நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நோக்கில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கோவை சம்பவம்
“கோவையில் நடைபெற்ற நிகழ்வு மட்டும் அல்ல… இதுபோல் பல சம்பவங்கள், வன்புணர்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சகித்துக்கொள்ள முடியாதவை. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்த சமூகம் கேடு கெட்டதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதை.
கோவையில் அந்த இடத்தில் 24 மணி நேரமும் முறையற்ற மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல, இதைப் பார்க்கும் நாம் அனைவருமே வெட்கி தலை குனிய வேண்டிய நிலை. கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நிகழாது. இதேபோல் தான் பொள்ளாச்சியிலும் நடந்தது; அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் நடந்தது. ஆனால், நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை.

சுயமரியாதை
எடப்பாடி பழனிச்சாமியை நான் விமர்சிக்கவில்லை – உண்மையைச் சொன்னேன். அவர்கள் பேசுவதை ஒரு பொது மனிதனாக நீங்கள் பாருங்கள். துரோகத்தைப் பற்றி பேசுவது, சமூகநீதியைப் பற்றி பேசுவது, சுயமரியாதையைப் பற்றி பேசுவதற்கு இவர்கள் யாருக்காவது தகுதி உள்ளதா? மேலே பறந்து சென்ற விமானத்தை பார்த்து கும்பிட்டார்கள் – அது சுயமரியாதையா?
‘நான் தான் திராவிடத்தின் உண்மையான வாரிசு’ என்கிறார்களே… அப்போது எனக்கு கோபம் வராதா? உதயநிதியின் காலில் விழுவதையும் நான் கூறியுள்ளேன். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அருகதையில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா, தெலுங்கானாவில் எடுக்கப்படும் போது, தமிழக அரசு ஏன் எடுக்க மறுக்கிறது? ஏன் மத்திய அரசை எடுக்கச் சொல்லுகிறது? பாரதிய ஜனதா கட்சி தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்பொழுதும் பதட்டமாக வைத்திரு என ஹிட்லர் சொன்னது போலவே செய்கிறது.
சி.ஐ.ஏ. அமைப்பு
சி.ஐ.ஏ. அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் ஒன்றரை ஆண்டுகள் காலம் ஓடியது. தற்போது, ‘சிறப்பு வாக்காளர்’ எனக் கூறி, நான் கேட்கும் ஆவணங்களை வழங்கினால்தான் வாக்குரிமை என்கிறது; இல்லையெனில் வாக்குகளை நீக்கிவிடும்.
அஜித்குமார்
கூட்ட நெரிசலுக்கு காரணம் தனிமனிதன் அல்ல என அஜித்குமார் கூறியதில், நான் கூறியதைத்தான் அவரும் வலியுறுத்துகிறார். அஜித் கூறியது, இந்த முறையே தவறு என்கிறார். அங்கு சென்ற மக்களுக்கும் குற்றம் உண்டு. இத்தகைய கலாசாரமே தவறு என்பதைத் தான் அவர் சாடுகிறார்.

பிரசாரம்
அமெரிக்கா போல் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அரை மணிநேரம் ஒரு கட்சிக்கு என அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். கே.என்.நேரு விவகாரத்தில் அவர்கள் அமைச்சர் மேல் அவர்கள் எப்படி வழக்கு பதிவு செய்வார்கள்?.
இது கருத்தியல் போட்டி
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் கட்சிகளுக்கான போட்டி கிடையாது. இது, கருத்தியல் போட்டி தான். தேர்தலில் எந்த கட்சி பணம் கொடுக்காமல் நிற்கும்?. நான் வைத்துள்ள 36 லட்சம் ஓட்டு ஒரு பைசா பணம் கொடுக்காமல் பெற்ற ஓட்டு.
நான் தேர்தல் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள் தான் ஆகிறது. நீங்கள் 20 வருடம் எனக் கூறுகிறீர்கள். என் மீது உங்களுக்கு என் அவ்வளவு வெறுப்பு?.
நான் ஜெயிக்கவில்லை, அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?. நீங்க எனக்கு ஓட்டு போட்டீர்களா?. எனக்கு வாக்களித்துவிட்டு கேள்வி கேளுங்கள். நான் ஜெயிப்பேன். வைகோ-விற்கும், எனக்கும் என்ன தகராறு?. வாய்க்கால் தகராறா?. அண்ணன் தம்பி உறவு வேறு, இது வேறு” என்றார்.
