கமிஷன்ல இருந்து எல்லா பூத்துக்களுக்கும் ஒரு பி.எல்.ஓ பணியில் அமர்த்தி உள்ளனர். பி.எல்.ஓ அடித்தட்டில பணியாற்றக்கூடிய மக்கள் நல பணியாளர்கள் தான் சில இடங்கள்ல சில பஞ்சாயத்து தலைவர்கிட்ட பாரத்தை வழங்கி வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணி நடக்குது. அது தவறு என்று சொல்லி உள்ளோம். வாக்காளருக்கு கொடுக்கக்கூடிய அந்த மனுக்களை சரி பார்த்து அதை பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பூத் ஏஜெண்ட் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லி உள்ளனர்.
இதனை சிலர் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அவர்கள் தனக்கு வேண்டாத பாரத்தை நிராகரித்து விடுவார்கள் என்று ஐயப்பாடு இருக்கின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை சரியாக இருக்கும். எந்தவிதமான தவறு நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் உங்களுடைய பிரதிநிதிகள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை சரி செய்து கொடுக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
`இதில் ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது என சோசியல் மீடியாவில் கூறப்படுகிறதே?’ என்ற கேள்விக்கு, “அது உண்மைதான். தவறு நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் கிராமத்துல 245 வாக்காளர் இருக்காங்க அந்த கிராமத்துல அந்த 245 வாக்காளர்களையும் ஒரு தனி நபர் ஒரு இடத்தில் அமர்ந்து அங்கு வந்து வாங்க சொல்கிறார். அது அனைவரும் போய் சேராது. இதற்காகவே நாங்கள் இப்ப புகார் கொடுத்திருக்கிறோம். தி.மு.க-வின் தலையீடு ஆங்காங்கே இருப்பது உண்மை. அதை சரி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்று சொன்னால் இது ஒரு சரியான ஒரு நடைமுறையாக இல்லாமல் போகும். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறி உள்ளார்.

`2026 தேர்தலுக்கு பின் SIR செய்ய வேண்டும் என தி.மு க கூட்டணி கட்சிகள் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு?’ பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “அது தவறு 2002ல் SIR நடந்ததே? அப்போது காங்கிரஸ் ஆட்சிதான். அப்போது அ.தி.மு.க.வோ, மற்ற கட்சிகளோ இதற்காக கூக்குரல் எழுப்பவில்லை. இன்றைக்கு தி.மு.க கூக்குரல் எழுப்பக் காரணம் அவர்களுக்கு பயம். SIR என்று சொன்னாலே அவர்களுக்கு பயம். ஓராண்டு காலமாக அண்ணா யுனிவர்சிட்டி விவகாரத்திலிருந்தே சார் என்று சொன்னாலே தி.மு.வு-க்கு பயம் இருக்கு.
சரியான வாக்காளர்களை நிராகரிக்க கூடாது. போலி வாக்காளர்களை சேரக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. தேர்தல் கமிஷன் சரியாக இருக்கிறது. ஆனால் ஆங்காங்கே அதிகார துஷ்பிரயோகம் நடந்த வண்ணம் இருக்கிறது. எனவே தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது இன்றைய காலகட்டத்திற்கு தேவைதான்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் போலியான வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களையப்பட வேண்டும். ஒருவருடைய வெற்றியை தோல்வியாக்குவதும், தோல்வியை வெற்றியாக்குவதும் போலி வாக்காளர்களே. அவர்களை களை எடுக்கவே இந்த எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. மனப்பூர்வமாக வரவேற்கிறது. எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார். நாங்கள் விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக வரவேற்கின்றோம்.” என்றார்,
“பா.ஜ.க, அதிமுக இணைந்து செயல்பட விரும்புவதாக செங்கோட்டையன் கூறியருக்கிறாரே..?”
பதில்: “எடப்பாடி எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் திடமான முடிவு தைரியமான முடிவு நியாயமான முடிவு நேர்மையான முடிவு. யார் சொல்லியும் அவர் எடுக்க மாட்டார்.

யார் சொல்லியும் அவர் கேட்க மாட்டார். அவர் மனசுக்கு நியாயமானதை, தொண்டருடைய கருத்துக்களை உள்வாங்கி எடுக்கின்ற நடவடிக்கையாக இருக்கும். கட்சியினுடைய தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எப்படி கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.” என்றார்.
“2002- ல் SIR செய்த போது ஒட்டுமொத்தமாக பீகார்ல 60 லட்சம் நீக்கவில்லையே? படிவம் இவ்வளவு கடுமையாக இல்லையே?” என்ற கேள்விக்கு, “போலி வாக்காளர்கள் 1 கோடி இருந்தாலும் நீக்கதான் செய்வார்கள். உண்மையான வாக்காளர்களை நீக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது, சேர்க்கப்பட வேண்டும். போலி வாக்காளர்கள் கட்டாயம் நீக்கப்பட வேண்டும். இரட்டை வாக்குகள் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் எங்கும் இரட்டை வாக்குகள் யாருக்கும் இருக்கக்கூடாது.
ஒரு இந்தியனாக பிறந்தவனுக்கு ஒரு வாக்கு. தமிழனாக பிறந்தவனுக்கு தமிழ்நாட்டில் பிறந்தவனுக்கு ஒரு வாக்குதான். இதுல எதுக்கு நீங்க பயப்படுறீங்க? ஏன் அலர்றீங்க? பொய் வாக்குகளை வைத்து போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்று வந்த திமுக இந்த தேர்தலோடு தன் கதை முடிய போகுது என்று தெரிந்தவுடன் பதறுகிறது. தன்னுடைய தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடுகிறது.”
“தி.மு.க-வை யாராலயும் அழிக்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளாரே?”
பதில்: “அ.தி.மு.க. உருவாகி 52 ஆண்டுகள் ஆகி விட்டது. இதில், 32 வருடம் ஆண்ட கட்சி. தி.மு.க. ஆரம்பித்து 75 வருடம் ஆகி விட்டது. ஆனால் 21 வருடம்தான் ஆண்டுள்ளது. அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற பெருமையை பெற்ற திராவிட கட்சி. அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர் அழிந்து போவார். ஒழிக்க நினைப்பவன் ஒழிந்து போவார்கள்” என்றார்.
