கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்டம் குறித்த நீண்ட வரலாறு, தற்போதைய நிலை மற்றும் அரசியல் முயற்சிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் தொலைந்த ரயில் சத்தம்
கிருஷ்ணகிரிக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் கோரிக்கை இன்று நேற்று உருவானதல்ல. இது ஆங்கிலேயர் காலத்திலேயே செயல்பாட்டில் இருந்த ஒரு ரயில் பாதையின் மறுகட்டமைப்புக்கான கோரிக்கை.
பழைய பாதை: இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், 1942 வரை, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற ரயில் பாதை செயல்பாட்டில் இருந்தது. அந்த ரயில் பாதை அட்டவணையில் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி மற்றும் மொரப்பூர் – ஓசூர் ஆகிய இரு அகலப் பாதை (Narrow Gauge) வழித்தடங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆங்கிலேயர் கால சான்றுகள்: இன்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அப்சரா திரையரங்கம் பின்புறம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே தண்ணீர் தொட்டி (சுண்ணாம்பு காரை மற்றும் கருங்கல்லால் ஆனது) நல்ல நிலையில் இருப்பது இதற்குச் சான்று. பர்கூரில் உள்ள பழைய ரயில் நிலையமும், பர்கூர் பாம்பாறு குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலமும் இதன் அடையாளங்கள்.

தண்டவாளம் அகற்றம்: இரண்டாம் உலக யுத்தம் 1942-இல் நடைபெற்றபோது, இந்த ரயில் பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கான இந்த ரயில் திட்டம் வெறும் கனவாகவே நீடிக்கிறது.
லாபமில்லை என்ற வாதமும், விடாத மக்கள் பிரதிநிதிகளும்
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கை வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே தொடர்ந்தது. இருப்பினும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர்.
பல்வேறு சர்வேக்கள்: 1970-க்குப் பிறகு மட்டும் சுமார் 11 முறை ரயில்வே அதிகாரிகளால் இதற்கான சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், ஒவ்வொரு முறையும் இந்தத் திட்டத்தின் அறிக்கைகளில் “குறைந்தபட்ச பலன் இல்லை” அல்லது “லாபகரமான குறிப்புகள் இல்லை” என்றே குறிப்பிடப்பட்டது. கடைசியாக 2018-இல் நடைபெற்ற சர்வேயின் அறிக்கையிலும் இதே முடிவுதான்.
திட்டம் உயிர்பெற்றது எப்படி?
கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், முயற்சியால் 2019-இல் இந்த ரயில் பாதை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கைக்காக (Detailed Project Report – DPR) ரயில்வே ரூ. 2.45 கோடியை ஒதுக்கியது.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பின கே. கோபிநாத் அவர்களும் இந்தக் கோரிக்கையைத் முன்னெடுத்து வருவதாக அவரது நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இது ‘அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பது போல, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் முயற்சி செய்ததன் பலன் தான். நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு, இத்திட்டத்தின் கோப்பைக் கண்டறிந்து, சிக்கல்களை நிவர்த்தி செய்து, அதிகாரிகளிடமும், மத்திய ரயில்வே அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
திட்ட மதிப்பீடும், பொருளாதார வளர்ச்சியும்
கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் ரீதியாக மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் காரணங்களே இத்திட்டம் அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.
தொழில்துறை வளர்ச்சி: கிருஷ்ணகிரியில் சுமார் 150 கனரகத் தொழிற்சாலைகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சுமார் 3,000-க்கும் மேல் உள்ளன. கிருஷ்ணகிரியில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரயில் பாதை அமைந்தால், சரக்குப் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திட்டச் சேமிப்பு: இந்த ரயில் பாதை முதலில் 109 கி.மீ-ஆக மதிப்பிடப்பட்டது. அதில் 7.75 கி.மீ தூரம் புகைப்பாதையாக உள்ளதால், அதைத் தவிர்த்து, தற்போது வழித்தடம் 98 கி.மீ தொலைவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் ரூ. 1,460 கோடி திட்ட மதிப்பீட்டில், ரயில்வேக்கு சுமார் ரூ. 500 கோடி சேமிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட உறுதி: தற்போது நிலவும் சாதகமான சூழலில், ரயில்வே துறையிடமே இந்தப் பாதையின் உரிமை நீடிப்பது ஒரு பலமாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்துப் பேசியபோது, நடப்பு பட்ஜெட்டிலேயே இதைச் செய்வதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் ஆதரவு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் புதிய ரயில் பாதை உள்ளிட்ட பல தசாப்த கால ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி மாண்புமிகு இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாடு 2025: தொழிலுக்கு உகந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் திறனை வெளிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 11, 2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் TN முதலீட்டாளர்கள் மாநாடு 2025 – ஓசூர் நடைபெற்றது.
முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு: இந்த மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இதன் மூலம், ரூ. 24,307 கோடி முதலீடுகளை ஈர்த்து, 49,353 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பெருமிதம்: ஜெர்மனி மற்றும் லண்டன் பயணங்களை முடித்து 3 நாட்களில் ஓசூரில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, “நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், ஓசூரை “திறமையும், புதுமையும் சந்திக்கும் நகரமாக” அவர் குறிப்பிட்டார்.

முக்கிய திட்டங்கள்: இந்த மாநாட்டில் ரூ. 250 கோடி முதலீட்டில் 3 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன; ரூ. 1,210 கோடி முதலீட்டில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், Ascent Circuits Private Ltd நிறுவனம் எல்காட் ஓசூர் IT பூங்காவில் ரூ. 1,100 கோடியில் PCB தயாரிக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது
மெட்ரோ ரயில் கனவும்…
ஜோலார்பேட்டை – ஓசூர் ரயில் பாதை தவிர, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி – ஒசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை (மெட்ரோ கார்பரேஷன் – பி.பி.பி (PPP-Public Private Partnership). முறையில்) பேரண்டப்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்காக ஒரு அதிகாரியை நியமித்து பணிகளைத் தொடர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு:
மொத்தத்தில், சுமார் 83 ஆண்டு கால கோரிக்கை, பல்வேறு சர்வேக்கள், லாபமில்லை என்ற நிராகரிப்புகள் என நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல், சுமார் ரூ. 1,460 கோடி மதிப்பீடு எனத் திட்டம் தற்போது மிகவும் சாதகமான சூழலில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அமையும் இந்த ரயில் சத்தம், விரைவில் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
